புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7வயது சிறுமி, கடந்த ஜூலை 30ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சாமுவேல்(எ)ராஜாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுக் குற்றத்தைச் செய்தது ராஜா என உறுதியானதுடன் போலீஸார் ராஜவைக் கைது செய்தனர்.
குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் துவங்கி பல்வேறு அமைப்பினரும் தங்களது கண்டனங்களை எழுப்பினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ததோடு, குற்றவாளிக்கு உரியத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டு 3 மாத காலத்திற்குள் அரசு தரப்பு விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் 29.12.20 இந்த வழக்கானது இறுதித் தீர்ப்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, "சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்காகப் பிரிவு 302ன் கீழ் மரண தண்டனையும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தச் சட்டம் 2019ன் கீழ் இரண்டு மரண தண்டனைகளையும் என மொத்தம் மூன்று மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.
அதோடு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் கால சிறைத் தண்டனையும், பிரிவு 323ன் கீழ் 7வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் அதனைக் கட்டத்தவறினால் 2 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பிரிவு 201ன் கீழ் 7 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்டத்தவறினால் 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் எனக் குற்றவாளி ராஜாவுக்கு அடுத்தடுத்தடுத்த தண்டனைகளை விதித்து அதிரடி தீர்ப்பை வெளியிட்டார். அதோடு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.5,00,000 இழப்பீடு வழங்கியும் உத்தரவிட்டார்.
தீர்ப்பிற்கு முன்னதாக குற்றவாளியை நீதிபதி பேச அனுமதித்த போது, குற்றவாளி ராஜா, "அப்பா, அம்மாவை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னை விட்டால் அவர்களுக்கு வேறு யாருமில்லை. எனக்குக் குறைவான தண்டனை கொடுங்கள்” என்று கூறி கெஞ்சினார். நீதிபதி சத்யா, "குற்றம் செய்வதற்கு முன்பு ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை” என்று கூறிவிட்டு தனது தீர்ப்பினை வாசித்தார். கடந்த ஜூன் மாதம் குற்றம் நடைபெற்ற நிலையில், 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அதிரடித் தீர்ப்பால், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆறுதல் அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.
சிறுமியின் உறவினர் விஜய், "பிஞ்சுக் குழந்தையின் முகத்தைச் சிதைத்து கொடூரமாகக் கொலை செய்தான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும் அந்த நாளுக்காகத் தான் ஏங்கிக்கொண்டிருந்தோம். எங்களுடைய பிள்ளை எங்களுக்கு இனி கிடைக்கப்போவதில்லை. அவனால், இனி எந்த பிள்ளைக்கும் இவனால் பாதிப்பு நேராது. இந்த தீர்ப்பு மனசுக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்திருக்கு. சிறுமிகளை வன்கொடுமை செய்ய நினைக்கும் கயவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பாடமாக இருக்கும்" என்றார்.
கடந்த ஜூலையில் அரசு மருத்துவனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற போது குற்றவாளி ராஜா தப்பித்து ஓடினார். போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு மாலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது ராஜாவிற்கு மரண தண்டனை கிடைத்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/in-pudukottai-girl-murder-case-man-gets-three-death-sentences
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக