Ad

சனி, 30 செப்டம்பர், 2023

துலாம்: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023... விலகப்போகும் கேது வாழ்வை மாற்றுவாரா? கே.பி. வித்யாதரன்!

ராசிச்சக்கரத்தில் 7 - வது ராசி துலாம். சித்திரை 3, 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 7 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

வரும் 8.10.23 அன்று பிற்பகல் 3மணி 36 நிமிடத்திற்கு ராகு பகவான் அங்கிருந்து நகர்ந்து 6 -ம் இடமான மீன ராசிக்குள் சஞ்சாரம் செய்யப்போகிறார். அப்போது இதுவரை துலாம் ராசியில் சஞ்சரித்துவந்த கேது பகவான் கன்னி ராசிக்குள்ளே அடி எடுத்துவைக்கிறார். இந்த கிரக மாற்றம் 26.4.25 வரை நீடிக்க இருக்கிறது. இந்த பெயர்ச்சி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க இருக்கிறது என்பதைக் காண்போம்.

ராகு-கேது பெயர்ச்சி

ராகு பகவான் தரும் பலன்கள்:

இதுவரை 7 - ம் வீட்டில் படாத பாடு படுத்திக்கொண்டிருந்த ராகு பகவான் தற்போது ஆறாம் வீட்டுக்கு வருகிறார். இனிக் குடும்பத்தினர் பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடனை அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையாக பாசத்தைப் புரிந்து கொள்வார்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வரவேண்டிய பணமெல்லாம் இனி கைக்கு வந்து சேரும்.

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை சஞ்சாரம் செய்வதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புகள் விலகும். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

ராகுபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை சஞ்சாரம் செய்வதால் தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவும் உண்டு. பிள்ளைகளின் கூடாப்பழக்கத்தை சரி செய்வீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

ராகுபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.2025 முதல் 26.4.2025 வரை ராகுபகவான் செல்வதால் அனைத்திலும் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்

கேதுவின் பலன்கள்:

இதுவரை ராசியில் சஞ்சாரம் செய்த கேதுபகவான் ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் அடியெடுத்துவைப்பது நற்பலன்களைத் தரும். சோர்வும் மன வருத்தமும் நீங்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை சஞ்சாரம் செய்வதால் இந்தக் காலகட்டத்தில் சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்னைகள் வந்து நீங்கும். சகோதரங்களிடையே விவாதங்கள் வரக்கூடும். வீடு, மனை வாங்குவது விற்பதில் கவனம் தேவை.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

கேதுபகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை சஞ்சாரம் செய்கிறார். எனவே இந்தக் காலகட்டத்தில் சவாலான காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மனம் லேசாகும். பிறர் உங்களை விமர்சனம் செய்வார்கள். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாதீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. பணப்புழக்கம் சுமாராக இருக்கும்.

1.5.2024 முதல் கேதுவை குரு தன் 5 ம் பார்வையால் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமாவார்கள். அவர்களால் சில அனுகூலங்கள் உண்டாகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு அடிக்கடிச் செல்வீர்கள். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

வியாபாரம் : லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பணியாளர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் உண்டு. வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும்.

உத்தியோகம் : அலுவலகத்தில் இருந்துவந்த சச்சரவான நிலை மாறும். அதிகாரிகள் உங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பார்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள். கணினித் துறை சார்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாள்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவியுயர்வும் இனி தேடி வரும்.

கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். பட்டி தொட்டியெங்கும் புகழ் பரவும்.

திருநாகேஸ்வரம்

மொத்தத்தில் இந்த ராகு-கேது மாற்றம் சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதோடு வாழ்வில் முன்னேற்றம் தருவதாக அமையும்.

பரிகாரம் : கும்பகோணம் நகர மையத்தில் அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகேஸ்வரரையும், ஸ்ரீபெரியநாயகியையும் தரிசியுங்கள். கால் இழந்தவர்க்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.



source https://www.vikatan.com/spiritual/astrology/rahu-ketu-peyarchi-palan-2023-for-thulam-rasi

பஞ்சாங்கக் குறிப்புகள் - அக்டோபர் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-october-2nd-to-8th

பொன்முடி சர்ச்சை: `அவர் ஒரு வாயில்லா பூச்சி’ - திமுக நிர்வாகிக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் அணி நிர்வாகி!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 1-ம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாநில ஆதிதிராவிடர் நல அணியும், சிறுபான்மையினர் அணியும் இணைந்து, நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளன. இதற்கான ஆலோசனைகளைப் பெற ஆதி திராவிடர் நலக் குழு இணை செயலாளர்கள் வி.பி ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பியதாக புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமுகவலைதளங்களில் பரவி, அமைச்சரின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இதனை மாமன்னன் படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

இந்தநிலையில் விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.பி.ராஜனுக்கு ஆதரவாகவும், அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் விருதுநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணியை சேர்ந்த அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

ஓபிஎஸ் உடன்..

தி.மு.க-வை சேர்ந்த மூத்த நிர்வாகிக்காக, ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்திருப்பது உள்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதிவில், "விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மண்ணின் மைந்தரும், இரண்டு முறை இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்ட சாமானியருமான அண்ணன் வி.பி. ராஜனை, தனது ஆணவப் போக்கினால் அடிமை போல் நடத்தி அவமானப்படுத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொன்முடி, சண்முகம் என இருவருமே தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கு இழுக்கை தேடித் தருபவர்கள்.

கதிரவன்

அண்ணன் வி.பி.ராஜன் 70 வயதைக் கடந்தவர். அந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பில் உள்ளவர். அவரின் வயதுக்கும், பொறுப்புக்கும் மரியாதை தந்து அவரை அமர வைத்து பேசி இருக்கலாம். அந்த நேரத்தில் பொன்முடி தன்னிலை மறந்து இருந்தாரோ? ஒரு மூத்த தலைவரை நிற்க வைத்து அவமானப்படுத்தி இருக்கிறார். ஒருவேளை அவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகத்தான் இப்படி பொன்முடியால் அவமானப்படுத்தப்பட்டாரோ? என்ற ஐயப்பாடு தமிழக மக்கள் அனைவர் இதயங்களிலும் எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் அரசியல் மற்றும் மனித நாகரிகம் சிறிது கூட இல்லாமல் செயல்பட்ட பொன்முடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். தி.மு.க.தலைவர் கருணாநிதி, அவரின் மகன் மு.க.ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குத்தான் இதுவரை எல்லோரும் விசுவாசமாக இருந்தது போல் காட்டி வருகிறார்கள்.

ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு தனது ஒட்டுமொத்த விசுவாசத்தையும் ஒரு படி மேலாகக் காட்டியவர். அந்த வாயில்லா ஜீவனைத்தான் வாட்டி வதைத்திருக்கிறார் பொன்முடி.

வி.பி.ராஜன்

மாநில அளவில் ஓரளவுக்கு வி.பி.ராஜனுக்கு இருந்த மரியாதையை பொன்முடி கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறார். பொன்முடியைப் போன்றவர்களால் தான் தமிழக முதல்வரின் தூக்கம் கெடுகிறது. ஒரு மூத்த தலைவரை அவமானப்படுத்திய பொன்முடி போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழக முதல்வர் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவாரா?" என அவர் தனது பதிவில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசும் திமுக-வினரோ, ``அமைச்சர் காலில் காயமடைந்து இருந்ததால் கட்டுப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அதை வி.பி ராஜன் பார்த்து விசாரித்தபோது எடுக்கப்பட்ட படம் தான் வெளியே சுற்றுகிறது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் சிலர் வெளியே பேசுகிறார்கள்” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/virudhunagar-ops-team-district-secretary-supports-dmk-executive-vp-rajan

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

``மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன!” - ஆளுநர்‌ ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். மதியம் 1.30 மணிக்கு ராஜபாளையம் தனியார் மண்டபத்தில் விஸ்வகர்மா அசோசியேசன் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "விஸ்வகர்மா தொழிலாளர்கள் இல்லாமல் நாட்டில் தொழிற்சாலைகளும் விவசாயமும் வளர முடியாது. பிரதமர் மோடி, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தைரியமாக செயல்படுத்தி உள்ளார். இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மரியாதை

பிரதமர் மோடி, இதுவரை கவனிக்கப்படாத துறைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், 18 வகையான கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தொழில்நுட்ப உதவி, பொருள் உதவி, சிறுகுறு கடனுதவி செய்வதுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு சிலர் அனைத்தையும் அரசியலாகவே பார்க்கின்றனர். மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குலக்கல்வி திட்டத்தை, தந்தை செய்யும் தொழிலையே மகனும் செய்ய வேண்டும் என்று தவறாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர். அவ்வாறு பேசுபவர்கள், யாரையும் ஒன்றுபடவிடுவதில்லை.

பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாளிதழில் வந்த செய்தியின்படி, இந்துமதி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண், பஞ்சாயத்து தலைவராக பதவியேற்பதில் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கான சமூகநீதி மறுக்கப்படுகிறது. ஆனால், இவர்கள்தான் சமூக நீதியை காப்பாற்றுகிறார்கள் என தங்களைப் பற்றி பரப்புரை செய்துக்கொள்கின்றனர். பின்தங்கிய வகுப்பினரை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே நாட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

பேச்சு

மின்சாரம் குடிநீர் சமையல் எரிவாயு போன்ற அனைத்து திட்டங்களும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் ஒருமாநிலத்தில் அதிகமான வசதிகளோ அல்லது மற்றொரு மாநிலத்தை இருட்டடிப்பு செய்யவோ முடியாது. இந்தியாவை தனது குடும்பமாக பிரதமர் நினைக்கிறார். குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்று வந்தால் அவருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து அதை சரி செய்கிறோமோ அதேபோல் நடந்து கொள்ள வேண்டும். பிரச்னையை அரசியல் நோக்கோடு சந்தித்தல் கூடாது.

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பல்வேறு மாநிலங்களில் அது செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளது. கணக்கு தணிக்கை குழு வழங்கிய அறிக்கையில் வீடு இல்லாதவர்களுக்கான திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 40% நிதி பயன்படுத்தப்படவில்லை. இந்த 40 சதவிகித நிதி வேறுத் திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தினர்

திட்டங்கள் பிரதமர் அறிவித்தாலும், அவை அனைத்தும் மக்களுக்கானது. மத்திய அரசு நேரடியாக நிறைவேற்றப்படும் ரயில்வே திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு தமிழகத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் 75 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தும் திட்டம் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்தும் போது பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் மக்களுக்கு இன்னும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த அறியாமை இருப்பது தெரியவந்துள்ளது. தாங்கள் நினைத்த தொழிலை தொடங்குவதற்கு தேவையான பொருளுதவி தொழில்நுட்ப உதவி பெறுவதற்கான விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு ஏற்படவில்லை" என பேசினார்.

தொடர்ந்து சிவகாசியில் தொழிலதிபர்களுடன்‌ நடைபெற்ற சந்திப்பில், "சிறுவயதில், சிவகாசி எங்கிருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட இன்றைய தினம் சிவகாசியை அடையாளப்படுத்தும் அளவுக்கு உங்களால் இந்த ஊர் உயர்ந்திருக்கிறது. திறமையுள்ள சிவகாசி ஊர் மக்கள், நாட்டின் உயர்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நிறைய பணியாற்றுகின்றனர்.

கவர்னர் ரவி

நமது நாட்டின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கோடி அரசு ஊழியர்கள் கூட இல்லாத நிலை தான் உள்ளது. நமது திறன் அடையாளப்படுத்தபடவில்லை என்றால் நாடு வளர்ச்சியடையாது. நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் அனைவருக்கும் சமமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் மூலம் இன்று உலகளாவிய பிரச்னைகளுக்கு கூட தலைமைதாங்க கூடிய அளவுக்கு நாடு வளர்ந்திருக்கிறது.

ஆய்வு

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக நமது நாடு இருக்கிறதென்றால் அது அரசாங்கத்தால் அல்ல உங்களைப் போன்றவர்களால் தான். 2014-ல் 500 க்கும் குறைவான சிறுகுறு தொழில் நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. அவை, அனைத்துக்கும் தொழில்நுட்ப அறிவியல் ரீதியாக நாம் முன்னேறி இருப்பதுதான்‌ காரணம். இதன் விளைவாக இன்று ஸ்டார்ட் அப் துறையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையில் உலகின் முதல் 3 நாடுகளில் நாம் இருக்கிறோம். பசுமைசூழல் அமைப்பிலும், டிஜிட்டல்மயமாக்கலிலும் உலகின் முன்னணியில் நாம்‌இருக்கிறோம். தமிழகத்தின் கிராமப்புறங்களில் அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடு இந்தியா தான். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள் உருவாக்கி அதை வெற்றிகரமாக விண்ணிலும் செலுத்தியிருக்கிறோம்.

மத்திய அரசு மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையேயான அரசியல் காரணங்களை தாண்டித்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். நாடு முழுவதும் அரசியலாலும், சட்டத்தாலும் தான் சூழப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்கோ, தனிப்பட்ட விருப்புக்கோ இங்கு யாரும்‌செயல்பட முடியாது.

காமராஜர் இல்லம்

பிரதமர் மோடி நமது நாட்டின் மீதான பார்வையை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார். டெல்லியில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டிற்கு பிறகு உலக தலைவர்கள் அனைவரும் இந்தியாவின் 83 தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு நடக்க சம்மதித்துள்ளனர். இதுதான் புதிய வலிமையான பாரதத்திற்கான‌ அடையாளம். ஜி-20 மாநாட்டிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெரிய விஞ்ஞானிகளையோ அறிவாளிகளையோ சென்று சந்திக்கவில்லை. அந்த கட்டிடம் கட்ட உறுதுணையாக இருந்த 3200 பாமர மக்களை சந்தித்து அவருடன் பேசி அமர்ந்து உணவருந்தினார். இது பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மீது நம்பிக்கையை காட்டுகிறது.

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக செய்யும். பட்டாசு தொழிலானது 100 கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய வேலை. அப்படிப்பட்ட வேலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை நான் உளமாற உணர்கிறேன். எனவே, எல்லா தடைகளை களைவதற்கும் தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கும் அரசுடன் சேர்ந்து என்னால முயற்சிகளை கட்டாயம் நான் செய்வேன்" என பேசினார்.

பார்வையிடுதல்

தொடர்ந்து சாத்தூரில் தீப்பெட்டி தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய அவர், சாலை மார்க்கமாக விருதுநகரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-governor-rn-ravi-speak-about-schedule-caste-people-and-backwards

காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே புகுந்திருக்கிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

‘காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் இந்தியா, கனடா ஆகிய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. கனடாவின் குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்’ என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் கூறியிருக்கிறார்

கனடாவில் சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த நபர்கள் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. மர்மம் நிறைந்த இந்த கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கிறது. டொரன்டோ, லண்டன், மெல்போர்ன், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசை எதிர்த்து சீக்கிய பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

கனடாவில் சீக்கியர்கள் போராட்டம்

நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிஜ்ஜாரின் மரணத்துக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கனடா தரப்பு கூறியிருக்கிறது. ஆனால், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று இந்திய அரசு மறுத்திருக்கிறது.

கனடா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே நுழைந்திருப்பது விவாதங்களை எற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் நீதியின் முன்பாக குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன’ என்று அவர் கூறியிருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இதற்கிடையில், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்தியாவில் ஏழு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 53 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனைகளில் கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றை என்.ஐ.ஏ பறிமுதல் செய்திருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், ‘இந்தப் பிரச்னையில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், இந்தியாவுக்குதான் அமெரிக்கா ஆதரவு அளிக்கும். கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவுக்குத்தான் அதிக ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, யானையுடன் எறும்பு சண்டையிடுவதைப் போன்றது.

வாஷிங்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கலள்

தனது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை அளிக்க ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என்பது குறித்து கனடா விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/america-intervenes-in-india-canada-problem-over-khalistan-seperatist-killing

இன்றே சேமிக்கத் தொடங்காவிட்டால், நாளை நம் நிலை..?

இன்னும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 2050-ம் ஆண்டில் நம் நாட்டில் உள்ள மக்களில் ஐந்து பேரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டிருக்கும் கணிப்பு நம்மை சற்று அதிர்ச்சி அடையச் செய்கிறது.

இந்தியாவில் முதியோர் குறித்து ஐ.நா வெளியிட்ட இந்த அறிக்கையானது, ‘‘2022 ஜூலை 1-ம் தேதிபடி, 14.9 கோடி முதியவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அதாவது, மொத்த மக்கள் தொகையில் முதியோர்கள் 10.5% உள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2036-ம் ஆண்டில் 22.7 கோடியாக அதிகரித்து, 15% பேர் முதியோர்களாக இருப்பார்கள். இந்த முதியோர்களின் எண்ணிக்கை 2050-ல் 20.8 சதவிகிதமாக உயர்ந்து, 34.7 கோடியாக இருப்பார்கள்’’ என்று கணித்திருக்கிறது.

இந்த நிலையை சிக்கலின்றி எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை இன்றைக்கு 25 வயதில் இருக்கிற ஒவ்வொருவரும் இன்றே யோசிக்கத் தொடங்க வேண்டும். காரணம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல, நம் நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை. முதியோர்களுக்குத் தற்போது தரப்படும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயானது, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 5,000 அல்லது 10,000 ரூபாயாக உயரலாமே தவிர, அந்தப் பணத்தை வைத்து நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியாது. முன்பு, அரசு வேலைகளில் பென்ஷன் கிடைத்தது. இப்போது, அதுகூட இல்லை; அவ்வளவு ஏன், ரயில் டிக்கெட்டில் முதியோர்களுக்கு இருந்த சலுகைகூட நீக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், ‘‘முதுமைக் காலத்தில் மகனோ, மகளோ நம்மைப் பார்த்துக்கொள்வார்கள்’’ என்கிற எதிர்பார்ப்பு இனிவரும் காலத்தில் எந்தளவுக்கு நிறைவேறும் என்பது கேள்விக்குறிதான். மாறிவரும் வாழ்க்கை முறையில் அவர்களை முழுமையாக எதிர்பார்த்து நிற்பது உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.

ஆக, முதுமைக் காலத்தில் தங்களுக்கான பொருளாதாரத் தேவைகளைக் குறை இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்தாக வேண்டும். இதற்கு, 60 வயதுக்குப் பிறகு தேவைப்படும் பணத்தை இன்றே திட்டமிட்டுச் சேர்க்கத் தொடங்குவது அவசியத்திலும் அவசியம். ‘இன்னும் 25 ஆண்டுகள் இருக்கிறதே...’ என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு நாளும் கூடுதல் கஷ்டத்துக்கே வழிவகுக்கும்! அதே சமயம், இந்தப் பிரச்னையைத் தனிநபர்கள் தொடர்பான பிரச்னை என நினைக்காமல், ஒரு சமூகப் பிரச்னையாக கருதி, இதற்கான தீர்வுகளை மத்திய, மாநில அரசாங்கம் அவசியம் எடுக்க வேண்டும்.

முதியவர்கள், நாடு மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட வர்கள். உழைக்கிற காலத்தில் அவர்களின் சக்தியை உறிஞ்சி எடுத்துவிட்டு, வயோதிக காலத்தில் அவர்களை சரியாகக் கவனிக்காமல்விடுவது மிகப் பெரிய துரோகம். எனவே, முதியோர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிய குறை எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழும் சூழலை அரசாங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்வது மட்டுமே சரியான செயலாக இருக்கும்!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/senior-citizen-increased-in-2050-in-india

வியாழன், 28 செப்டம்பர், 2023

BJP - ADMK: `கூட்டணி முறிவு நிரந்தரம்தானா?' - சி.டி.ரவியின் ட்வீட் சொல்வது என்ன?!

அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணியில் இருந்தபோது, எக்கச்சக்கமான சலசலப்புகள் இருந்துகொண்டே இருந்தன. கூட்டணிக் கட்சிகள் என்கிற எல்லையைக் கடந்து, இரு கட்சி நிர்வாகிகளும் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். அதுவும் அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு சில சமயங்களில், எடப்பாடி பழனிசாமியே நேரடியாக பதில் விமர்சனங்கள் வைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையும் உருவானது. ஆனால் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என அதிமுக அறிவித்த பின்பு, இரு கட்சிகளிடம் இருந்தும் எந்த சலனமும் இல்லாமல் மயான அமைதி நிலவுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்

இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற முடிவை, கடந்த 25-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக எடுத்தது. புயலுக்கு முன் அமைதி என்பார்கள், ஆனால் இங்கோ, கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்து பெரிய பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது அதிமுக.

ஆனால் இம்முறிவை அறிவித்த கையோடு, பாஜக குறித்து யாரும் எந்த விமர்சனமும் வைக்க வேண்டாம் என்று வாய்மொழியாக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாம் அதிமுக தலைமை. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என யாரும் பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல கூட்டணி குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் தேசியத் தலைமை அறிவுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. கூட்டணி குறித்து தேசியத் தலைமை முடிவெடுக்கும் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி நிறுத்திக்கொண்டார் அண்ணாமலை. மற்ற முன்னணி நிர்வாகிகளும் கூட்டணிப் பற்றி கருத்துச் சொல்வதை தவிர்த்துவிட்டனர்.

ஆனால் அதிமுகவின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அண்ணாமலையின் மீதிருந்த கோபத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கூட்டணி முறிவுக்காக அதிமுக கொடுத்திருந்த அறிக்கையும் அதனை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது. பாஜகவின் தேசியத் தலைமையோடு தங்களுக்கு எந்த முரணும் இல்லை என்று ஏற்கெனவே அதிமுகவின் சீனியர்கள் பலர் சொல்லியிருக்கின்றனர்.

அமித்ஷா - நரேந்திர மோடி

தற்போதும் பாஜக மேலிடத்தின் மீதான மதிப்பின் காரணமாகவே, தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கருத்துச் சொல்ல வேண்டாம் என்று சீனியர்கள் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எனினும் அதிமுக-வின் முடிவு குறித்து பாஜக ஏன் பதில் சொல்ல மறுக்கிறது என்று குழப்பமும் நிலவியது. இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக-தான் அறிவித்திருக்கிறது. எங்கள் தலைமை அதுபற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என்பதால் இந்த சலசலப்புகள் முடிந்து மீண்டும் ஒன்றுபடவும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் கூட்டணி குறித்து யாரும் எந்த விமர்சனங்களையும் வைக்க வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்கின்றனர். ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் அனைவரும் தேசியத் தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதியை கடைப்பிடிக்கும் சூழலில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுகவை சீண்டும் விதமாக ட்வீட் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

“திருவள்ளுவர் மண்ணில் தாமரை மிகப்பெரிய அளவில் மலரும்” என்று அவர் மறைமுகமாக தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். “அதிமுக-வின் நிலைப்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான். 25-ஆம் தேதி கே.பி.முனுசாமி பேட்டி கொடுத்தபோதே எங்களுடைய பதிலையும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் இருந்து அமைதியாக இருக்கச்சொன்ன ஒரே காரணத்திற்காக விமர்சிக்காமல் விட்டுவிட்டோம். கூட்டணி இருக்கும், உடையும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதை விட, எங்களுடைய தன்மானத்தைப் பற்றித்தான் முதலில் கவலைப்பட வேண்டும்.

எனவே இங்குள்ள நிலைமையை எங்கள் தலைவர் டெல்லி எடுத்துச்சொன்னார். உங்கள் பணிகளை வழக்கம்போல பாருங்கள், கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் சி.டி.ரவி ட்வீட் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதிமுக இல்லாமல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அக்கட்சித் தலைவர்கள் நினைக்கிறார்கள் போல. அந்தக் காலமெல்லாம் மாறிவிட்டது. இப்போது எங்களுக்கும் கணிசமான வாக்கு வங்கி உருவாகிவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதை புரிய வைப்போம். இதை உணர்த்தும் விதமாகத்தான் சி.டி.ரவியின் ட்வீட் இருக்கிறது” என்கின்றனர்.

கமலாலயம்

பாஜக சீனியர் நிர்வாகிகளிடம் இதுகுறித்து விசாரித்தோம். “பாஜக தலைமையில் போட்டியிட்டால்தான் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க முடியும். அதிமுக தலைமையை ஏற்று கூட்டணியில் நாங்களும் ஒரு அங்கமாக இருந்தால் எப்படி தாமரை மலரும்? எனவே 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக சி.டி.ரவி பதிவிட்டிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்கின்றனர். இருப்பினும் கூட்டணி முறிவு முறிவுதான் என்பதை உணர்த்துகிறதா சி.டி.ரவியின் பதிவு என்ற குழப்பத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-the-alliance-break-permanent-what-does-ct-ravis-tweet-say

நட்சத்திரப் பலன்கள்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை #VikatanPhotoCards



source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-september-29th-to-october-5th