"அரசியலுக்கு வரவில்லை" என்கிற ரஜினியின் அறிவிப்பு சிலருக்குத் துன்பத்தையும், பலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி, "ஜனவரியில் கட்சி துவக்கம்... டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு" என்று திடீர் பரபரப்பைக் கிளப்பியவர் டிசம்பர் 29-ம் தேதி அரசியலுக்கு வரவில்லை என மீண்டும் ஓர் அறிக்கை மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரபாக்கிவிட்டார். 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்லும்வரை வேறு ஒரு மனநிலையில் இருந்த ரஜினிகாந்த் அதன்பிறகு தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி நெருங்கிய நண்பர்களிடம் மனம்திறந்திருக்கிறார்.
ஹைதராபாத் நாட்கள்!
'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 13-ம் தேதி தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த். அவருக்குத் துணையாக மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன்சென்றார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவும், தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷும் படப்பிடிப்பில் கலந்துகொண்டர். 'அண்ணாத்த' படப்பிடிப்பு தளத்தில் ஐபிஎல் ஸ்டைலில் பயோபபுள் உருவாக்கப்பட்டது. 120 பேர் கொண்ட படக்குழுவினர் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட், தங்கியிருக்கும் ஹோட்டலைத்தவிர வெளியே போகக்கூடாது, வெளியேயிருந்து யாரும் உள்ளே வரக்கூடாது எனக் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.
அதிகப்படியான மனிதர்களுடன் நெருக்கமாக வேலை செய்யும் மேக்அப் மேன், ஹேர் டிரெஸ்ஸர் உள்ளிட்ட சிலருக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை படப்பிடிப்பு தளத்துக்குள்ளேயே கொரோனா சோதனைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. டிசம்பர் 21-ம் தேதிவரை எந்த சிக்கலும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்த நிலையில், 22-ம் தேதி காலை படப்பிடிப்பில் இருக்கும்போது ரஜினிக்குத் திடீரென உயர் ரத்த அழுத்தத்தால் படபடப்பு ஏற்பட்டிருக்கிறது. அருகில் இருந்த துணை இயக்குநரின் கையைப்பிடித்து சாய்ந்த ரஜினிக்கு, படப்பிடிப்பு தளத்தில் இருந்த மருத்துவக்குழு உடனடியாகப் பரிசோதனைகள் செய்திருக்கிறது.
ரத்த அழுத்தத்தில் வேறுபாடுகள் இருக்கிறது என்றதும் ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையே படப்பிடிப்பில் கலந்துகொண்ட நால்வருக்கும் கொரோனா எனத் தகவல் வர "அடுத்தடுத்த நாட்களுக்கும் ஷூட்டிங் நடத்தவேண்டாம்... ஷூட்டிங்கை மொத்தமாக நிறுத்திவிடலாம்" எனச் சொல்லியிருக்கிறார் கலாநிதி மாறன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிக்கு 'டஸ்ட் அலர்ஜி' ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மூன்று நாட்கள் ரஜினிக்கு ஹோட்டல் அறையில் வைத்தே சிகிச்சைகள் நடந்தநிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்பல்லோ மருத்துவமனைக்குப் போய் மேலும் பல பரிசோதனைகள் எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் 27-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை வந்தார்.
இந்த ஒரு வார கால அனுபவத்தை தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் மனம்திறந்து சொல்லியிருக்கிறார் ரஜினி. "ஒரு வாரம் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டேன். உயிர் பிழைச்சதே பெரிய அதிசயம். மீண்டு வருவேனான்னு எனக்கே சந்தேகமாகிடுச்சு. எல்லோருமே பயந்துட்டோம்" எனப் பேசியிருக்கிறார் ரஜினி. அரசியல் வேண்டாம் என்கிற முடிவு மிகச்சரியான முடிவு என்று அவரிடம் பேசிய நண்பர்கள் எல்லோரும் சொல்ல, "என்னைப் புரிந்துகொண்டதற்கு ரொம்ப நன்றி" என்பதையே பதிலாகச் சொல்லியிருக்கிறார்.
உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ரஜினி அரசியலில் இருந்து விலகியிருக்கும் அதே நேரத்தில், 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ரஜினி. இன்னும் 30 நாட்களுக்கும் மேல் ரஜினியின் கால்ஷீட் இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிக அளவில் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. சண்டைக் காட்சிகளும் இருக்கிறது. ஆனால், ரஜினி 2021 சட்டமன்றத் தேர்தல் வரை மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்வது சந்தேகமே என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கொரோனா சூழல் முழுவதுமாக சரியாகி, சட்டமன்றத் தேர்தலும் முடிந்தப்பிறகுதான் அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கலாம்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/rajini-shared-his-hyderabad-experience-with-close-friends
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக