Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

சென்னை: போதையில் காரை ஓட்டிய மருத்துவர்; பழிவாங்க ரோந்து வாகனம் கடத்தல்! - போலீஸார் அதிர்ச்சி

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை சந்திப்பு பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீஸார் வழிமறித்து சோதனை நடத்தினர். காரை ஒட்டி வந்தவர், மதுபோதையில் இருந்தார். அதனால், அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். அதற்கு காரை ஓட்டி வந்தவர், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு அந்த நபர் அங்கிருந்து நடந்துச் சென்றார்.

போலீஸ்

Also Read: `அதிகாலை தூக்கம்... நொடியில் நிகழ்ந்த விபத்து... முடங்கிய வாழ்க்கை!' - முத்தமிழின் கண்ணீர் கதை

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், ஈகா சிக்னல் அருகே போலீஸாரின் ரோந்து வாகனத்தை நிறுத்தி விட்டு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், காவலர் சுந்தர் ஆகியோர் சாலையில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ரோந்து வாகனத்திலேயே சாவி இருந்தது. அதைப்பார்த்த மதுபோதையில் இருந்தவர், போலீஸாரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரோந்து வாகனத்தை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், ரோந்து வாகனத்தை விரட்டினர். ஆனால் ரோந்து வாகனம் வேகமாக சென்றதால் அதைப் பிடிக்க முடியவில்லை. இந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தில் போலீஸார் ஏறி, ரோந்து வாகனத்தை பின்தொடர்ந்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கெங்கி ரெட்டி சுரங்கப்பாதை வழியாக ரோந்து வாகனம் சென்றபோது அவ்வழியாக வந்த ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஆட்டோவில் பயணித்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதனால் ரோந்து வாகனம் அங்கு நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் ரோந்து வாகனத்தை மீட்டனர். பின்னர், அதை ஓட்டிச் சென்ற மதுபோதையிலிருந்தவரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீஸார் ஒப்படைத்தனர்.

விபத்து

போதை தெளிந்த பிறகு அவரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரின் பெயர் முத்து விக்னேஷ் (31) என்றும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுவதும் தெரியவந்தது. வார விடுமுறையான ஞாயிற்று கிழமை நண்பர்களுடன் மதுவிருந்தில் பங்கேற்றுவிட்டு வந்த மருத்துவர் முத்துவிக்னேஷை போலீஸார் பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரத்தில் போலீஸாரின் ரோந்து வாகனத்தைக் கடத்திச் சென்று விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து காவலர் சுந்தர், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் மருத்துவர் முத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மதுபோதையிலிருந்த மருத்துவரின் இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-doctor-in-drunken-drive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக