`நதிக்கரை நாகரீகத்தை சாக்கடை கரை நாகரீகமாக மாற்றிய ஊழல் அரசியலை தூக்கியடிக்கும், அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் செயல்படும்’ என பரமக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருமயம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம், பரமக்குடி காந்திசிலை, கிருஷ்ணா பேட்டை, பொன்னையாபுரம், மணிநகர், பார்த்திபனூர் பகுதிகளிலும் திறந்த வேனில் சென்றபடி பிரசாரம் மேற்கொண்டார். எமனேஸ்வரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், ''வணக்கம், 'என் ' எமனேஸ்வரத்திற்கு வணக்கம். நான் சிறுபிள்ளையாக இருந்த போது இங்கே நடந்து வந்திருக்கிறேன். இந்த ஆற்றுப் படுகையில் குதிரையேற்றம் பயின்றிருக்கிறேன். என் குடும்பம் பரமக்குடியில் ரொம்ப பெரியது. இன்று அவர்களுடன் பேசும் இந்த அரிய வாய்ப்பை நான் இழப்பதாக இல்லை.
இங்கே ஓய்ந்து போயிருக்கும் தறிகளை எல்லாம் மீண்டும் இயக்க செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் சூழுரை. அதனை செய்து காட்டுவோம். இங்கு நொடித்து போயிருக்கும் அந்த தொழில்களை மீட்டெடுப்போம். இங்கே மகளிருக்காக நாங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை அவர்கள் கேட்க வேண்டும். வேறு எந்த கட்சிகளும் சிந்திக்காத திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தவும் முனைப்பு கொண்டிருக்கிறோம். சூளுரை கொண்டிருக்கிறோம். இது வாக்குறுதி அல்ல. செய்யனும் என மனசுல நினைச்சுகிட்டு கடமையாக வந்திருக்கிறோம். பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பரமக்குடியில் திறமை மேம்பாட்டு மையம் ஒன்றை உருவாக்கி வருகிறோம்.
இது வேலை தேடி அலையும் தொழிலாளர்களை உருவாக்கும் மையம் அல்ல. பலருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரக் கூடிய முதலாளிகளாக மாற்றும் மையம். அது நடக்கும். அதனை நடத்தி காட்டுவோம். பரமக்குடி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு ஊர்களையும், பெரிய ஊர்களுக்கு நிகராக நவீன வசதிகளும் கொண்ட ஊர்களாக மாற்றும் திட்டம் எங்கள் கையில் உள்ளது. இது தேர்தலுக்காக சொல்லப்படுவை அல்ல. நான் அரசியலுக்கு வந்ததே இவற்றை செய்து காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அதை செய்து காட்டுவேன். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இங்கு மலர்ந்த முகத்துடன் திரண்டவர்களே சான்று.
நான் உங்கள் ஊர் பிள்ளை. அந்த உரிமையில் கேட்கவில்லை. எங்கள் கட்சியின் திறமைக்காக கேட்கிறோம். பல திறமையாளர்களை கூட்டி இங்கே குவித்திருக்கிறோம். அவர்கள் எல்லாம் செயல்பட துவங்கினால் பரமக்குடி சீரமைக்கப்படும். பரமக்குடி மட்டுமல்ல தமிழகமே சீரமைக்கப்படும். பரமக்குடி பனிஷ்மெண்ட் பகுதி என்பதெல்லாம் மாறி பரமக்குடியிலா வேலை பார்க்கிறீர்கள் என ஆச்சரியப்பட்டு கேட்க வைப்போம். ஏன் எனில் இதெல்லாம் நதிக்கரை நாகரீகம் கொண்ட ஊர். ஆனால் அதையெல்லாம் சாக்கடை கரை நாகரீகமாக மாற்றியது ஊழல் அரசியல்தான். அதை அகற்றுவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. நான் சினிமா நட்சத்திரமாக இருக்கலாம். இனி உங்கள் வீட்டில் எரியும் சிறு விளக்காக இருக்க அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்து ஆதரித்தால் நாளை நமதே.
இந்த ஆற்றுப்படுகையில் 2 அடி தோண்டினால் குடம் குடமாக தண்ணீர் கிடைக்கும். ஆற்றில் விளையாடிவிட்டு கையாலே தோண்டி தண்ணீர் எடுத்து குடிக்கலாம். ஆனால் இப்போது 100 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் சாக்கடை எல்லாம் இங்கே கொண்டுவந்து விட்டதுதான். இப்ப 400 அடி தோண்டினாலும் குடிநீர் கிடைக்கல என மக்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணம் நிர்வாகம்தான். அத்தகைய நிர்வாகத்தை நீக்குவதற்கான ஒரு அரசியல் புரட்சி அரசியல் கட்சி உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அதனை தூக்கி பிடியுங்கள் நாளை நமதாகும்'' என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kamalhaasan-campaign-in-paramakudi-constitution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக