பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
போக்குவரத்து சிக்னல்களில் அல்லது சாலை ஓரங்களில் நமது வாகன ஆவணங்களைச் சோதிக்க வேண்டி, போக்குவரத்துக் காவலர்கள் நம்மைத்தடுத்து நிறுத்தும்போது, எப்போதோ டேங்க் கவரில் அல்லது டேஷ்போர்டில் வைத்த வாகனத்தின் ஆவணங்களை நாம் அவசரமாகத் தேடுவோம். அதற்குப் பதிலாக நமது வாகனத்தின் அனைத்து விதமான ஒரிஜினல் ஆவணங்களும் நமது செல்போனிலேயே எப்போதும் இருந்து, அவற்றைப் போலீஸாரிடம் நாம் காட்ட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
இன்று செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்டது. நமது வாகனம் தொடர்பான அனைத்து விதமான ஒரிஜினல் ஆவணங்களையும் நமது செல்போனில் மெய்நிகராக (Virtual) வைத்துக்கொள்ள mParivahan என்னும் மொபைல் செயலி உதவுகிறது. டிஜிட்டல் இந்தியாவின் கீழ், மொபைல் அடிப்படையிலான பயன்பாட்டின் மூலம் குடிமக்களுக்கு மேம்பட்ட சேவை அணுகலை வழங்கும் mParivahan என்னும் இந்தச் சேவையை MoRTH (Ministry of Road Transport and Highways) வழங்கிவருகிறது.
நமது ஆர்.சி மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் தொடர்புடைய விவரங்களை mParivahan செயலியின் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செல்லுபடியாகும் வகையில் NIC (National Informatics Centre) உதவியுடன் நம்மால் எளிதாக அணுக முடியும். இதற்கு mParivahan செயலியைப் பதிவிறக்கி, நிறுவினால் போதுமானது.
மோட்டார் வாகனச் சட்டம்,1988 இன் படி mparivahan இல் கிடைக்கும் ஆவணங்கள் அனைத்தையும் போக்குவரத்து அதிகாரிகள் வழங்கிய உண்மைச் சான்றிதழ்களுக்கு இணையானதாகக் கொள்ள வேண்டும் என MoRTH அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி mParivahan மூலம் வழங்கப்படும் அனைத்து வகையான ஆவணங்களும் ஒரிஜினல் ஆவணங்களாக இந்தியாவின் அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் துறைகளால் ஏற்கப்படுகின்றன.
பயன்படுத்தும் முறை:
* Android மற்றும் iOS ஆகிய இரு இயங்குதளங்களிலும் mParivahan செயலி கிடைக்கிறது. முதலில் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.
* Signup செய்து நம்மைக் குறித்த விபரங்களை உள்ளீடு செய்து நமது கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
* mParivahan இல் உள்ள My DL பிரிவில் நமது ஓட்டுநர் உரிமம் குறித்த விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் நமது மெய்நிகர் ஓட்டுநர் உரிமத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும்.
* My RC பிரிவில் பயனர்கள் வாகனத்தின் பதிவு எண்ணை உள்ளிட்டு நமது வாகனத்தின் மெய்நிகர் பதிவுச் சான்றிதழை உருவாக்கலாம்.
* வாகனத்தின் காப்பீட்டு அடிப்படை விபரங்களை உள்ளிட்டு, பயனர்கள் தங்கள் வாகனத்தின் காப்பீட்டு விபரங்களைப் பெறலாம்.
* Shared RC பிரிவில் நமது RC விபரங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
* Received RC பிரிவில் பிறர் பகிரும் வாகனங்களின் RC விபரங்களை நாம் காண முடியும்.
* RC மற்றும் DL Information பிரிவுகளில் எந்த ஒரு RC மற்றும் DL விபரங்களை நாம் காண முடியும்.
* Pay Tax பிரிவில் நாம் வாகன வரிகளைச் செலுத்தவும்,செலுத்திய வரிகளுக்கான Receipt களைப் பெறவும் முடியும்.
* Emergency Services பிரிவினை வாகனப் பழுது மற்றும் விபத்துகளின் போது உடனடி உதவிகளைப் பெற பயன்படுத்தலாம்.
mParivahan பயன்பாட்டின் முக்கிய நன்மைகள்:
1) மெய்நிகர் DL மற்றும் RC ஆகியவற்றை உருவாக்கி பயன்படுத்த முடிகிறது.
2) நமது RC மற்றும் DL விவரங்களைச் சரிபார்க்கலாம்.
3) பதிவு எண்ணை உள்ளிட்டு அனைத்து வித வாகனங்களின் மற்றும் ஒட்டுநர் உரிமங்களின் விபரங்களைக் கண்டறிய முடியும்.
4) Second Hand வாகனங்களின் விவரங்களைச் சரிபார்க்க முடியும்.
5) வாகனங்களின் காப்பீட்டு விபரங்களை மிக எளிதாகப் பெற முடியும்.
6) நமது வாகன விபரங்களைப் பிறருடன் பகிரவும், நமக்கு அனுப்பப்படும் பிறரின் வாகன விபரங்களை நாம் காணவும் முடியும்.
7) வாகனம் மற்றும் காப்பீடு சார்ந்த அனைத்து வித கட்டணங்கள் மற்றும் வரிகளை மிகவும் சுலமாகச் செலுத்த முடியும்.
8) அவசர நிலைகளின் (Road Emergency) போது mParivahan மூலமாகத் தகவல் தொடர்பு எளிதாகக் கிடைக்கும்.
9) பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு RC மற்றும் DL விபரங்களை எளிதாகக் காணலாம்.
10) பல்வேறு கட்டணங்களுக்கான நமது சலான்களை மிகச்சுலபமாகக் காண முடிகிறது.
11) LLR க்கான மாதிரித் தேர்வை செயலியில் எழுதலாம்.
12) அருகிலுள்ள வாகனப் புகை பரிசோதனை நிலையங்களைக் காணமுடியும்.
13) அருகிலுள்ள RTO அலுவலக விபரங்களை எளிதாகக் காண முடியும்.
14) வாகனங்களின் செல்லுபடியாகும் ஆயுட்கால (Fitness Validity) அளவினை சுலபமாகக் காண முடியும்.
சிறப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்:
# வாகனம் சார்ந்த ஒரிஜினல் ஆவணங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு அலையும் தேவையின்றி, முக்கியமான ஆவணங்கள் எங்கும், எப்போதும் கிடைக்கும் வசதி.
# OTP மூலமாக அடிப்படை விபரங்கள் சரிபார்க்கப்படுவதால் பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது.
# QR Code அடிப்படையிலான அணுகல் இருப்பதால் பயன்பாடு எளிதாகிறது.
# ஒவ்வொரு தனிப்பட்ட கணக்கிற்கும் தனி குறியாக்க வசதி (Unique Encryption) உள்ளதால் அணுகுதல் மிகவும் பாதுகாப்பாக அமைகிறது.
# NIC மூலமாக இயக்கப்படுவதால் பயனருக்கு மேம்பட்ட அணுகல் வசதி கிடைக்கிறது.
# இதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும், அரசின் அனைத்துத் துறைகளாலும் ஒரிஜினலாகக் கொள்ளப்படும். அதாவது உண்மையான ஆவணங்கள் சட்டபூர்வமாக டிஜிட்டல் வடிவில் கிடைக்கும் வசதி.
# நம்முடைய அனைத்து விதமான ஒரிஜினல் ஆவணங்களையும் நமது கைகளில் வைத்துக்கொண்டிருக்காமல், அவற்றை டிஜிட்டல் வடிவில் மொபைல் போனில் வைத்துக்கொள்ள முடியும்.
# mParivahan-ல் உள்ள தரவுகள் பாதுகாக்கப்படுவதையும், எந்தவித சமரசங்களும் செய்யப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் MeitY (The Ministry of Electronics and Information Technology) எடுத்து வருகிறது.
# 256 Bit Advanced Encryption Standard (AES) உள்ளதால் mParivahan செயலி மிகமிகப் பாதுகாப்பானது.
# வட்டாரப் போக்குவரத்து அலுவலம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் mParivahan செயலி மூலமாகவே செய்துகொள்ளும் வசதி விரைவில் கிடைக்க உள்ளது!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/technology/tech-news/driving-licence-vehicle-papers-on-mparivahan-app
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக