Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

`இனிப்பான ஆதரவு’ - 16 டன் அன்னாசிப் பழத்தை டெல்லிக்கு அனுப்பிய கேரள விவசாயிகள்!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடிவருகின்றனர். `டெல்லி சலோ’ என்ற பெயரில் அவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்துவருகிறது. மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பலகட்ட போராட்டங்களில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

அந்தவகையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கேரள அன்னாசிப் பழ விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், 16 டன் அன்னாசிப் பழத்தை லாரிகள் அனுப்பியிருக்கிறார். `அன்னாசி நகரம்’ என்றழைக்கப்படும் கேரளாவின் வழக்குளம் (Vazhakulam) பகுதியிலிருந்து அன்னாசிப் பழங்களை ஏற்றிய லாரிகளை அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 24) இரவு கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

Also Read: `வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை!’ - ராகுல் காந்தி

அன்னாசிப் பழங்களுக்கான செலவு, கேரளாவிலிருந்து டெல்லி வரையிலான லாரி வாடகை ஆகியவற்றைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது கேரள அன்னாசிப் பழ விவசாயிகள் சங்கம். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு இந்த அன்னாசிப் பழங்கள் இலவசமாக விநியோகிக்கப்படவிருக்கின்றன. கேரள எம்.பி-க்களான டீன் குரியகோஸ், கே.கே.ராகேஷ் மற்றும் டெல்லி குருத்வாராவைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் ஆகியோர் அன்னாசிப் பழங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

இது குறித்துப் பேசிய கேரள அன்னாசிப் பழ வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் தோட்டுமரியல், ``வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் இந்தப் போராட்டம், நமது நாட்டின் வரலாற்றிலேயே விவசாயிகள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டம். நமக்காகப் போராடிவரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது தார்மிகக் கடமை’’ என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/social-affairs/protest/kerala-farmers-send-16-tonnes-of-pineapple-to-delhi-protesting-site

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக