தன் திறமைகள் குறித்த சந்தேகங்கள் எழும் போதெல்லாம், தன்னை நோக்கி நீளும் அந்த கேள்விக்குறியை, ஆச்சரியக்குறியாக மாற்றிக் காட்டுபவர்களே சரித்திர நாயகனாகக் கொண்டாடப்படுவார்கள். அத்தகைய ஒரு நிகழ்வைத்தான், கடந்த இரண்டு நாட்களில் செய்துகாட்டியிருக்கிறார் அஜிங்கியா ரஹானே. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும்!
மெல்போர்னில், தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, கோலிக்குப் பதிலாக, துணைக் கேப்டன், ரஹானே தலைமையேற்பார் என்ற தகவல் தொடருக்கு முன் கசிந்ததிலிருந்து, கடும் அதிருப்தியும் ரஹானேவின் திறமை குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன. ''ஆக்ரோஷத்தின் ஆளுருவான கோலியின் இடத்தில் ரஹானேவா?!'', ''ஆஸ்திரேலியாவின் அசாதாரண மைண்ட் கேம் மற்றும் கேம் பிளான்களின் முன் ரஹானேவால் தாக்குப்பிடிக்க முடியுமா?!''... தகர்ந்து போவார் என அக்கறையுடன் சிலரும் கேலியாகப் பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். எல்லாவற்றிற்குமான பதிலைக் கிட்டத்தட்ட 30 மணி நேரத்தில் கொடுத்திருக்கிறார் ரஹானே!
கத்துக்குட்டி கேப்டன் அல்ல!
கேப்டன் என்னும் கிரீடத்தை ரஹானே அணிந்து கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, 2015-ம் ஆண்டு இந்தியாவின் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின் போது மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த ரஹானே, டி20 தொடரை 1/1 என டிரா செய்து ஒருநாள் தொடரை 3/0 என இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.
டெஸ்டில் கேப்டனாக 100 சதவிகித வெற்றி!
ரஹானேவின் கேப்டன்ஷிப் திறமை பெரிதாகப் பேசப்பட்டது, 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில்தான். மூன்றாவது போட்டியின் முடிவில், இந்தத் தொடர், 1/1 என்ற நிலையில் சமனடைந்திருக்க, தர்மசாலாவில் நடந்த நான்காவது போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாய்ப் பார்க்கப்பட்டது. எதிர்பாராத விதமாக கோலிக்குக் காயம் ஏற்பட்டதால், கடைசி நிமிடத்தில் கேப்டனாக்கப்பட்டார் ரஹானே! போட்டியை டிராவாக்கினால் கூடப் பரவாயில்லை எனக் கருதப்பட்ட நிலையில், அணியை வெல்ல வைத்து பார்டர் கவாஸ்கர் டிராபியை, கோலியுடன் இணைந்து கையில் ஏந்தினார். இந்தப் போட்டியில், கோலிக்குப் பதிலாக யாரை ரஹானே களமிறக்குவார் என்று எதிர்பார்த்த தருணத்தில், 'எக்ஸ் ஃபேக்டராக' ஐந்தாவது பெளலராக குல்தீப்பைக் களமிறக்கி ஷாக் கொடுத்தார் ரஹானே!
வார்னரின் விக்கெட்டை அவர் வீழ்த்தி, இந்தியா, வெற்றிமுகம் தரித்த போதுதான், ரஹானேவின் முடிவு சரியென்று நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து, 2018 -ம் ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் விளையாடிய அறிமுக டெஸ்ட் போட்டிக்கும், இந்தியாவிற்கான தலைமைப் பொறுப்பு ரஹானேவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் போட்டியிலும் எதிர்பார்த்தபடியே இந்தியா வென்றாலும், பரிசளிப்பின் போது, ரஹானே செய்த காரியம்தான் எல்லோரையும் நெகிழச் செய்தது. கோப்பையை, தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ஆப்கானிஸ்தான் வீரர்களையும் தங்களுடன் இணைந்து கொள்ளச்செய்து உற்சாகமூட்டினார்.
வீழ்ச்சியும் எழுச்சியும்!
அறிமுகப் போட்டியில் இருந்து 2017-ம் ஆண்டின் முற்பகுதி வரை, கோலோச்சி வந்த ரஹானேவுக்கு, 2017-ம் ஆண்டிற்குப் பின் சரிவு ஏற்படத் தொடங்கியது. 2017-ல் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் சோபிக்காமல் போனது, அவரது பேட்டிங் சராசரியை 50-ல் இருந்து 35க்கு கீழே இறக்கியது. இதனால் 2018-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில், முதல் இரண்டில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். எனினும் மூன்றாவது போட்டியில் கிடைத்த வாய்ப்பில், இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்கள் அடித்து, அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். இதைத் தொடர்ந்து 2018, 2019 ஆண்டுகளில், இங்கிலாந்துக்கு எதிராக 81, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 70, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 81 மற்றும் 102 என ஜொலித்திருந்தார். இப்படி சில குறிப்பிட்ட போட்டிகளில், அவர் குறிப்பிடும்படியான தடங்களைப் பதித்திருந்தாலும், காணாமல் போய் இருந்த அந்த பழைய வின்டேஜ் ரஹானேவை, தனது கடும் முயற்சியால் இந்த மெல்போர்ன் டெஸ்ட்டில்தான் ரஹானாவே மீட்டெடுத்திருக்கிறார்.
மெல்போர்னுக்கு முந்தைய சவால்கள்!
கோலி இல்லாமல் போவதே அணிக்கு சங்கடங்களைக் கொண்டு வரும் என்ற பயம் நீடித்த நிலையில், அடிலெய்டில் ஏற்பட்ட அவமானம், இந்திய அணியின் ஒட்டுமொத்த பாசிட்டிவிட்டியையும் குலைத்திருந்தது. கோலி இல்லாமல் இன்னும் ஒரு அவமானகரமான தோல்வியைத்தான் இந்தியா, மெல்போர்னில் மறுபடியும் பதிவு செய்யப் போகிறது என்ற ஆருடங்களே எழுதப்பட்டன. இதை எல்லாம் பொருட்படுத்தாமல், மிக தைரியமாக முந்தைய போட்டியைப் போலவே, தைரியத்துடன் ப்ளேயிங் லெவன் முன்பே அறிவிக்கப்பட, அதுவும் பல விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, ஜடேஜாவைக் களமிறக்கியதனால் எல்லாமே முடிவுக்கு வந்து விட்டது போன்ற காட்சிப் பிழையே உருவாக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் களத்தில் பதில் சொல்லி இருக்கிறார் ரஹானே.
பெளலிங், ஃபீல்டிங் வியூகங்கள்!
முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா 200 ரன்களுக்கும் குறைவாக, ஆட்டமிழக்கும் என்பதை நிச்சயம் யாராலும் நம்ப முடிந்திருக்காது. குறிப்பாக டாஸை ஆஸ்திரேலியா வென்றபோதே போட்டி அவர்கள் பக்கம் முடிந்து விட்டது எனவே பலரும் நினைத்தனர். ஆனால், இந்திய பெளலிங்கைக் கலைத்துப் போட்டு சுழல் முறையில் சிறப்பாய்க் கையாண்ட ரஹானே எல்லா கணிப்புகளையும் கலைத்துப்போட்டார். குறிப்பாக, 11-வது ஓவரிலேயே ஸ்பின்னரான அஷ்வினைக் கொண்டு வந்ததும், வேடின் விக்கெட் விழுந்ததும், பும்ராவை உள்ளே கொண்டு வந்து, அழுத்தத்தை அதிகரித்ததும், ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தது.
அடுத்ததாக, ஃபீல்டிங் செட்டிங்கிலும் அவர் கையாண்ட யுக்திகள் பாராட்டுப் பெற்றன. குறிப்பாக அஷ்வின் பந்து வீசுகையில், ஸ்லிப், லெக் ஸ்லிப், ஃபார்வேர்ட் ஷாட் லெக், ஸில்லி பாயின்ட் எனச் சுற்றி வளைத்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். ரஹானேவை 'பெளலர்களின் கேப்டன்' என சமீபத்தில் இஷாந்த் ஷர்மா வர்ணித்திருந்தது, உண்மையானது. பொதுவாக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் வீரர்கள் மைதானத்தில் உள்ளே மொத்தமாகக் கூடி நிற்பார்கள். அப்போது அணியின் கேப்டன்தான் பேசுவார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அஷ்வினையும் பேச வைத்தார் ரஹானே. அது பாராட்டப்பட வேண்டிய அணுகுமுறை!
சிராஜுக்கு சிறப்பு!
ரஹானே, சிராஜைக் கையாண்ட விதமும் எல்லோராலும் பாராட்டப்பட்டது. தரையில் இருந்த ஈரப்பதத்தைப் பயன்படுத்திக் கொள்ள அஷ்வினை முன்கூட்டியே இறக்கிய ரஹானே, உணவு இடைவேளைக்குப் பிறகுதான் சிராஜை இறக்கினார். அவருக்கு இது அறிமுகப் போட்டி என்பதால், பிட்ச் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ளட்டும் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் தேய்ந்த பந்துகளை தனது ஆயுதமாக மாற்றிக் கொள்வது சிராஜுக்குக் கைவந்த கலை என்பதும்தான். யாரை, எங்கே, எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதில்தானே ஒரு கேப்டனின் வெற்றியே அடங்கி இருக்கிறது!
Also Read: மெல்போர்னில் மையம் கொண்ட ரஹானே புயல்... பன்ட்டின் கேமியோ, ஜடேஜாவின் பொறுப்பு! #AUSvIND #Day2
பேட்ஸ்மேனாக எழுச்சி!
முதல் நாளில் அணிக்குக் கேப்டனாகத் தேவைப்பட்ட ரஹானே, இரண்டாம் நாள், பேட்ஸ்மேனாகத் தேவைப்பட்டார். அணியின் ஸ்கோர் 61/2 என்றிருந்த போது உள்ளே வந்தார் ரஹானே. அதற்கடுத்த சில நிமிடங்களில், அது 64/3 என்றானது. அணியின் தூணாய்க் கருதப்பட்ட புஜாராவே ஆட்டமிழக்க மொத்தப் பொறுப்பும் ரஹானேவின் தோள்களில் ஏறிக் கொண்டது. "முதல் செஷனை எதிரணி பெளலர்களுக்குக் கொடுங்கள், அதற்கடுத்த இரண்டு செஷன்களும் உங்களுடையதாகும்" என டெஸ்ட் போட்டியின் மந்திரமாய் கவாஸ்கர் சொன்னதைத்தான் வார்த்தை மாறாமல் ரஹானே பின்பற்றினார்.
மறுபுறம் அவருடன் கைகோத்த விஹாரியின் ரன்கள் ஏறிக் கொண்டிருந்தன. ஆனால், மறுபுறமோ தவஞானியைப் போன்ற இன்னிங்ஸைத்தான் ஆடிக் கொண்டிருந்தார் ரஹானே! அவரது முதல் ரன்னை எடுக்கவே 17 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு விஹாரி ஆட்டமிழந்து, பன்ட் வந்த போது, அவருக்கேற்றாற் போல் தனது பேட்டிங்கைத் தகவமைத்துக் கொண்ட ரஹானே அந்த இரண்டு பார்ட்னர்ஷிப் மூலமாகவும் 50+ ரன்களைச் சேர்த்தார்.
இதன்பிறகு ஜடேஜாவுடனான அவரது பார்ட்னர்ஷிப்தான் மிரட்சிக்குரியதாய் இருந்தது. ''ஜடேஜாவை, ரஹானே ஏன் எடுத்தார்?!'' என்ற கேள்விக்கான பதிலை, இவர்கள் இருவருமாகவே பேட் மூலமாகச் சொல்லிக் காட்டினர்... 100+ ரன்களை இணைந்து எடுத்ததன் மூலமாய்!
மன உறுதி, வைராக்கியம், நிதானம், நம்பிக்கை அத்தனைக்கான அர்த்தத்தையும் நேற்று தனது பன்னிரண்டாவது சதத்தின் மூலமாய்க் காட்சிப்படுத்தியிருக்கிறார் ரஹானே! சமீபத்தில் நடந்த ஐபிஎல்-ல் கூட சில தொடக்கப்போட்டிகளில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. ''இப்படி ஆகி விட்டதே ரஹானேயின் நிலை?'' என சிலர் பரிதாபப்பட்டனர். ஆனால் கடந்த காலங்களில் கிளாசிக்கல் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துக் காட்டி இருந்த ரஹானே, சரிவிலிருந்து மீண்டெழுந்து மீண்டும் சிகரத்தில் ஏறி அமர்ந்திருக்கிறார். ஷேவாக் முதல் பான்ட்டிங் வரை, இந்தப் போட்டியில், கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும், அவரது செயல்பாடுகள் குறித்து பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்க, அவரது சதத்துக்கான கொண்டாட்டங்கள் கூட, ''வந்த வேலை இன்னும் முடியவில்லை!'' என்பதைப் போல மிக பக்குவமானதாய்த்தான் இருந்தது.
வலுவிழந்து உடைந்து கிடக்கும் உன்னுடைய அணியை, நீ எப்படி உற்சாகமூட்டி முன்னிறுத்தி வழி நடத்துகிறாய் என்பதில் இருக்கிறது உன்னுடைய தலைமைப் பண்பு. அடிலெய்டில் சிதறிக் கிடந்த சில்லுகளை ஒன்றாக்கி, புது வடிவமும் புத்தொளியும் ஊட்டி உள்ளார் ரஹானே... வெற்றிக்கான உற்சாகம் தெரிகிறது.
இதுவரை ரஹானே சதம் அடித்த போட்டிகளில் இந்தியா தோற்றதில்லை என்பது வரலாறு. அது இந்தப் போட்டியிலும் உண்மையானால், கோலி இல்லாமல் கிடைக்கும் இது ஒரு மாபெரும் வெற்றியாகப் பதிவாகும். புது வரலாற்றை எழுதப்போகும் வெற்றியாக மாறும்!
source https://sports.vikatan.com/cricket/how-rahane-changed-indias-fortunes-in-the-melbourne-test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக