Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது!' - ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தனது உடல் நலம் குறித்த காரணங்களால் தன்னால் அரசியலில் பங்கேற்க முடியாத தன் நிலையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்ட சில காரணங்களையும், அதில் இருக்கும் மருத்துவரீதியான விவரங்கள் என்ன என்பதையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நடிகர் ரஜினிகாந்த், தனக்கு சிறுநீரக அழற்சி நோய் (Medical Renal Disease) எனும் நோய்த்தன்மை ஏற்பட்டு, அதற்கான சிகிச்சையாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருப்பதைத் தெரிவித்திருக்கிறார். மேலும், தனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டிருப்பதால் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை தான் உட்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்

சிறுநீரக அழற்சி நோயின் இறுதிக் கட்டத்தை `தீவிர சிறுநீரக அழற்சி' என்று குறிப்பிடுவோம். இந்நிலைக்கு சென்றுவிட்ட ஒருவரது இரு சிறுநீரகங்களும், முழுமையாக மீண்டும் மறு சீரமைப்போ, புணரமைப்போ செய்ய இயலாத அளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள ரத்தத்தை வடிகட்டும் சிறப்பு வாய்ந்த செல்களான நெஃப்ரான்கள் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். இந்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு `டயாலிசிஸ்' எனும் ரத்தத்தை செயற்கையாக சுத்திகரிக்கும் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். வாரத்துக்கு இருமுறையோ, மும்முறையோ டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

அதே நேரம், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கும் பாதிக்கப்பட்டவர் பரிந்துரைக்கப்படுவார். மாற்று சிறுநீரகத்தை இரு முறைகளில் பெற இயலும்.

முதல் வகை - இறந்தவரின் உடலில் இருந்து பெறுவது.

இரண்டாவது வகை - உயிருடன் இருக்கும் உறவினர்களிடமிருந்தோ, ஒத்த ரத்த அமைப்பு உள்ளவர்களிடமிருந்தோ ஒரு சிறுநீரகம் தானமாகப் பெறப்படும்.

ரஜினிகாந்த்

இறந்தவர்களிடம் இருந்து பெறும் மாற்று சிறுநீரகத்துக்கு, அந்நோயாளி அரசுப் பதிவேட்டில் பெயரைப் பதிவுசெய்துவிட்டு, தனக்கான முறை வரும்வரை காத்திருப்பார்.

அதே நேரம் உயிருள்ளவரிடம் இருந்து பெறுவதாயின், அதற்குரிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவார்.

இவ்வாறு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட ஒருவர், சாதாரண நாள்களிலேயேகூட பொது இடங்களில் முகக்கவசம் இன்றி கலப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மாற்று உறுப்புடன் இயங்கும் ஒருவருக்கு, அவரது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மட்டுப்படுத்தும் பல மருந்துகள் தினமும் வழங்கப்படும். இவற்றை `எதிர்ப்பு சக்தி குறைக்கும் / மட்டுப்படுத்தும் மருந்துகள் (Immunosuppressants)' என்று அழைக்கிறோம்.

இத்தகைய மருந்துகள் எதற்காக மாற்று உறுப்பு பெற்றவருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன?

ஒருவரது உடலில் இருந்து மற்றவருடைய உடலுக்கு ஒரு உறுப்பு மாற்றப்படும்போது, அந்த உறுப்பை பெறுபவருடைய உடல் மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலம், இந்தப் புதிய உறுப்பை ஏதோ தனது உடலை ஊறுசெய்ய வந்த அந்நியப்பொருள் என்றே பார்க்கும். இதனால், அந்த அந்நியப்பொருளை அழிக்க தன்னால் இயன்ற அத்தனை பிரயத்தனங்களையும் செய்யும்.

இதன் விளைவாக, புதிதாகப் பொருத்தப்பட்ட மாற்று உறுப்பை உடல் நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதை `Graft Rejection' என்று கூறுகிறோம். இத்தகைய நிலை மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட சில நாள்களிலிருந்து சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கழித்தும் ஏற்படலாம்.

இதன் காரணமாகவே மாற்று உறுப்பு தானமாகப் பெற்றவர்கள், தினமும் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மாத்திரை, மருந்துகளை வாழ்நாள் முழுவதும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரஜினிகாந்த்

இம்யூனோசப்ரசன்ட்ஸ் மருந்துகளை ஏன் நடிகர் ரஜினிகாந்த் உட்கொள்கிறார் என்பதற்கான காரணம் தற்போது அனைவருக்கும் விளங்கியிருக்கும்.

எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் இத்தகைய மருந்துகளை தினமும் எடுத்து வரும் ஒருவருக்கு, நோய்த் தொற்றும் அபாயம் என்பது மிக அதிகமாக இருக்கும். பொதுவாக, நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் ஒருவருக்கு சுவாசப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பைவிட, இம்யூனோசப்ரசன்ட்ஸ் எடுப்பவர்களுக்கு பல மடங்கு வாய்ப்பு அதிகம்.

இதனால் சிறுநீரகம் போன்ற உறுப்புகளைத் தானமாகப் பெற்றவர்கள், கூட்டமான மற்றும் மக்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவே அறிவுறுத்தப்படுவார்கள்.

இந்தக் கொரோனா காலத்தை விடுங்கள். இது அல்லாமலும் பொதுவாகவே வெளி இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவதற்கு அவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள். இதற்கான காரணம்... சாதாரண சுவாசப்பாதை தொற்றுகூட உயிர் பறிக்கும் நிமோனியாவாக மாறும் நிலை இவர்களுக்கு ஏற்படும் என்பதே.

அதிலும் வீரியம்மிக்க கொரோனா பெருந்தொற்று பரவும் காலத்தில், மாற்று உறுப்பு தானம் பெற்றவர்கள் அதீத அக்கறையுடன் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறோம்.

ரஜினிகாந்த்

எதிர்ப்பு சக்தி குறைக்கும் மாத்திரைகளை எடுப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதில் தொடங்கி பல சிரமங்கள் ஏற்படும். மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வேளையில் மாற்று உறுப்பு செயலிழக்கும் வாய்ப்பும் உண்டு.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே நடிகர் ரஜினிகாந்த்துக்கு அவரின் மருத்துவர்கள் அறிவுரைகளை அளித்துள்ளனர். அவை முற்றிலும் ஏற்புடையவையே.

மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நடைமுறைக்கு வந்தாலும், எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் எடுத்து வரும் நபர் அதை போட்டுக்கொண்டாலும்கூட, கட்டாயம் முகக்கவசம் அணிவது மற்றும் தனி மனித இடைவெளியைப் பேணுவதை உறுதிசெய்து கொள்வதே சாலச்சிறந்தது.

மேற்சொன்ன மருத்துவக் காரணங்களை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் விலை மதிப்பற்ற தனது தேக ஆரோக்கியத்தைப் பேணும் பொருட்டு மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்பட்டிருப்பது அவரைப் பொறுத்தமட்டில் சிறந்த முடிவே.

ரஜினிகாந்த்

Also Read: `கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி

அவரைப் பின்பற்றி, சிறுநீரக மற்றும் ஏனைய உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோய்க்கு இம்யூனோசப்ரசன்ட்ஸ் எடுத்து வருபவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என இவர்கள் எல்லோரும் தங்களை இந்தப் பெருந்தொற்று காலத்தில் பாதுகாத்துக்கொள்ள வேண்டுகிறேன்.



source https://www.vikatan.com/health/healthy/what-is-immunosuppressant-drugs-which-mentioned-by-rajinikanth-in-his-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக