Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

`பண்பாட்டு வேர்களைத் தேடிய ஆய்வாளர் மறைந்தார்!' - தொ.பரமசிவன் வாழ்க்கை குறிப்பு

பண்பாடு, மானுடவியல், மொழியியல், நாட்டார் வழக்காறு, வரலாறு என பன்முகத் தலைப்புகளில் ஆழமும் அழுத்தமுமாக தமிழில் எழுதியும் பேசியும் வந்தவர், பேராசிரியர். தொ.பரமசிவன். திராவிட இயக்க சிந்தனையாளர்களில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் தொ.பரமசிவன் 24-ம் தேதி பாளையங்கோட்டையில் மரணம் அடைந்தார்.

தொ.பரமசிவன் உடலுக்கு அஞ்சலி

கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலமாக மட்டுமே வரலாற்றுத் தொன்மங்கள் பற்றிப் பேசப்பட்டு வந்த சூழலை மாற்றி, அடித்தட்டு மக்களின் வாழ்வியல், அவர்களின் பழக்க வழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல் கதையாடல்கள் மூலமாகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்தவர் என அறிஞர்களால் புகழப்படுகிறார்.

நாட்டார் வழக்காற்றியல் ஆர்வம்!

மறைந்த தொ.பரமசிவன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தெற்கு கடைவீதியில் 1950-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்தார்.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் மூட்டா ஆசிரியர் சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முன்னோடியான நா.வானமாமலை, தமிழறிஞர் சி.சு.மணி ஆகியோரின் கருத்துகளால் கவரப்பட்டு தமிழ் இலக்கியச் சூழலுக்குள் வந்தார். பின்னர், தனது முனைவர் பட்டத்துக்காக அழகர் கோயில் குறித்து ஆய்வு செய்தார்.

Also Read: "தமிழ்ச்சமூகத்துக்கான அறிவுப்பொக்கிஷங்களை வழங்கியவர்!" - தொ.பரமசிவன் நினைவுகள்

தான் ஆசிரியர்களாக ஏற்றுக் கொண்ட நா.வானமாமலை, சி.சு.மணி ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி ஆய்வை மேற்கொண்டார். அதனால் அழகர் கோயிலைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களின் பண்பாட்டு அசைவுகளுடன் கூடிய ஆய்வை சமர்ப்பித்து தமிழக வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தனது ஆழமான கருத்துகளால் மாணவர்களுக்குத் தமிழின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினார். அவரது மாணவராக இருந்த சீமான் கூறுகையில், "அவர் எனக்குத் தமிழ் ஆசிரியராகக் கிடைத்த கொடையால் மட்டுமே இப்போது வரையிலும் எனக்குத் தமிழ் மீது ஆர்வம் குறையாமல் இருக்கிறது" என்கிறார்.

தொ.ப உடலுக்கு அஞ்சலி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஏராளமான மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியிருக்கிறார். மடை திறந்த வெள்ளம் போல புதிய சிந்தனையுடன் பேசும் அவரால் ஏராளமானோர் தமிழ் ஆர்வம் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள்.

கடவுள் இருந்தால் நல்லது!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மையத்தின் பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அவர் எழுதிய, ‘அறியப்படாத தமிழகம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ உள்ளிட்ட 14-க்கும் அதிகமான நூல்கள் அவரை தமிழர்களிடம் அறிமுகப்படுத்தின.

கவலையில் உறவினர்கள்

பெரியாரிய சிந்தனையின் பால் கவரப்பட்ட அவர் நாட்டார் தெய்வங்கள் குறித்து புதிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறார். ’கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இருந்தால் நல்லது என்று சொல்கிறேன்’ என்பது அவருடைய பிரபலமான வாசகம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொ.பரமசிவன் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நாட்டார் தெய்வங்கள் பண்பாட்டு ஆய்வுக்காக சுமார் ஒரு லட்சம் கி.மீ தூரத்துக்கும் அதிகமான தூரத்துக்கு கால்நடையாகவே பயணம் மேற்கொண்ட அவருக்கு நீரிழிவு காரணமாக நடக்க இயலாத சூழல் உருவானதால் மனதளவில் மிகவும் சோர்ந்திருந்தார்.

தொ.ப-வின் பாளையங்கோட்டை இல்லம்

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக 24-ம் தேதி பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் இன்று 25-ம் தேதி நடக்கிறது. எழுத்தாளர், சிந்தனையாளர், பண்பாட்டு ஆய்வாளரான தொ.ப-வின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெரியாரிய சிந்தனையாளராகத் திகழ்ந்த தொ.பரமசிவன், பெரியார் நினைவு நாளிலேயே மறைந்தார். அவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும் மாசானமணி என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.



source https://www.vikatan.com/arts/literature/eminent-researcher-writer-and-anthropologist-tho-paramasivan-life-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக