Ad

சனி, 26 டிசம்பர், 2020

சோனம் கபூரை அனுராக் காஷ்யப் `நிஜமாகவே' கடத்தினால்?! சர்ச்சையைக் கிளப்பும் #AKvsAK!

ஒரு ரியாலிட்டி ஷோவில் நடிகர் அனில் கபூர், இயக்குநர் அனுராக் காஷ்யப்பை அவமானப்படுத்திவிட, அது அனுராக்கின் கரியரில் பிரச்னைகளைக் கிளப்புகிறது. பழிக்குப் பழி வாங்க, அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூரைக் கடத்திவிடுகிறார். விடிவதற்குள் சோனமை 'நிஜமாகவே' மீட்கப் போராடும் 'ஹீரோ' அனில் கபூரும் கூடவே தன் உதவியாளருடன் அதைப் படம்பிடித்தவாறே சுற்றும் 'வில்லன்' அனுராகும் இந்தக் கதையை எப்படி முடித்தார்கள் என்பதை செம பரபரப்புடன் டார்க் ஹியூமர், ஏகப்பட்ட சர்ச்சையான வசனங்கள் கலந்து வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறது இந்த #AKvsAK (அனில் கபூர் v அனுராக் காஷ்யப்).
#AKvsAK

பெரிய திரைக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்திருக்கின்றன ஓடிடி-யில் வெளியாகும் படங்களும் வெப் சிரீஸ்களும். கதை மற்றும் அது நடக்கும் களத்தில் வித்தியாசங்கள், பெரிய திரையில் சினிமாவாக யோசிக்க முடியாத விஷயங்களைத் தொடு திரையில் சுலபமாகக் கையாளுதல், காட்சிப்படுத்துதல் என சினிமா கலையின் புதியதொரு ஒரு பரிணாமமாக ஓடிடி நீள்கிறது. நடிகர்களும் இயக்குநர்களும் எந்தவித இமேஜும் இன்னபிற எழுதப்படாத விதிகளையும் மதிக்காமல் துணிந்து தேர்ந்தெடுக்கும் ஸ்க்ரிப்ட்களும் அதற்கு அவர்கள் போடும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. கொரோனா செய்த ஒரே நல்ல விஷயம் ஓடிடி-யை இந்தியாவில் எழுச்சி பெற வைத்ததுதான்.

இவை அனைத்துக்கும் சான்றாக வந்திருக்கும் இன்னொரு பரீட்சார்த்த முயற்சிதான் விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் அனில் கபூர், அனுராக் காஷ்யப் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'AKvsAK' படம்.

#AKvsAK

மெட்டா (Meta) படங்கள் இந்திய சினிமாவில் குறைவுதான். அதாவது இது படம்தான் என்பதையும் இதில் நடிக்கும் பாத்திரங்களும் அதை உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதையும் மெட்டா சினிமா எனலாம். 'டெட்பூல்' (Deadpool) இதற்கு ஆகச்சிறந்த ஓர் உதாரணம். கதாபாத்திரங்கள் உலவும் உலகின் நான்காம் சுவரான (Fourth Wall) திரையைத் தாண்டி படம் பார்க்கும் நம்முடன் கதாபாத்திரங்கள் உரையாடல் நிகழ்த்துவது, சினிமாவுக்குள் சினிமா எடுப்பது, கேம் ஒன்றுக்குள் நுழைந்து சாகசங்கள் செய்வது என இவை அனைத்துமே ஒருவகையான மெட்டாவுக்குள் அடங்கும் பரீட்சார்த்த முயற்சிகள்தான்.

இந்தப் படத்தில் அனில் கபூர், அனுராக் காஷ்யப், சோனம் கபூர், ஹர்ஷ்வர்தன் கபூர், போனி கபூர் என எல்லோருமே அவர்களாகவே, தங்களின் நிஜங்களாகவே திரையில் தோன்றுகிறார்கள். படத்தின் கதை நிஜமாகவே அவர்களின் வாழ்வில் நடக்கும் ஒன்றாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
#AKvsAK

ஈகோ மோதலில், கமர்ஷியல் பட நாயகன் பெரியவனா, பரீட்சார்த்த படங்களைக் கொடுத்து அந்தக் கலையை தன் வாழ்க்கையாக நினைக்கும் ஓர் இயக்குநர் பெரியவனா? தெரிந்துகொள்ள ரீல் ஹீரோவுக்கு நிஜ ஹீரோவாகும் வாய்ப்பை அளிக்கிறார் அந்த இயக்குநர். அவர் பெண்ணைக் கடத்தி வைத்துக்கொண்டு விடிவதற்குள் அவளைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார். நடக்கும் அனைத்து சம்பவங்களையும் (போன் கால்கள் உட்பட) தன் உதவியாளரை வைத்து டாக்குமென்டரிபோல படம் எடுக்கிறார். இறுதியில் யார் இதில் வென்றார்கள்? எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்து 'வாவ்' போட வைக்கிறார் இயக்குநர்.

முதலில் இப்படியான ஒரு கதையை எழுதிய அவினாஷ் சம்பத்துக்கும், அவருடன் சேர்ந்து திரைக்கதை அமைத்து இயக்கிய விக்ரமாதித்ய மோத்வானேவுக்கும் பாராட்டுகள். தன் குருநாதர் அனுராக் காஷ்யப்பையே வசனங்களும் எழுத வைத்து நடிக்கவும் வைத்தது நல்ல முடிவு! அதிலும் விக்ரம், 'Udaan', 'Lootera', 'Trapped', 'Bhavesh Joshi' எனத் தொடர்ந்து ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் இயங்குவதெல்லாம் ஒரு சில கலைஞர்களால் மட்டுமே முடிந்த விஷயம். 'AKvsAK' கதையை 2013-ல் படமாக்க எடுக்க நினைத்த அவினாஷ் அப்போதே ஷாகித் கபூரையும் அனுராக் காஷ்யப்பையும் வைத்து இதை எடுக்கத் திட்டமிட அது நடக்காமல் போயிருக்கிறது. அது ஒருவகையில் நல்லதுதான் எனத் தற்போது நிரூபித்திருக்கிறார் அனில் கபூர்.

#AKvsAK

அத்தனை உழைப்பைக் கொட்டியிருக்கிறார் அனில். ஒரே காஸ்ட்யூமில் ரோட்டில் உருண்டு பிரண்டு, ரயிலைத் துரத்திப் பிடித்து, காரில் அடிபட்டு, போலீஸ் ஸ்டேஷனில், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் காமெடி பீஸாகி, மேடையில் டான்ஸாடி, அப்பாவாகக் கசிந்துருகி, கோபத்துடன் வெடித்துச் சிதறி எனத் தன் நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார்.

#AKvsAK
1985-ல் அவர் நடிப்பில் வெளியான 'யுத்' (Yudh - யுத்தம்) படத்தில் 'ஜக்காஸ்' (Ek Dum Jhakaas) என்ற வசனம் பிரபலம். (இங்கே சத்யராஜ் 'தகிடு தகிடு' என்பதுபோல!) இந்தப் படத்திலும் அந்த வார்த்தை அடிக்கடி வருகிறது. 'ஜக்காஸ்' என்பதற்கு 'Fantastic' என்று அர்த்தமாம். உண்மையாகவே AK-வாக 'ஜக்காஸ்' அனில் கபூர்!

அனில் கபூர் ஓர் எல்லைக்குச் சென்றால், அனுராக் இங்கே வேறொரு வழியில் இம்ப்ரெஸ் செய்கிறார். நிஜ வாழ்வில், தன் இயக்கத்தில் 'Allwyn Kalicharan' என்ற படத்தில் அனில் கபூர் நடிக்க முடிவு செய்துவிட்டு பின்னர் பின்வாங்கியதை எல்லாம் இந்தப் படத்தில் புகுத்தி கலகம் செய்திருக்கிறார். அனுராக்கின் கனவுப் படமான அது இதுவரை எடுக்கப்படாமலே போனதுக்கு அனில் கபூர்தான் காரணம் என்ற கோபம் இந்த 'AKvsAK'வில் அனுராக்கிடம் வெளிப்படுகிறது. இது ஒரு சாம்பிள்தான். இதுபோல எண்ணற்ற உண்மை நிகழ்வுகளையும் பாலிவுட்டின் தவறுகளையும் தகிடுதட்டங்களையும், நெப்போட்டிஸத்தையும், தன் மேல் எல்லோரும் வைக்கும் விமர்சனங்களையும் 'ஜஸ்ட் லைக் தட்' வசனங்கள் மூலம் சீண்டியிருக்கிறார் அனுராக். அதாவது 'பீப் சவுண்டு' போடாமலே தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார் எனலாம். சர்ச்சைதான் என்றாலும் இதுதான் 'இது படமல்ல நிஜம்' என உணரவைக்கிறது.

#AKvsAK
அதிலும் வெளிப்படையாக அவரே அவரை சிறுமைப்படுத்திக்கொண்டு, ஹிட் இயக்குநரான தன் தம்பிக்கு இருக்கும் புகழ்கூட தனக்கு இல்லை என ஒப்புக்கொள்வதெல்லாம்... வெல்டன் அனுராக் காஷ்யப் எனும் மற்றொரு AK!

துணை நடிகர்களாக சோனம் கபூர், ஹர்ஷ்வர்தன் கபூர், போனி கபூர், அனுராக்கின் அசிஸ்டென்டாக வரும் யோகிதா என அனைவரும் ஈகோ பார்க்காமல் ஸ்க்ரிப்டுக்கும் அதன் நோக்கத்துக்கும் மரியாதை அளித்து நடித்திருக்கின்றனர். 'சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே' எனப் போடாமல், 'அனைத்துமே நிஜம்' என டிஸ்க்ளைமர் போடும் அளவுக்கு நிஜத்துக்கு அருகில் சென்று படமாக்கியிருக்கிறார்கள். ஒரே கேமராவில்தான் படம் நகர்கிறது என்றாலும் அந்த அயர்ச்சி எங்குமே தென்படவில்லை.

#AKvsAK

படத்தின் பிரச்னை என்னவென்றால், கடைசியில் வரும் அந்த ட்விஸ்ட்தான். நாம் யூகிக்காத ஒன்றைக் காட்ட முற்படுவது சரிதான். ஆனால், அந்த ட்விஸ்ட்தான் இயக்குநர் இதுவரை கட்டியதை எல்லாம் உடைத்து சுக்கு நூறாக்கியிருக்கிறது. திரையில் அது ஒரு மாஸ் மொமன்ட் என்றாலும் எடுத்துக்கொண்ட கருவுக்கும் களத்துக்கும் சற்றே பொருந்தாமல் மற்றுமொரு கமர்ஷியல் படமாக இதையும் முடிய வைத்திருக்கிறது.

கைத்தட்டல் பெறுவது ஓகே, ஆனால் உட்கார்ந்து யோசித்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்டிற்கு கிளைமாக்ஸையும் கொஞ்சம் மாற்றி யோசித்து இருக்கலாமே விக்ரம் சார்?!
#AKvsAK
எது எப்படியோ 108 நிமிடங்கள் ஓடும் ஒரு பரபர த்ரில்லரான இந்தப் படத்தையும் அதன் இரண்டு 'AK'களையும் தாராளமாகப் பாராட்டலாம்!


source https://cinema.vikatan.com/bollywood/ak-vs-ak-starring-anil-kapoor-and-anurag-kashyap-netflix-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக