ஒட்டு மொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன் வயப்படுத்தி இருக்கிறார் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயது கல்லூரி மாணவியான இவர், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு மேயராகி நாட்டின் இளம் பெண் மேயர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
கேரளாவுக்கு முன்னோடியாக தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சேலம் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக கல்லூரி முடித்து ரிசல்ட்-டிற்காக காத்திருந்த 24 வயது இளம் பெண் ரேகா பிரியதர்ஷிணி போட்டியிட்டு மேயரானார். அப்போது இந்தியாவின் இளம் பெண் மேயர் என்ற பெருமையும் பெற்றார். இதுகுறித்து தற்போது ரேகா பிரியதர்ஷிணியை சந்தித்த பேசிய போது...
''முதலாவதாக தோழர் ஆர்யா ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் இளம் வயதில் மேயராகி இருப்பது எனக்கு சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவருக்கு பாராட்டுகள் குவிவதைப் போல எனக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சமத்துவம், சமூக நீதி, கல்வி, பெண் உரிமை என அனைத்திற்கும் இந்தியாவின் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்வது திராவிட முன்னேற்ற கழகம். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். 2006-ல் தி.மு.க தலைவர் கலைஞர், தளபதியார், வீரபாண்டியார் எனக்கு வாய்ப்பு வழங்கியதால் நான் 24 வயதில் சேலம் மாநகராட்சி மேயர் ஆனேன்.
இந்தியாவின் இளம் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றேன். அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லாததால் அவ்வளவாக அறியப்படவில்லை. தற்போது ஆர்யா ராஜேந்திரனுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவருக்கு முன்பாகவே இந்தியாவின் இளம் பெண் மேயராக நான் இருந்திருக்கிறேன். இதற்கு தி.மு.க., முன்னோடியாக இருந்திருக்கிறது. அதனால் எனக்கும், எங்கள் கட்சிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இளம் வயதில் மேயராக பொறுப்பேற்பதில் பல ப்ளஸூம், சில மைனஸூம் இருக்கும். ப்ளஸாக பார்த்தால் ஓடோடி சென்று மக்களுக்கு உற்சாகமாக சேவை செய்ய முடியும். எந்த பணிகளையும், துரித்தமாகவும், துல்லியமாகவும் செய்ய முடியும். தவறுகளை உடனுக்குடன் தடுத்திட முடியும். மைனஸாக பார்த்தால் அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் திட்டங்கள் குறித்து விவாதிக்கும் போது அவர்களுக்கு ஈகோ வருகிறது. அதை சாதுர்யமாக கையாண்டு பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும் போது இளம் தலைமுறைக்கு நாம் ரோல் மாடலாக உயர முடியும்'' என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-former-young-mayor-rekha-priyadarshini-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக