நாகப்பட்டினத்துக்கும் மயிலாடுதுறை கோட்டத்துக்கும் இடையே காரைக்கால் மாவட்டம் அமைந்திருப்பதால் மாவட்ட அலுவலர்களைச் சந்திப்பது மயிலாடுதுறை கோட்ட மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது. எனவே, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பைக் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஜூலை 15 -ம் தேதி மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதாவும், எஸ்.பி-யாக ஸ்ரீ நாதாவும் நியமிக்கப்பட்டனர். சிறப்பு அதிகாரி லலிதா மாவட்ட எல்லைகளை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டார்.
Also Read: மயிலாடுதுறை: `நடிகர் விஜய் அரசியலுக்கு வரணும்' - மொட்டையடித்து ரசிகர்கள் பிரார்த்தனை!
இந்தப் பணிகள் நிறைவடைந்தநிலையில், தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறையை முறைப்படி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இதற்கான விழா மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கைத்தறித்துறை அமைச்சர்
ஓ.எஸ். மணியன் பேசுகையில்,``இந்தப் புதிய மாவட்டம் தொடங்கியதன் காரணமாக பொதுமக்களுக்கு நிறைய வசதிகள் ஏற்படும். அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய வசதிகள் ஏற்படும். சீர்காழி, வேதாரண்யத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியர் அலுவலகங்கள் இன்று முதல் செயல்படும்.
கலெக்டர் அலுவலகம் கட்ட மரியாதைக்குரிய தருமபுரம் ஆதீனம் அவர்கள் 26 ஏக்கர் நிலம் தந்து உதவியிருக்கிறார். அந்த நிலத்தைக் கையகப்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. மிக மிக விரைவில் அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கும்" என்று தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் உதயமானதை அடுத்து, பொதுமக்கள் இனிப்புகளைப் பரிமாறி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/thirty-eighth-district-of-tn-cm-eps-officially-inaugurates-mayiladuthurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக