மாடித்தோட்டத்துல தக்காளி சாகுபடி செய்றது தொடர்பா கடந்த பகுதியில பார்த்தோம். அறிவியல்பூர்வமான பல விஷயங்களைச் சொல்லி இருந்தார் குன்றக்குடி வேளாண் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர் குமரன். அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவிச்சிருந்தீங்க. இந்த முறை மாடித்தோட்டத்துல மிளகாய் சாகுபடி செய்றது தொடர்பான அறிவியல்பூர்வமான கருத்துகளை இங்க சொல்றாரு செந்தூர்குமரன்.
Also Read: மாடித்தோட்டத்துல தக்காளி சாகுபடி செய்வோமா? - விரிவான வழிகாட்டுதல் - வீட்டுக்குள் விவசாயம் - 12
``ஏற்கெனவே சொன்னபடி ஒரு பையில் ஒன்று அல்லது இரண்டு செடிகள் மட்டுமே வளர்க்க வேண்டும். ஒரு செடி இருந்தால் மிளகாயில் அதிக காய்கள் அறுவடை செய்யலாம். மிளகாய் நடவுக்கு நாற்றுகளை நாமே உற்பத்தி செய்யலாம். மாடித்தோட்ட விவசாயத்துக்கு நாற்று உற்பத்தி செய்ய குழித்தட்டு முறைதான் சிறந்தது. ஒரு குழிக்கு ஒரு விதை என விதைக்க வேண்டும். பூவாளி மூலமாகத் தொடர்ந்து தண்ணீர் தெளித்து வர வேண்டும். 7 நாள்களில் விதைகள் முளைவிடும். பிறகு, தட்டுகளை எடுத்து, 50 சதவிகித நிழல் இருக்கும் இடங்களில் வைத்து, 20 நாள்கள் தண்ணீர் தெளித்து வர வேண்டும். பிறகு, எடுத்து நடவு செய்யலாம்.
நாற்றுகள் வளரும் பருவத்தில் விதைத்த 15-ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் நாற்றுகள் நன்கு வளர்ந்து வரும். நடவு செய்யவுள்ள பையில் ஊடகமாக இருக்கும் தென்னை நார் கழிவு உரம் அல்லது மண் மீது ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு தூள் தூவிவிட்டு, கிளறி விட வேண்டும். இதனால், வேரழுகல் நோயைத் தடுத்துவிடலாம். அதன் மேல் நாற்றை நடவு செய்யலாம்.
நடவுசெய்த 20, 40, 60, 80-ம் நாள்களில் இடுபொருள்கள் இட வேண்டும். இப்படித் தொடர்ச்சியாக உரம் இட்டால்தான் நல்ல மகசூல் எடுக்க முடியும். மண்புழு உரம், தென்னை நார் கழிவு உரம் ஆகியவற்றை இடுபொருள்களாகப் பயன்படுத்தலாம். ஒரு பையில் ஒரு கைப்பிடி இட வேண்டும்.
15-ம் நாள் கவனம்
நாற்று நடவு செய்த 15-ம் நாள் மிளகாய்ச் சாகுபடியில் மிக முக்கியமான நாள். அப்போது ஒவ்வொரு செடியிலும் 10 இலைகள் அளவுக்கு முளைத்திருக்கும். அந்த நேரத்தில், இலைகளில் `குளோரஃபில்’ என்கிற பச்சையம் அதிகம் இருக்காது என்பதால், பூச்சிகள் வருவதில்லை. அந்த நேரத்தில் அதாவது நாற்று நடவு செய்த 15-ம் நாள்... ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் என்று கலந்து செடிகள்மீது தெளித்துவிட வேண்டும். இது மிக மிக முக்கியமான விஷயம். இதன் வாசனை அடுத்த பதினைந்து நாள்கள்வரை செடிகளில் இருக்கும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி ஆகியவை பயிரை அண்டாது. 15 அல்லது 20 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை வேப்பெண்ணெய் கரைசலைத் தெளிக்கலாம். இதைத் தெளித்தால் பூச்சிகள் வருவதில்லை என்று அதிகமாகவும் தெளிக்கக் கூடாது. அதிகமாகத் தெளித்தால், வேப்பெண்ணெய்யில் உள்ள `அசாடிராடின்’ (Azadirachtin) என்ற வேதிப்பொருள், செடிகளை மலடாக்கிவிடும். அதனால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே தெளிக்க வேண்டும். பூ எடுத்த பிறகு, மாதம் ஒருமுறை வேப்பெண்ணெய்யைத் தெளிக்கலாம்.
நடவு செய்த 35-ம் நாள் முதல் பூக்கள் பூக்கும். 55-ம் நாளுக்குள் முழுமையாகப் பூக்கள் வந்துவிடும். ரசாயன விவசாயத்தைவிட, இயற்கை விவசாயத்தில் அதிகளவு பூக்கள் இருக்கும். ஆனால், முறையாகப் பராமரிக்காவிட்டால் உதிர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆக்சின் (Auxion) என்ற ஹார்மோன் செடியில் இயற்கையாகவே உற்பத்தியானால் மட்டுமே, அந்தச் செடியால் ஆரோக்கியமான இலைகளை உருவாக்க முடியும். ஆக்சின் உற்பத்தியாகும் அளவு குறைந்து, `சைட்டோகைனின்’ மற்றும் `ஜிப்ரலின்’ (Gibberellin) ஆகிய ஹார்மோன்கள் உருவாகும் போதுதான் செடிகளில் பூக்கள் பூக்கும். இதுதான் செடிகள் வயதுக்கு வரும் நிகழ்வு. வயதுக்கு வந்த செடியால் மட்டுமே மகசூல் கொடுக்க முடியும். ஆக, நடவுசெய்த 35 முதல் 55 நாள்களில் செடிகளில் சைட்டோகைனின் மற்றும் ஜிப்ரலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகளவு உற்பத்தியாக வேண்டும். ஒருவேளை, இந்த ஹார்மோன்களுக்குப் பதிலாக, ஆக்சின் ஹார்மோன் மட்டுமே உற்பத்தியாகிக் கொண்டிருந்தால் பூவெடுக்கும் காலம் தள்ளிப்போகும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும்.
Also Read: மாடித்தோட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த 3G மந்திரம்... தெரிஞ்சுக்கலாமா? - வீட்டுக்குள் விவசாயம் -10
எனவே, சைட்டோகைனின் மற்றும் ஜிப்ரலின் ஹார்மோன்களின் அளவை அதிகப்படுத்த வளர்ச்சி ஊக்கிகள் அவசியம். இன்டோல் பியூட்ரிக் அமிலம் (Indole Butyric Acid) மற்றும் நாப்தலின் அசிட்டிக் அமிலம் (Naphthalene Acetic Acid) ஆகியவை இவற்றின் வளர்ச்சியைத் தூண்டிவிடக் கூடியவை. இவை இரண்டும் பஞ்ச கவ்யாவில் இருக்கின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, 35 நாள்களுக்கும் மேல் செடிகள் பூக்கவில்லை என்றால், பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இந்த அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது. அதேபோல, பஞ்சகவ்யாவுடன் வேப்பெண்ணெய் மருந்து உட்பட எந்தப் பூச்சிவிரட்டிகளையும் கலந்து தெளிக்கக் கூடாது. இதனால், எதிர்வினைகள் ஏற்பட்டு நாம் தெளிக்கும் நோக்கம் வெற்றிபெறாமல் போகும். பூக்கள் உதிராமல் இருக்கவும் பஞ்சகவ்யாவைத் தெளிக்கலாம். பூக்கள் தோன்றியதிலிருந்து சரியாக 40-ம் நாள் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும்.
மிளகாய்க்கு ஊடுபயிராக வெங்காயத்தைச் சாகுபடி செய்யக் கூடாது.
குருவிக்கண் நோய்
மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது வேரழுகல் நோய். பிண்ணாக்கு பயன்படுத்துதல், தண்ணீரைத் தேங்கவிடாமல் தடுத்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் வேரழுகல் நோய் வராது.
அடுத்து குருவிக்கண் நோய் (பழ அழுகல் நோய்).
இதற்குத் தசகவ்யா நல்ல மருந்து. ஆடு தீண்டாபாளை, புங்கன், ஆடாதொடை, நொச்சி, எருக்கன், கொளுஞ்சி போன்ற தாவரங்களின் இலைகளில், மொத்தமாக ஒரு கிலோ எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரை ஊற்றி, 10 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, இந்தக் கரைசலிலிருந்து 200 மில்லி எடுத்து ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்து, 25 நாள்கள் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலில் 30 மில்லி எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், குருவிக்கண் நோய் குணமாகும். மேற்சொன்ன இலைகளுக்கு மாற்றாகத் துளசி, வேம்பு இலைகளை மட்டும் ஒரு கிலோ அளவில் எடுத்துப் பயன்படுத்தலாம்.
குளிர்காலங்களில் இலைகளின்மீது `பவுடர்’ பூசியதைப் போன்று வெண்மை படர்ந்து காணப்படும். இதற்குப் பூண்டு, வெங்காயம் கரைசலைத் தெளிக்கலாம். மிளகாய்ப் பயிரில், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்குச் சர்வரோக நிவாரணியாக இருப்பது சீமைக்கருவேல்தான். சீமைக்கருவேல் இலை, காய்களைத் தலா ஒரு கிலோ எடுத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் `10 நாள்கள் ஊற வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு 200 மில்லி கரைசலை எடுத்து, 1 லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்து 25 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, இந்தக் கரைசலில் 30 மில்லி எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், அனைத்துவகையான பூச்சிகளும் கட்டுப்படும்.
இலைச்சுருட்டு நோய்
பொதுவாகப் பூக்கள், காய்கள் உருவாகிற சமயத்தில் செடிகளுக்கு உணவு தயாரிக்க அதிகளவில் பச்சையம் தேவைப்படும். அதனால், இலைகள் அதிகமாக உருவாகும். இலைகள் அதிகரிப்பதால், பூச்சிகளும் அணிவகுத்து வரக்கூடும். அந்தச் சமயத்தில், தக்க பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு பயிரைக் காக்க வேண்டியது நம் கடமை. இலைப்பேன், மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சி ஆகியவைதான் இலைகளை அதிகமாகத் தாக்குகின்றன. இலைப்பேன் மிளகாய் இலைகளில் அமர்ந்து இலைகளை மேல்நோக்கிச் சுருட்டும். இலைகள் மேல்நோக்கி சுருண்டு, கப்புகள்போல் காணப்பட்டால் அது இலைப்பேன் தாக்குதல்.
இலைப்பேன் தாக்குதலுக்கு வேப்பெண்ணெய் மருந்து நல்ல நிவாரணம் தரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இலைகள் ஒன்றிரண்டு சுருளத் தொடங்கியவுடனே வேப்பெண்ணெய் மருந்தைத் தெளித்துவிட வேண்டும். தாக்குதல் அதிகமான பிறகு, தெளிப்பதால் பெரிய பலன் கிடைக்காது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இலைகள் சுருண்டுவிட்டால், அதை எந்த ரசாயனப் பூச்சிக்கொல்லியாலும் கூட கட்டுப்படுத்த முடியாது.
மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சி இலைகளைக் கீழ்நோக்கிச் சுருட்டும். மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சி தாக்குதலைத் தடுக்க, மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். ஆடு தீண்டாப்பாளை, ஆடாதொடை, எருக்கன், புங்கன் போன்ற தாவரங்களின் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைப் பூச்சிவிரட்டி மற்றும் வேப்பெண்ணெய் மருந்து ஆகியவற்றை மாற்றி மாற்றித் தெளித்தால், மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சிகளை விரட்டி விடலாம்.
இன்னும் பல தகவல்களோட அடுத்த பகுதியில சந்திக்கலாம். அதுவரை உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- வளரும்
source https://www.vikatan.com/news/agriculture/how-to-cultivate-chilli-in-terrace-garden-veetukkul-vivasayam-13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக