‘நங்காய்’ என்னும் காப்பி ராகத்தில் அமைந்த அட்டகாசமான பாடலோடு இன்றைய பொழுது விடிந்தது. மைக்கேல் ஜாக்சன் இருந்திருந்தால், தன்னுடைய இசை தமிழிலும் ஒலிப்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார். நடன கோஷ்டியில் ‘அனிதாவின் குச்சிப்புடி நடனத்தை மிஸ் செய்கிறோமே...’ என்று எத்தனை பேர் நினைத்தீர்கள்?
நாமினேஷன் சடங்கு துவங்கியது. ஆரி இந்த வார கேப்டன் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. ‘வட போச்சே’ என்று ஜாலியாக அங்கலாய்த்த பாலாஜியை இம்மாதிரியான சமயங்களில்தான் அதிகம் ரசிக்க முடிகிறது. ‘இத வெச்சுதானே இத்தனை நாள் வண்டியை ஓட்டிட்டு இருந்தேன்’ என்று கூலாக சொன்னார் பாலா. ‘ஓப்பன் நாமினேஷன்’ என்று ஆயுதத்தை மீண்டும் பிரயோகித்தார் பிக்பாஸ். ‘அட்ரா சக்கை’ என்று உற்சாகமடைந்தார் பாலாஜி.
இதில் ஆஜித் மற்றும் ஷிவானியின் பெயர்கள் அதிக முறை வந்ததில் ஆச்சர்யமில்லை. இருவருமே தங்களின் அடிப்படையான குணாதிசயத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளிக்கிறார்கள். ரத்தபூமியில் அவர்கள் ‘தேமே’வென்றிருப்பதை பார்க்க ஒரு பக்கம் எரிச்சலாக வந்தாலும் இன்னொரு பக்கம் பாவமாகவே இருக்கிறது. அவர்களின் இயல்பு அதுதான் என்றால் என்ன செய்ய முடியும்?
பிரபலமான முகம் என்பதாலேயே எல்கேஜி பசங்களைக் கூட பிக்பாஸ் போட்டியாளராக அழைத்து வந்து விடுவதின் பிரச்னை இது. ‘ஷி...’ என்று எவராவது ஆரம்பித்தாலே அவரை ‘குறுகுறுவென்று’ உற்றுப்பார்க்கும் ஷிவானியின் பார்வை பல சமயங்களில் நம்மை பயமுறுத்துகிறது.
‘வலிமையான போட்டியாளர், எதிர்க்கட்சி’ என்றெல்லாம் சொல்லி ‘ரம்யா’வை நாமினேட் செய்த ரியோ, (இதற்கும் சிரிப்பு) ‘முதன்முறை’ என்று சொல்லி ஷிவானியை நாமினேட் செய்தார். ரியோவை காப்பிடியத்து ‘ஷிவானியை முதன்முறையா நாமினேட் செய்றேன்’ என்றார் கேபி. ‘என்னை less competitive’-ன்னு ரம்யா சொன்னது எனக்குப் பிடிக்கலை’ என்கிற காரணத்தைச் சொல்லி ரம்யாவை நாமினேட் செய்தார் ஆஜித். (வர வர உன் அழும்பு அதிகமாயிட்டே போகுதுடா தம்பி!).
‘ஈடுபாடு குறைவு’ என்று தயங்கிக் கொண்டே ஆஜித்தை நாமினேட் செய்த ஷிவானி. "அதுதான் அவரோட இயல்பு –ன்றது புரியுது. ஆனா பிக்பாஸ் வீட்ல அது செட் ஆகாதே" என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார். ‘மைண்ட் வாய்ஸ்-ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டோம் போல’ என்பது ஷிவானிக்கே உள்ளுற தெரிந்ததால் அவருக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆஜித்திற்காக ஷிவானி சொன்ன காரணம் அவருக்குத்தான் அதிகம் பொருந்தும்.
‘கிச்சன் டீமிற்கு வருவதில் ஆர்வமே காட்டியதில்லை’ என்று ஷிவானிக்கு காரணம் சொன்ன ஆரி, “காபி டாஸ்க்கில் ஜட்ஜ்மென்ட் தெளிவாக இல்லை" என்கிற உப்பு பெறாத காரணத்தைச் சொல்லி சோமுவை நாமினேட் செய்தார். இந்த முறையும் ‘அன்பு கேங்’ கட்டுக்கோப்பாக இருந்து எதிர் அணியை மட்டுமே டார்கெட் செய்தார்கள். (விதை... அர்ச்சனா போட்டது!)
ஆக… இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் ஷிவானி, ஆஜித், ரம்யா, சோம் மற்றும் கேபி.
"ஆரி ப்ரோ... என்னை நாமினேட் பண்ணாதது ஆச்சரியமா இருக்கு” என்று அகம் மகிழ்ந்தார் ஆஜித். "உன்னோட இன்வால்மென்ட் பார்த்திருப்பார். அதை விடவும் ஒரு காமெடி நடந்தது பார்த்தேல்ல… காபி நல்லால்லைன்றதைப் போய் ஒரு காரணமா சொன்னார் பாரு. ஹய்யோ... ஹய்யோ... செம காமெடி" என்று நக்கல் செய்தார் பாலாஜி.
தன் மீது சொல்லப்பட்ட காரணத்தை ஆரியிடமே விசாரித்தார் சோம். “என்னை ஜட்ஜா இருக்க சொன்னாங்க. எனக்குத் தோணினதை சொன்னேன். மேலும் எனக்கு காபி சாப்பிட பிடிக்காது’' என்று தன் தரப்பு நியாயங்களை சோம் சொல்ல, “நீ சொன்ன தீர்ப்பு ஒரு வரில இருந்தது. தெளிவான விளக்கம் அதில் இல்ல. நீயே சொல்ற காபி பத்தி உனக்கு தெரியாதுன்னு. அப்ப நீ சொன்ன தீர்ப்பு எப்படி சரியா இருக்கும்?'' என்று லாஜிக்கலாக மடக்கினார் ஆரி. ஆரியிடம் பேசி ஜெயிப்பதென்பது மலையைக் கட்டி இழுப்பதற்கு சமமானது.
கேபி தன்னை நாமினேட் செய்தது குறித்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார் ஆஜித். "இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்வியா?" என்று கேபியிடம் கோபித்துக் கொண்டார். "இன்வால்மென்ட் இல்லைன்னு சொல்லியே என்னை சாகடிக்கிறாய்ங்க... நான் என்னதான் பண்றது. எனக்குத் தோன்றதைத்தான் பண்றேன்" என்று பிறகு பாலாஜியிடம் அனத்தினார் ஆஜித். "இந்த வாரம் போயிடுவேன். போறதுக்குள்ள சில சம்பவங்களை செய்யணும்" என்று தனக்குத்தானே ஆரூடம் சொல்லிக் கொண்டார் ஆஜித்.
“இந்த கேபி பொண்ணு டாஸ்க்லயும் சரி, வீட்டு வேலைலயும் சரி க்ரூப்ல டூப்பா பாதுகாப்பா நின்னுக்கிட்டு ஓபி அடிக்குது. அர்ச்சனா பத்தி நான் சொன்ன ஒரு கமென்ட்டை போய் அவங்க கிட்ட வத்தி வெச்சிருக்குது” என்று பதிலுக்கு கேபியைப் பற்றி ஆஜித்திடம் அனத்தினார் பாலாஜி.
இன்னொரு மூலையில் கேபி, பாலாஜியைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தார். “இவன் எந்த டீம்ல ஒழுங்கா வேலை செஞ்சான்... இவிய்ங்க வந்து என்னை குறை சொல்றாங்க... நான் என்ன பண்ணாலும் குத்தம்” என்ற கேபியின் புலம்பலை அரை நிர்வாண கோலத்தில் ‘ஆமாம்... சரியாச் சொன்னே’ என்று வழிமொழிந்து கொண்டிருந்தார் சோம்.
இன்னொரு பக்க ஈசானிய மூலையில் ஷிவானியும் ரம்யாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “சோம்-ன்ற சப்ஜெக்ட் கிட்ட இப்பல்லாம் அசைவு தெரிய ஆரம்பிச்சிருக்கு” – இதைச் சொல்வது யார் என்று பார்த்தால் ஷிவானி... (ஹிஹி). எங்கே சுற்றினாலும் ஆரியிடம் கொண்டு வந்து நிறுத்தி புறணி பேசுவதை ரம்யா ஒரு பொழுதுபோக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறார். "அவர் செய்யறதையெல்லாம் மக்கள் ரசிக்கறாங்கங்கன்னு நெனச்சிட்டு இருக்கார் போல. அந்த காலர் சொன்ன ‘அம்பி’ன்றதுல பயங்கரமா ஒரு உள்குத்து இருக்கு” என்றார் ரம்யா.
“ஆரி சரியாத்தான் நடந்துக்கிறார். குரூப்பிஸத்துலயும் அவர் இல்ல. ஆனா அவருக்குன்னு வரும் போது தன்னை பாதுகாத்துக்கிட்டு மத்தவங்க மேல பழி போட்டுடறார்” என்று ஷிவானி சொன்னதை, "ஆமாம்... கிடைக்கற கேப்ல எல்லாம் கிடா வெட்டிடறாரு” என்று வழிமொழிந்தார் ரம்யா.
"காபி நல்லா இல்லைன்னு சொன்னது ஒரு குத்தமாடா?” என்று ரியோ கிண்டலடிக்க ‘எரிச்சலா இருக்கு’ என்று வழிமொழிந்தார் சோம். ‘காரணம் வேற எதுவும் கிடைக்கலைன்னு உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே’ என்பதும் சோமின் எரிச்சல். "Validitation-ன்ற வார்த்தையை வெச்சு என்னை விதம் விதமா கொல்றாரு" என்று ஜாலியாக அனத்தினார் ரியோ.
அனிதா சென்றுவிட்டாலும் பருப்பு எனும் சமாச்சாரம் ‘விடாது கருப்பாக’ பி்க்பாஸ் வீட்டை துரத்திக் கொண்டிருக்கிறது. பருப்பு பிராண்ட் ஒன்றின் டாஸ்க். மக்கள் இட்லிகளையும் வடைகளையும் சுட்டுத்தள்ள வேண்டுமாம்.
'இது என்ன புது மாடல் மிக்ஸியா இருக்கு... ஆன் பட்டன் எங்க இருக்குன்னு தெரியலையே?' என்று உரலைப் பார்த்து வியந்து கொண்டிருந்தார் ஷிவானி. அம்மணி அம்மியை வைத்து சட்னி அரைத்துக் கொண்டிருந்த அரிய காட்சியைக் கூட இன்று பார்க்க முடிந்தது. சரியான போஸில் உட்கார்ந்து உரலைச் சுற்றிக் கொண்டிருந்தார் சோம்.
கிச்சன் ஏரியாவில் பாலாஜியும் ஆரியும் ஒருவரையொருவர் சற்று பிறாண்டிக் கொண்டார்கள். பாலாஜியின் சமையல் சேஷ்டைகளைப் பார்த்து வழக்கம் போல் உடனே ஆரியின் மண்டையில் ‘சுர்’ ஏறியது. "நீ கேப்டனா இருந்தபோது சொல்றதையெல்லாம் கேட்டு நான் பண்ணேன்ல" என்று கோபத்தைக் காட்டினார் ஆரி.
குடுகுடுவென்று முதலில் ஓடி வந்து வடை மாவை எண்ணைய்யில் போட்டார் ரம்யா. ‘அய்... வடை மாதிரியே ஒரு வஸ்து வருது’ என்று மகிழ்ந்தார் ரியோ. சம்பந்தப்பட்ட பிராண்டிற்கு ஒரு ஸ்லோகனையும் போட்டியாளர்கள் சொல்ல வேண்டும் என்பதால் ‘அரண்மணையில் இருப்பது இளவரசி… ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது இந்த இட்லி அரிசி’ என்று ஆஜித் ரைமிங்காக வடை சுட அதை உற்சாகமாக வரவேற்றார் ஆரி. (நிஷா இருந்திருந்தால் அடுக்குமொழியில் ஒரு கவியரங்கமே நடத்தியிருப்பார்).
கோணல் மாணலாகவும் தீய்ந்தும் இவர்கள் சுட்ட தோசை, வடைகளை பொறுமையாக எண்ணியதில் பாலா, ரம்யா, ரியோ, சோம் இருந்த அணி வெற்றி பெற்றது.
"நான் பாத்ரூம்ல இருந்தபோது பக்கத்து சுவத்துல இருந்து டங்டங்குன்னு சத்தம் கேட்டது. யார்ரா அது பாத்ரூம்ல வந்து மிக்ஸ்ட் மார்ஷியல் பிராக்டிஸ் பண்ணிட்டிருக்கான்னு ஆச்சரியப்பட்டேன். அப்புறம் பார்த்தா அது நம்ப ஆஜித் தம்பி" என்று சபையில் போட்டுக் கொடுத்தார் சோம். பாவம், ஆஜித் டிப்ரஷனில் இருக்கிறார் போல. ஆஜித்தை இழுத்து மடியில் போட்டு தலைமுடியைக் கோதிய ரியோ. "அப்படில்லாம் செய்யக்கூடாது... தப்பு... ஏன்னா... நானும் முன்னாடி அப்படி செஞ்சிருக்கேன்" என்று ரியோ ஜாலியாக ஆறுதல் சொன்னது சுவாரஸ்யம்.
‘மாத்தி யோசி’ என்று எதையும் மாற்றி யோசிக்காமல் ஒரு டாஸ்க்கை பிக்பாஸ் டீம் முன்வைத்தது. போட்டியாளர்கள் ஒரு சக போட்டியாளரின் நிறை, குறையைச் சொல்ல வேண்டுமாம். நிறையை அடுத்த ஆண்டிற்கும் எடுத்துச் செல்லலாமாம். குறையை மாற்றிக் கொள்ள வேண்டுமாம்.
குடுவை உடைந்து விடுமளவிற்கு குலுக்கி ஒரு சீட்டை எடுத்தார், முதலில் வந்த ஆஜித். ‘உன் தலைல ஆரின்னுதான் எழுதியிருக்கு... அதுதான் வரும்’ என்று மக்கள் ஜாலியாக மிரட்டினார்கள். ஆனால் வந்தது ஷிவானி. ‘நான் இப்படித்தான்’ என்று ஷிவானி இருப்பது பாசிட்டிவ்வாம். ‘வாக்குமூல அறையில் சென்று ஒப்பாரி வைத்தது குறையாம்’ இதுதான் ஷிவானி பற்றி ஆஜித் சொன்னது.
அடுத்து வந்த ஷிவானிக்கு ‘சோம்’ சீட்டு வந்தது. "எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி சோம் இருக்கறது நல்ல விஷயம். ஆனா அதுவே இன்னொரு வகையில் பலவீனமும் கூட. தனக்குப் பிடிச்ச ஆளுங்களுக்கு மட்டும் அவர் பாரபட்சம் காட்டுகிறார்" என்று சரியான காரணத்தை முன்வைத்தார் ஷிவானி.
சோமிற்கு அவருடைய நண்பர் ‘ரியோவின்’ பெயர் வந்தது. "பாரபட்சமில்லாத அன்பையும் நட்பையும் அவன் வாரி வழங்கறது எனக்குப் பிடிக்கும். ஆனா ஒரு கருத்தைச் சொல்லிட்டு அப்புறம் குழம்பிட்டே இருக்கறது நல்லால்லை" என்றார் சோம். அடுத்து வந்த ரியோவிற்கு அவரின் ஆரூயிர் நண்பரான (?!) பாலாஜியின் பெயர் வந்தது. "முன்தீர்மானத்துடன் அணுகுவது பலவீனம், தன்னம்பிக்கை பாலாஜியின் பலம்" என்று சுருக்கமாகவும் பாதுகாப்பாகவும் முடித்துக் கொண்டார் ரியோ.
பாலாஜிக்கு பிக்பாஸ் வீட்டின் பிரியமான எதிரியின் பெயர் வந்தது. அது ரம்யா. "எப்பவும் எல்லார்கிட்டயும் கேமை கேமா ரம்யா பார்க்கிறது நல்ல விஷயம். ஆனா சிரிச்சுக்கிட்டே ஊமைக்குத்தா குத்திட்டுப் போறதுதான் மோசமான விஷயம். கொஞ்சம் வெளிப்படையா இருக்கலாம்: என்று பாலாஜி சொன்னதற்கும் விழுந்து விழுந்து சிரித்தார் ரம்யா. தன்னுடைய 24x7 புன்னகையை ‘மேன்யூபேஃக்சரிங் டிபெஃக்ட்’ என்று வழக்கம் போல் வர்ணித்துக் கொண்டார்.
ரம்யாவிற்கு ‘கேபி’ பெயர் தாங்கிய சீட்டு வந்தது. "ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு. ஈஸியா விட்டுத் தர மாட்டாங்க. இது நல்ல விஷயம். ஆனா சில சமயங்கள்ல டக்குன்னு உடைஞ்சு உடனே விட்டுக் கொடுத்துர்றது திருத்திக்க வேண்டிய விஷயம்" என்பது ரம்யா முன்வைத்த காரணங்கள்.
யாருடைய பெயர் வந்துவிடக்கூடாது என்று பலரும் பயந்து கொண்டிருந்தார்களோ அந்தப் பெயர் ‘கேபி’க்கு வந்தது. ஆம். அகிலமே கண்டு நடுங்கும் ஆரி. “எல்லாத்துக்கும் டக்குன்னு கோபம் வர்றது பார்க்க நல்லால்லை. மத்தவங்க மேல பழி போடறதும் பிடிக்கலை" என்று சொன்ன கேபி ‘அறிவுப்பகிரல்’ எனும் விஷயத்தை ஆரியின் ப்ளஸ் பாயின்ட்டாக பார்க்கிறாராம்.
கடைசியாக வந்தவர் ஆரி. இவருக்கு ஆஜித்தின் பெயர் வந்தது. ஆஜித்திற்கு அட்வைஸ் செய்வதென்றால் ஆரிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. எனவே தொண்டையைச் செருமிக் கொண்டு ஒரு பேருரை நிகழ்த்த ஆரம்பித்தார். “ஆஜித்தின் உழைப்பு போராட்டக்குணம் இன்னமும் வளரணும். அது இல்லாம அவன் இத்தனை வாரத்திற்கு தாக்குப் பிடிச்சிருக்க முடியாது. இது நல்ல விஷயம். ஒரு கருத்தை மென்னு முழுங்காம ஆணி அடிச்ச மாதிரி சொல்லப் பழகணும். இந்த விஷயத்துல ஆஜித் மாறணும்" என்பதை விரிவாக சொல்லி முடித்தார் ஆரி.
ஆப்பிள் தோலை உறித்துக் கொண்டிருந்த ஆரியிடம், ‘அண்ணே... ஒரு சந்தேகம்’ என்று செந்திலைப் போல் வந்தார் ஆஜித். "மைனஸ் பாயின்ட் புரிஞ்சது. கொண்டு போக வேண்டிய விஷயம்னு ஒண்ணு சொன்னீங்களே. அது என்னாது?" என்று சந்தேகம் கேட்க 'இன்னமும் உழைப்பை அதிகமா போட்றா தம்பி... இது பிக்பாஸ் வீடு. பஜார்ல உஜாரா இல்லைன்னா நிஜாரை உருவிடுவாங்க. அண்ணனுக்கும் அப்படித்தான் ஆச்சு. அப்புறம் முழிச்சிக்கிட்டேன்’ என்று சொன்ன ஆரி ‘விழிப்பா இரு... இல்லைன்னா தலைல மிளகா அரைச்சுட்டு போயிடுவாங்க’ என்று தன் அறிவுரையை முடித்தார்.
ஷிவானி திக்கித் திணறி அம்மியில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்த காட்சியை மிகச்சரியாக இந்தச் சமயத்தில் இணைத்தது பிக்பாஸ் டீமின் அநியாயமான குறும்பு.
காந்தியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பாலாஜி எப்போது வேண்டுமானாலும் ரிவர்ஸ் கியர் போடலாம் என்றும் இந்த வார கேப்டன் ஆரி என்பதால் பிறாண்டலுக்கு உத்தரவாதம் என்பதையும் முன்பே எழுதியிருந்தேன். அப்படியே ஆயிற்று.
வீடு சுத்தம் செய்யும் பணியில் இடக்கு செய்யத் துவங்கினார் பாலாஜி. "எக்ஸ்ட்ரா வேலைலாம் செய்ய முடியாது. வாலண்டியர்ஸ் தரச் சொல்லு" என்பது போல் பல விஷயங்களைச் சொல்லி ஆஜித்தை அடிக்கடி கேப்டனிடம் தூது அனுப்பி திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தார் பாலாஜி. ஆரி எழுந்து வந்து விதம் விதமாக பாலாஜியை கன்வின்ஸ் செய்ய வேண்டியிருந்தது. “ஆட்கள் குறைஞ்சுட்டாங்க. வீடு அப்படியேதான் இருக்குது" என்று ரணகளத்திலும் ஆரி சொன்ன லாஜிக் காரணம் சுவாரஸ்யம். பிறகு ஒரு மாதிரியாக சமாதானத்திற்கு வந்தார்கள். சோமு உதவி செய்ய வந்தார்.
“நீ நாமினேட் பண்ண காரணத்தை நினைச்சு முதல்ல சிரிச்சிட்டு இருந்தேன். இப்பத்தான் அதுக்கான காரணம் புரிஞ்சது... சாரி’' என்று ஆரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் சோம். அவருடைய புரிதலுக்கான காரணம் என்ன என்பது தெளிவாக இல்லை. ஆரி ஏதோ விளக்கம் அளித்திருக்கிறார் போல. 'காபி மேட்டருக்காக இல்லை. பொதுவா நீ சொன்னது. கரெக்ட்டுதான்' என்று பூடகமாகவே சொல்லிக் கொண்டிருந்தார் சோம். அவரின் மன்னிப்பை நெகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் ஆரி.
ஒட்டு மொத்தத்தில் இன்றைய நாள் பெரிதான சுவாரஸ்யம் எதுவுமின்றி நகர்ந்தது. இனி வரும் நாட்களாவது சுவாரஸ்யமான அம்சங்களுடன் நம்மைக் கவருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
"இறுதியில் வெல்லும் போட்டியாளரின் பரிசுப் பணத்தை எட்டாகப் பிரித்து போட்டியாளர்களிடம் இப்போதே கொடுத்து விட்டு இன்றே ஷோவை முடித்துக் கொள்ளலாம். அத்தனை ரணக்கொடூரமாக இந்த சீஸன் சென்று கொண்டிருக்கிறது. நானும் எத்தனைநாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது. முடியல!"
(சாரி மக்களே... மைண்ட் வாய்ஸை கொஞ்சம் சத்தமா எழுதிட்டேன்).
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/this-week-nominations-bigg-boss-tamil-season-4-day-85-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக