Ad

செவ்வாய், 19 ஜூலை, 2022

‘‘என்னது... நான் சைக்கோவா?’’: எஸ்.ஜே.சூர்யா #AppExclusive

முறுக்கு மீசை, மொசுமொசு தாடி, பரட்டைத் தலை... ஒரு பேச்சுலர் வாழ்வதற்கான அத்தனை அடையாளங்களுடன் கலைந்துகிடக்கிற தி.நகர் ஃப்ளாட்டில் பால்கனியில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

‘‘என்னங்க, கலரிங் தலையைக் காணோம்?’’ என்றால், ‘‘கடவுளே, இது நம்ம புதுப் படம் ‘திருமகன்’ கெட்-அப்புங்க’’ என்று சிரிக்கிறார்.

‘‘எந்த வேலைக்குப் போனாலும், அதுல டாப்பா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். எதுன்னாலும் சரி, அதோட எக்ஸ்ட்ரீம் வரைக்கும் போய்ப் பார்க்க ஆசைப்படுவேன். இப்போ ஹீரோ ஆகியாச்சுல்ல... இதுல டாப் ஸ்டார் ஆகணும்னா, அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அத்தனையும் பண்ணிப் பார்ப்பேன்.

அப்படித் தான் இந்த கெட்-அப் சேஞ்ச். ஜிம் போறேன், டான்ஸ் கிளாஸ் போறேன், டயட்ல இருக்கேன். அடிச்சா முரட்டு அடியா அடிச்சிரணும்!’’ - எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கிளம்புகிறார் மனிதர்.

SJ Suryah talks about his cinema aspirations

“எஸ்.ஜே.சூர்யான்னாலே ‘ஏ’ன்னு ஆகிப்போச்சு. அதுவும் ‘கள்வனின் காதலி’யில் ரொம்பவே ஓவர். இதெல்லாம் ஏங்க?”

‘‘அடடா... இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே கேட்கப் போறீங்க. நான் இதுக்குப் பளிச்சுனு குறும்பா ஏதாவது பதில் சொல்லப் போக, அப்புறம் போராட்டம் ஆர்ப்பாட்டம்னு நாலு பேர் என் வீட்டு வாசலில் வந்து நிக்க... எதுக்குங்க என்னை வம்புல மாட்டிவிடவே அலையறீங்க? 

SJ Suryah talks about his cinema aspirations

‘கள்வனின் காதலி’ படத்தில் எனக்கு ஒரு பெரிய ஹீரோவுக்குக் கிடைக்கிற ஓபனிங் கிடைச்சுது. பணம் போட்ட தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைச்சுது. டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்குச் சந்தோஷம். இன்னிக்கு மார்க்கெட்ல ஒரு நடிகனா எனக்கு நல்ல விலை இருக்குங்க. மக்கள் என்னை ரசிக்கிறாங்க. ‘எஸ்.ஜே.சூர்யா படம்னா ஜாலியா இருக்கும் மச்சான்’னு பசங்க தியேட்டருக்கு வர்றாங்க. அட, லேடீஸும் நிறைய என்னை ரசிக்கிறாங்க சார்! ஏன்னா, ஊர்ல உலகத்துல நடக்காத எதையும் இந்த சூர்யா காட்டலை. எல்லாம் நம்ம வாழ்க்கையில பிடிக்கிற மேட்டர்கள்தான். ஓரக்கண்ணால ரசிச்சுட்டே, ‘அய்யய் யய்ய, அசிங்கம்!’னு சொல்ற ஆளுங்க நம்ம ஊர்லதான் அதிகம். அதுக்கு நான் என்ன பண்றது?’’

SJ Suryah talks about his cinema aspirations

“சமீபமா வந்த படங்கள் பெருசா போகலை.... விஜய்யை வெச்சுப் பண்ண இருந்த ‘புலி’ படம் ட்ராப்... எஸ்.கே.சூர்யா ரொம்ப விரக்தியா இருக்கார்னெல்லாம் நியூஸ் வந்ததே?”

‘‘அத்தனையும் காமெடி!‘புலி’ படம் ட்ராப் ஆனதைப் பத்தி ஏற்கெனவே செய்திகள் வந்தாச்சு. புதுசா சொல்ல ஒண்ணும் இல்லை. மத்தபடி நான் இப்போதான் முழுவீச்சில் ஆட்டத்துக்கு ரெடியா இருக்கேன். இன்னும் மூணு வருஷத்துக்கு என்னென்ன படங்கள்னு பக்காவா ப்ளான் பண்ணியாச்சு. அடுத்து, கலைப்புலி தாணு தயாரிப்பில் ரத்னகுமார் டைரக்ஷனில் ‘திருமகன்’ பண்றேன். முழுக்க வில்லேஜ் சப்ஜெக்ட். தாடி, மீசை, வேட்டி, சட்டைனு இதுவரைக்கும் பார்க்காத கிராமத்து சூர்யா. என்னோடு லவ் லவ்னு லவ் பண்ண மூணு ஹீரோயின்ஸ். தேவா இசையில், சும்மா குத்து குத்துனு குத்தப்போற பாடல்கள். அப்புறம் பேன்ட் சட்டையை எடுத்து மாட்டிட்டு ‘பண்டிகை’, ‘வில்’, ‘அலங்கா நல்லூர் காளை’னு அடுத்தடுத்து படங்கள் இருக்கு. தாடி எடுத்து, மீசை மட்டும் வெச்சா ‘வியாபாரி’ன்னு ஒரு படம். இதெல்லாம் வேற டைரக்டர்களுக்கு நான் ஹீரோவா பண்ணப்போற படங்கள்.

நானே டைரக்ட் பண்ணி நடிக்கவும், மூணு ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. ‘பேசும் தெய்வங்கள்’னு முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே ஒரு கதை. அப்புறம் ‘இசை’, ‘புலி’னு இன்னும் மூணு வருஷத்துக்கு நான் செம பிஸி. வெடிகுண்டுகளையெல்லாம் ரெடி பண்ணியாச்சு! எடுத்து வீசிட்டே இருக்க வேண்டியதுதான். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டுன்னு இனிமே வரிசையா நம்ம படங்கள் தான்!’’

“நல்ல விஷயம். ஆனா, எஸ்.ஜே.சூர்யா சைக்கோ ஆகிட்டார்... ரொம்ப டார்ச்சர் பண்றார்னெல்லாம் உங்களைப் பத்தி மீடியால ரவுண்ட் கட்டிப் போட்டுத் தாக்குறாங்களே...?”

‘‘ஹாஹ்... ஹாஹ்... ஹாஹ்... ஹைய்யோ கடவுளே! ஹைய்யோ... எழுதட்டும்’’ என ரசித்துச் சிரிக்கிறவர்,‘‘எஸ்.ஜே. சூர்யாவைப் பத்தி நாலு பேர் நல்லாப் பேசினா, நாலு பேர் தப்பாத்தான் பேசு வாங்க. அதுதான் யதார்த்தம். நல்லதோ கெட்டதோ, நம்மளைப் பத்தி எழுதுறாங்கன்னா நாம கரன்ட்ல இருக்கோம்னு அர்த்தம். எப்பவும் தேவைப்படுற ஆளா, தேடப்படுற ஆளா இருக்கணும். நாம இப்ப தேவையா இருக்கோம். அதனால அப்படியெல்லாம் எழுதுறாங்க. சந்தோஷம்!’’

“சரி, ஏன் இன்னும் கல்யாம் பண்ணிக்காம இருக்கீங்க?“

‘‘லாரி லாரியா லவ் பண்ணியாச்சு சார்! சென்னையிலே இருந்து நியூயார்க் வரைக்கும் பார்த்துட்டேன். ‘வாலி’, ‘குஷி’யெல்லாம் நான் உணர்ந்த விஷயங்கள். ‘அன்பே ஆருயிரே’ நான் வாழ்ந்தது. ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’னு பழமொழி சொல்வாங்க. கல்யாணம் ஆகாதவன் சும்மா சொல்வானே தவிர, அதோட அர்த்தம் ப்ராக்டிக்கலா புரியவே புரியாது. கல்யாணம் ஆனவனுக்குதான் அது பொட்டுல அடிச்ச மாதிரி புரியும். இந்த ரெண்டு பேரோட இடத்திலேயும் நான் இருந்து பார்த்திருக்கேன்.

நம்மளை மாதிரி வேலை வேலைனு ஓடிட்டே இருக்கிற பார்ட்டிகளுக்கு கல்யாணமெல்லாம் செட் ஆகிறது கஷ்டம்.இந்த அமீர்கானைப் பாருங்க. எவ்வளவு அழகன். எவ்வளவு பொண்ணுங்க அவரை நினைச்சு ஏங்குதுங்க. ஆனா, அந்தாளையும் ஒரு பொண்ணு வேணாம்னு தூக்கிப் போட்டுட்டுப் போனாள்ல..? டைவர்ஸ் பண்ணிட்டுக் கிளம்பிட் டாள்ல? இப்போ பாருங்க, அவர் எல்லா அழகிகளையும் விட்டுட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரைக் கல்யாணம் பண்ணிட்டார்.

சார், காதலை காதலுக்கும் மேல வாழ்ந்து பார்த்துட்டேன். இப்போ சினிமாதான் சார் நம்ம லவ்வரு. அதுக்குதான் வெறியோட ஓடிட்டிருக்கேன். நம்மளையெல்லாம் தாங்கிக்கிற பொண்ணு சிக்கினால், அப்போ கல்யாணம் பத்தி யோசிக்கலாம். சிக்கலைன்னாலும் போயிட்டே இருக்கலாம், ரை ரைட்ஸ்!’’

- ராஜுமுருகன்,

படங்கள் - கே.ராஜசேகரன்

(28.05.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


source https://www.vikatan.com/government-and-politics/cinema/sj-suryah-talks-about-his-cinema-aspirations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக