Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

ரூ.16 கோடி சாலை டெண்டர்; இழுத்தடித்த ஆணையம்! -ஆர்.டி.ஐ-யால் சிக்கிய சென்னை மாநகராட்சி

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் தர மறுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது தமிழ்நாடு தகவல் ஆணையம். `ஓர் ஆண்டு கழித்தே இப்படியோர் உத்தரவைப் பெற முடிந்தது. இந்த விவகாரத்தில் தகவல் ஆணையமும் கூட்டுச் சேர்ந்து தாமதம் செய்தது' என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்.

சாலைப் பணி

சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறையின் சார்பில், 2018-ம் ஆண்டு சாலைகள் அமைப்பது தொடர்பாக ரூ.16 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. இதில், டெண்டரில் குறிப்பிட்ட தொகையைவிடவும் ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் விலை கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி பேருந்து சாலைகள்துறையின் செயற்பொறியாளருக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகளைக் கேட்டிருந்தார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம். கடந்த 2018-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஆர்.டி.ஐ கடிதத்தில், `என்னென்ன சாலைகள் போடப்படுகின்றன, பணிகள் நடக்கும் சாலையின் பெயர்கள் என்னென்ன, சாலை போடுவதற்காக ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன தொகை இறுதி செய்யப்பட்டது?' என்பவை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டிருந்தார்.

Also Read: `சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஆடியோ விவகாரம்!’ - எஃப்.ஐ.ஆரை ரத்து செய்த நீதிமன்றம்

ஆனால், மாநகராட்சித் தரப்பிலிருந்து உரிய பதில் வராததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கில்தான் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும், செயற்பொறியாளரின் சம்பளத்திலிருந்தே தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தகவல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமிடம் பேசினோம். `` சாலை போடுவதில் ஒப்பந்ததாரர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை அளித்திருந்தது. இந்த டெண்டரை அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமான நிறுவனம்தான் எடுத்திருந்தது. இதுதொடர்பான தகவல்களைக் கேட்டபோது, மாநகராட்சி அதிகாரிகள் இழுத்தடித்தனர். 2019 நவம்பர் மாதம் தகவல் ஆணையத்தின் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தபோது, `நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது' எனக் கூறி இழுத்தடித்தனர். ஆனால், `மனுதாரர் கோரும் தகவல்களைக் கொடுத்தே ஆக வேண்டும்' என ஆணையம் உத்தரவிட்டது.

`அறப்போர்' ஜெயராம்

ஆனால், எந்த பதிலும் வராததால், 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையிலும் தகவல் தர மறுத்தனர். இது தொடர்பான விவரங்கள் வெளியில் வந்தால், முறைகேடு நடந்திருப்பது உறுதியாகவிடும் என்பதால் அதிகாரிகள் பயந்தனர். ஒருகட்டத்தில், ` ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை அதிகாரி ஒருவரிடம் கொடுத்தனுப்பினோம். அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது' எனக் கதைவிட்டனர். இறுதியில் 2019 டிசம்பர் மாதம் 10-ம் தேதி தகவல் ஆணையத்திலிருந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில், `உங்கள் மீது ஏன் 25,000 ரூபாய் அபராதம் போடக் கூடாது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?' எனக் கேட்டிருந்தனர். இதற்கும் மாநகராட்சி தரப்பிலிருந்து பதில் வரவில்லை. இது குறித்து தகவல் ஆணைய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஜனவரி மாதம் வேறு ஒரு வழக்குக்காகத் தகவல் ஆணையம் போனபோதும் கேட்டேன். அப்போது அவர்கள், `இது எங்களுக்கும் மாநகராட்சிக்கும் உள்ள விவகாரம்' என்றனர். `நான்தான் புகாரே கொடுத்தேன். இன்னும் உத்தரவை வழங்காமல் இருந்தால் எப்படி?' எனச் சண்டை போட்டேன்.

Also Read: கொரோனா அச்சம்: முதியோர் இல்லங்களை சென்னை மாநகராட்சி எப்படி கையாள்கிறது?

அதற்கு அவர்கள், `நாங்கள் உத்தரவு போட்டுவிட்டோம், உங்களுக்குத் தகவல் அனுப்புகிறோம்' என்றார்கள். ஆனால், கொடுக்கவில்லை. மீண்டும் மார்ச் மாதம் கேட்டபோது, `நான் உங்களுக்கு அனுப்பிவிட்டேன். வந்து சேரவில்லையா?' என்றனர். இதனால் கோபத்துடன் தகவல் ஆணையத்துக்கே ஒரு ஆர்.டி.ஐ அனுப்பினேன். முதல் முறையீடு முடிந்த பிறகு, `இது எங்களுக்கும் மாநகராட்சிக்கும் உள்ள விவகாரம்' என்றனர். இறுதியில், இரண்டாவது முறையீட்டை தகவல் ஆணையர் மீதே போட்டேன். இதனால், மேலும் சிக்கல் அதிகரிப்பதை உணர்ந்த அதிகாரிகள், ஆகஸ்ட் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் மீது 25,000 ரூபாய் அபராதமும் மூன்று மாதங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், கடந்த ஆகஸ்ட் மாதம் போட்ட உத்தரவையே டிசம்பர் மாதம்தான் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்" என்றார் கொதிப்புடன்.

தகவல் ஆணையத்தின் உத்தரவு

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி பேருந்து சாலைகள்துறை கண்காணிப்புப் பொறியாளரைத் தொடர்புகொண்டோம். ``சார் மீட்டிங்கில் இருக்கிறார். பிறகு பேசுவார்" எனத் தகவல் கிடைத்தது.



source https://www.vikatan.com/government-and-politics/corruption/information-commission-imposed-fine-of-rs25000-to-chennai-corporation-officials

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக