தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அயன்பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அய்யப்பனை, ஜாமீனில் எடுக்க அவரது உறவினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தன் மகளைப்போல பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த அய்யப்பனுக்கு ஜாமீன் கொடுக்ககூடாது எனவும், அவர் வெளியே வந்தால், தன் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக தன் மகள், மகன்களை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் அந்த 14 வயதுச் சிறுமியின் தாய்.
சிறுமியைத் இடுப்பில் தூக்கிக்கொண்டு நடந்துவந்த அவரது தாய், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தின் கீழ் வந்ததும் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சிறுமியின் மீதும், தன் தலைவழியாகவும் ஊற்றினார். உடனே, பதறிப்போன போலீஸார், அவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர்.
சிறுமியின் தாயிடம் பேசினோம்.``எனக்கு மூணு பிள்ளைக. மூத்த மகளுக்கு 14 வயசுதான் ஆகுது. அவள் ஒரு மாற்றுத்திறனாளி. மத்த ரெண்டும் ஆம்பள பிள்ளைக. என்னோட கணவர் எங்க ஊர்ல இருக்க டூவீலர் பஞ்சர்கடையில தினக்கூலியா வேலை செஞ்சுட்டு இருக்காரு. நான் தோட்டங்கள்ல களை எடுக்குற வேலை பார்க்குறேன். தினமும் நானும் கணவரும் வேலைக்குப் போயிட்டு சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவோம். இப்போ பள்ளிக்கூடம் லீவுங்கிறதுனால பிள்ளைகள் வீட்டுலதான் இருக்காங்க.
இந்த மாசம் 14-ம் தேதி எங்க ஊர்ல உள்ள அய்யப்பன், வீட்டுல தனியா இருந்த என் மகளை பாலியல் வன்கொடுமை செஞ்சிருக்கான். என்னோட இளைய மகன் தெருவுல விளையாடிட்டு வீட்டுக்கு எதேச்சையா வந்தப்போ சத்தம் போட்டான். உடனே, அய்யப்பன் வீட்டைவிட்டு ஓடிட்டான். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ என் மகளும், மகனும் அழுதுக்கிட்டே நடந்ததைச் சொன்னங்க. ஊருக்குள்ள உள்ள சின்னப்பிள்ளைகளை நாசம் செய்யுறதை வேலையா வைச்சிருக்கான் அய்யப்பன்.
Also Read: புதுக்கோட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை! - மகிளா நீதிமன்றம்
விளாத்திகுளம் மகளிர் ஸ்டேஷன்ல 16-ம் தேதி கம்ப்ளைண்ட் கொடுத்தேன். இதுசம்மந்தமா விசாரிச்சு, அந்த அய்யப்பனை அரஸ்ட் பண்ணினாங்க. ஆனா, அய்யப்பனோட தம்பி ரமேஷ் போலீஸ் கான்ஸ்டபிளா இருக்கார். தப்பை மறைச்சு சாதாரண கேஸா மாத்தி அய்யப்பனை பெயில்ல எடுக்க முயற்சி செய்யுறாங்க. எங்க ஊரு ஊராட்சிமன்ற துணைத் தலைவர் விஜியும், அய்யப்பனை வெளியில எடுக்க சப்போர்ட் பண்ணுறாங்க.
என் மகளைப்போல பல சிறுமிகளை சீரழிச்சவன் அந்த அய்யப்பன். அவன் வெளிய வந்தா சும்மா இல்லாம இதே வேலையை திரும்பத் திரும்ப்ப செய்யுவான். அதுமட்டுமில்லாம அவன் மேல கம்ப்ளைண்ட் கொடுத்ததுக்காக என்னையும், என் குடும்பத்தையும் அவன் சும்மா விட மாட்டான். அவனால எங்களுக்கும், என் குடும்பத்துக்கும் ஆபத்து இருக்கு. அவனுக்கு உரிய தண்டனை கிடைக்கணும். மாற்றுத்திறனாளியான என் மகளுக்கு நீதி கிடைக்கணும்” என்றார் கண்ணீருடன்.
source https://www.vikatan.com/social-affairs/crime/woman-attempted-suicide-in-thoothukudi-collector-office-with-her-daughter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக