Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!- பட்டுக்கோட்டை அதிர்ச்சி

பட்டுக்கோட்டையில் வறுமையால் பெண் ஒருவர் தனது மகள், இரண்டு பேத்திகள் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்துக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இறந்த சாந்தி

பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (48). இவருக்குச் சொந்தமான மாடிவீட்டில் மேல் பகுதியில் சாந்தி (50) என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு வாடகைக்குக் குடிவந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், மகள் துளசிதேவி (23), அவரது இரண்டு பெண் குழந்தைகளான சாரல் (2), எட்டு மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை என இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். பொமேரியன் உள்ளிட்ட இரண்டு வளர்ப்பு நாய்களையும் வளர்த்துள்ளார்.

எப்போதும் குழந்தைகள் மற்றும் நாய் குரைக்கும் சத்தம் சாந்தி வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் அவர்கள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் இல்லை. வீட்டுக்குள் இருந்து சாந்தி மற்றும் அவரது மகள் துளசிதேவி என யாரும் வெளியே வரவேயில்லை. இரவுக்கு பிறகும் குழந்தை கத்துவது உள்பட எந்த சத்தமும் இல்லாமல் இருந்ததைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இறந்த வளர்ப்பு நாய்

உடனே அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து பார்த்துள்ளனர் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. பின்னர் வீட்டின் கதவை உள்ளே உடைத்து சென்றனர். அப்போது துளசிதேவி, அவரது இரண்டு மகள்கள் கீழே படுத்திருந்தபடியே இறந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகிலேயே இரண்டு வளர்ப்பு நாய்களும் இறந்து கிடந்தன.

Also Read: சேலம்: `என்னோட முடிவுக்கு எஸ்.ஐ-தான் காரணம்!' - வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்த சாமியார்

சாந்தி, தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருந்தார். நான்கு பேர் மற்றும் இரண்டு நாய்கள் இறந்த தகவல் அப்பகுதியில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்த்து விசாரணைக்குச் சென்ற போலீஸாரே கண்கள் கலங்கியிருக்கின்றனர்.

பட்டுக்கோட்டை

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``சாந்தியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சாந்தியின் மகள் காதல் கல்யாணம் செய்து கொண்டிருப்பார் எனத் தெரிகிறது. இதனை சாந்தி உறவினர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. இதனால் உறவினர்கள் யாரும் சாந்தியின் வீட்டுக்கு வருவதில்லை. தொடர்பிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.

சாந்தி, துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்தே குடும்பம் நடந்துள்ளது. கொரோனா லாக்டெளனால் முழு சம்பளம் வரவில்லை எனத் தெரிகிறது. சின்னக் குழந்தைகள் இருப்பதால், பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே மாதம் ஒரு தொகை தேவைப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டு வாடகையும் சேர்ந்து கொண்டுள்ளது.

Also Read: தேனி: `ஆன்லைன் வகுப்பு புரியவில்லை..!' - மனமுடைந்த 10 -ம் வகுப்பு மாணவன் தற்கொலை

இதனால், வறுமையின் சூழ்நிலையிலேயே குடும்பம் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து முதலில் சாப்பாட்டில் விஷம் கலந்து தனது மகள் மற்றும் பேத்திகள், அத்துடன் இரண்டு நாய்களுக்கும் கொடுத்து சாப்பிட வைத்து கொன்றுவிட்டு, தானும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். அதன்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.

அப்பகுதியில் இதுகுறித்து விசாரித்தோம். ``சாந்தி, அவரது மகள் துளசி தேவி மற்றும் பேரக் குழந்தைகள் மீது உயிரையையே வைத்திருந்தார். துளசி தேவியின் கணவரை பற்றிய விவரம் தெரியவில்லை. அவர் இங்கு வந்ததும் இல்லை. துளசிதேவி, காதல் கல்யாணம் செய்து கொண்டதால் சாந்தியின் உறவினர்கள் இவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அதனாலேயே இங்கு வந்து அவர்கள் குடியேறினார்களா என்பதும் தெரியவில்லை.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு

மன்னார்குடியில் சாந்தியின் அக்கா மற்றும் அவரது சகோதரர் நல்ல நிலையில் இருப்பதாகத் தற்போது தெரிய வந்துள்ளது. சாந்தி வேலைக்குப் போய்விட்டு வந்ததுமே இரண்டு நாய்களும் ஓடி வந்து அவர் மீது பாசத்துடன் தாவும். அந்த அளவிற்கு பாசத்துடன் வளர்த்தார். கொஞ்ச நாள்களாகவே சிரமத்தில் இருந்ததற்கான் அறிகுறிகள் தென்பட்டது. ஆனால், விஷம் கலந்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வதற்கான தைரியம் எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

Also Read: கோவை: `இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி; மன உளைச்சல்!’ - நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

அப்படியே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாலும் நாய்க்கும் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முடிவு செய்தது ஏன் என்பது புரியவில்லை.இதனை வெறும் தற்கொலை வழக்காக முடிவு செய்து போலீஸார் இதனை முடித்து விடாமல் முழுமையான விசாரணை நடத்தி உண்மை தன்மை என்னவென வெளியே கொண்டு வர வேண்டும் என்றனர்.



source https://www.vikatan.com/news/death/4-committed-in-pattukottai-over-poverty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக