Ad

புதன், 30 டிசம்பர், 2020

ரஜினியின் முடிவு: வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்குச் சாதகம்?#TNElection2021

2021-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியைத் தொடங்கி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும், வர மாட்டார் என்றும் வாத, பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

ரஜினி

இந்தநிலையில், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று தற்போது ரஜினி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரஜினியின் முடிவால் அரசியல்ரீதியில் யாருக்குச் சாதகம், யாருக்கு பாதகம் என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராமிடம் பேசினோம். ``ரஜினியின் முடிவை இயல்பான ஒரு முடிவாகத்தான் நான் பார்க்கிறேன். ரஜினியின் அரசியல் சிந்தனை மேல்தட்டு சிந்தனையாக இருக்கிறது. அதாவது, தேர்தலில் நின்றால் ஜெயிக்க வேண்டும் என்றும், உடனடியாக முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார். அதற்கு வாய்ப்பு இல்லையென்றால், அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறார்.

திரைத்துறையில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படியே அரசியலிலும் இருக்கிறது என்று அவர் நினைக்கிறார். ஆனால், அரசியலில் அது சாத்தியமில்லை என்பது போன்ற உணர்வு வரும்போது களத்தில் இறங்குவதற்கு அவருக்குத் தயக்கம் ஏற்படுகிறது. அதனால், அவர் பின்வாங்குகிறார். மேலும், உடல்நலம் குறித்த பிரச்னையால் அவர் பின்வாங்குவது என்பது இயல்பான ஒன்று. அது நியாயமானதும்கூட.

ஜென்ராம்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடர்பான கருத்துகளை அவ்வப்போது சொல்லிவந்ததெல்லாம், அவர் தன்னை லைம்லைட்டில் இருத்திக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான். மேலும், சந்தையில் தன் மதிப்பு என்ன என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கான யுக்தியாகவும் அதை அவர் பயன்படுத்தினார் என்றும் நான் பார்க்கிறேன்.

தற்போது அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருப்பது, ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த பா.ஜ.க மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.

எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க-வினர்

எல்லாக் கட்சிகளிலும் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி அரசியல்ரீதியாக ஒரு முடிவு எடுத்தால், அவர்கள் அவரை ஆதரிப்பார்கள் என்ற பொதுநம்பிக்கையிலிருந்து ஒரு சிறிய அச்சுறுத்தல் தி.மு.க-வுக்கு இருந்திருக்கலாம். ரஜினியின் இந்த முடிவால் இனி புதிய குழப்பங்கள் எதுவும் இல்லை என்கிற வகையில், அது தி.மு.க-வுக்கு ஆறுதலாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் ஒருவேளை தி.மு.க எளிதாக வெற்றிபெற்றிருக்கும். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் அப்படியே உறுதியாக இருக்கக்கூடிய சூழலில், அவர் அரசியலுக்கு வந்திருந்தால் அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்திருக்கும்” என்றார் ஜென்ராம்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ- செல்வப்பெருந்தகையிடம் பேசினோம்.

``ரஜினி அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆரம்பத்திலிருந்து நான் சொல்லிவருகிறேன். ஆரம்பத்திலிருந்து ரஜினி மிகவும் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரோ கடும் நிர்பந்தம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிவித்தார். ஆனால், எல்லா நிர்பந்தங்களையும் மீறி நிலைமை கைமீறிப் போனதால், அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

செல்வப்பெருந்தகை

அரசியலுக்கு அவர் வந்திருந்தாலும் தி.மு.க-வுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், சினிமா ரசிகர்களைச் சார்ந்த கட்சி வாக்குகளைத்தான் அவர் பெற்றிருப்பார். அப்படிப் பார்த்தால், அ.தி.மு.க-வில்தான் சினிமா ரசிகர்கள் அதிகம். பீகார் சட்டமன்றத் தேர்தலில் சிராக் பாஸ்வான் போன்றவர்களைவைத்து ஒரு குழப்பத்தை பா.ஜ.க ஏற்படுத்தியது. அதைப்போல, ரஜினியைவைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று பா.ஜ.க நினைத்தது. அதன் மூலம் வாக்குகளைப் பிரிக்கலாம் என்று பார்த்தார்கள்.

தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 100 தொகுதிகள் அ.தி.மு.க-வுக்கும், 134 தொகுதிகள் பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்தெடுப்பது என்கிற திட்டம் இருந்திருக்கிறது. ரஜினியை முதல்வராக முன்னிறுத்துவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி. அதுபோக, கூட்டணி மந்திரி சபை அமைப்பது என்றும், அதற்கு அ.தி.மு.க ஒப்புக்கொள்ளவில்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவது என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதை நானாகச் சொல்லவில்லை. இவையெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட விஷயங்கள். அதனால்தான், முதல்வர் வேட்பாளரை அகில இந்தியத் தலைமை அறிவிக்கும் என பா.ஜ.க-வினர் கூறிவந்தனர். ஆனால், இப்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி உறுதியாக அறிவித்துவிட்டார். இதனால், பா.ஜ.க-வுக்குதான் பாதிப்பு” என்றார் செல்வப்பெருந்தகை.

ஸ்டாலின்

ரஜினியின் அறிவிப்பை தி.மு.க எப்படிப் பார்க்கிறது என்று தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, ``இது பற்றிக் கருத்து எதுவும் சொல்ல முடியாது'' என்று கூறிவிட்டார். சரி, பா.ஜ.க என்ன நினைக்கிறது என்று பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் ஒருவரைத் தொடர்புகொண்டபோது, ``ரஜினியின் முடிவு பற்றி கருத்து சொல்ல வேண்டாம்'' என்று கட்சி மேலிடம் கூறிவிட்டதாகச் சொன்னார்.

Also Read: ''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான் பாய்வது ஏன்?

ஆனால், ரஜினியை அரசியலுக்கு கொண்டுவருவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் என்று சொல்லப்படும் பத்திரிகையாளரும், தணிக்கையாளருமான எஸ்.குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. .

எஸ்.குருமூர்த்தி ட்விட்டர் பதிவு

அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதைச் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார். அந்த வரியைக் குறிப்பிட்டிருக்கும் எஸ்.குருமூர்த்தி, 1996-ல் ஏற்படுத்தியதைப் போன்ற தாக்கத்தை ரஜினி ஏற்படுத்துவார் என்று கருதுவதாகக் கூறியிருக்கிறார். அதாவது, 1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, ரஜினி கொடுத்த `வாய்ஸ்’ தான் அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. அதுபோல, இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்று மதிப்பிடுகிறார் எஸ்.குருமூர்த்தி. வாய்ஸ் கொடுத்தாலும் கொடுக்கலாம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajinis-decision-benefit-to-which-party-in-upcoming-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக