Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

இந்தியாவில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா!

பிரிட்டனில் வேகமாகப் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் 'உருமாறிய கொரோனா' வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய ஆறு பேரின் சளி மாதிரிகளை சோதனை செய்ததில், அவர்களுக்கு இந்தப் புது வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் பல நாடுகளும், இந்த வைரஸ் தங்கள் நாட்டுக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு வரும் டிசம்பர் 31 வரை இந்தியா தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்
எனினும் கடந்த நவம்பர் 25 நள்ளிரவு முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 33 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த 114 பேரின் சளி மாதிரிகள் அனைத்தும் இந்தியா முழுக்க உள்ள உயர் பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களைத் தொற்றியுள்ள கொரோனா வைரஸ் புதுவகையானதா என்பதைக் கண்டறிவதற்காக மறுபரிசோதனை நடைபெற்றது.

கொரோனா வைரஸ்

இந்த சோதனையில், 'இவர்களில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளது' என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இவர்கள் ஆறு பேரும் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு, இப்போது பரிசோதனை நடைபெறுகிறது. இந்த ஆறு பேருடன் விமானங்களில் வந்தவர்களைத் தேடிக் கண்டறியும் பணியும் பரபரப்பாக நடைபெறுகிறது. இந்த ஆறு பேரின் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. "நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. புதுவகை வைரஸ் இந்தியாவில் பரவுவது கட்டுப்படுத்தப்படும்" என சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பல நாடுகள் எடுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மீறி, இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இதுவரை டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருவது தடை செய்யப்படவில்லை.


source https://www.vikatan.com/news/healthy/in-india-6-persons-infected-with-mutated-coronavirus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக