Ad

புதன், 30 டிசம்பர், 2020

சிவகங்கை : `வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஊதியம், இலவசம் என்றாகாது!’ - கமல்ஹாசன்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்த கமல்ஹாசன், பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது பேசிய அவர், ``மகளிர் நினைத்தால் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வர முடியும். ஆண்களை விட பெண்கள் தான் வாக்கு அளிக்கும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

கமலஹாசன்

அவர்கள் வங்கி கணக்கிற்கு வழங்கும் பணம் இலவசம் என்றாகாது. 100 நாள் வேலை திட்டம் என்பது ஒரு நல்ல திட்டம். பிக்பாஸ் வீட்டில் நானும் ஸ்நேகனும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல் தான் பணி செய்கிறோம். பெண்களும் தங்களை விவசாயி என்று சொல்லி உயர்த்திக்கொள்ள வேண்டும். எங்கள் ஆட்சியில் விவசாயத்திலும், விஞ்ஞானத்திலும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படும். நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும். வாழும் போதே நரகத்தை பார்வையிட வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்கு சென்றுவரலாம். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது.

Also Read: மதுரை: `எம்.ஜி.ஆர் மடியில் இருந்தவர்கள் எல்லாம் அவர் வாரிசாக முடியாது!’ - செல்லூர் ராஜூ

அரசு மருத்துவமனை சென்றால் மீண்டு வருவதே சிரமான ஒன்று. அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கும் பணங்களை கொள்ளை அடிப்பதால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. சுதந்திரத்துக்கு முன் வெள்ளையனே வெளியேறு என்று சொல்வார்கள். தற்போது மக்கள் நீதி மய்யம் கொள்ளையனே வெளியேறு என்ற கொள்கையை கையிலெடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை, மரம் வெட்டி கடத்தல் அதிகளவு நடைபெற்றுள்ளது. அதை எதிர்க்காத மக்களும், நானும் ஒரு காரணம். இவை அனைத்தையும் மாற்ற வேண்டும். எங்களை மனதில் வைத்தால் நாளை நமதே" என்றார்.

கமலஹாசன்

முன்னதாக திருப்பத்தூர் ஒன்றியத்தில் பேசியபோது, ``நான் செல்லுமிடம் எல்லாம் இந்த அன்பு பொங்கி வழிகிறது. இது நான் செய்த பாக்கியம். மாற்றத்திற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பது இந்த கூட்டம் உறுதிப்படுத்துகிறது. நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க கூட அவர்கள் யோசிப்பார்கள். நேர்மை என்பது தான் எங்கள் பலம். அது நமது பலமாக மாற வேண்டும் என்பது என் ஆசை. உங்கள் ஓட்டு என்பதுதான் உங்கள் உரிமை. அதை கடமை என்றும் நினைத்து நீங்கள் செய்தாக வேண்டும்” என்றார்.

Also Read: திருச்சி: `பிரசாரம் தொடங்கும் முன்பே உடைந்த கண்ணாடி!’-தொண்டர்கள் மனநிலையை மாற்றிய கமல்



source https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-campaign-in-sivaganga-district-for-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக