Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

சம்பளம் ₹18,000, டி-ஷர்ட் பிசினஸில் லாபம் ₹40,000... கரூர் இளைஞரின் வெற்றிக்கதை!

கொரோனா ஊரடங்கு காலம் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமான பாடம், `ஒரே வேலையை, ஒரு வருமானத்தை நம்பியிருக்கக்கூடாது' என்பதுதான். காரணம், ஊரடங்கினால் பலருக்கும் தாங்கள் பார்த்து வந்த வேலை பறிபோக, இந்தப் பேரிடர் காலத்தில் பலரும் மாற்று வருமானத்துக்கு வழியில்லாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கரூரைச் சேர்ந்த சுபாஷ், அலுவலக வேலை, ஓய்வு நேரத்தில் சொந்தத் தொழில் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார். அவரைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் அவர்.

``அப்பா வெங்கட சுப்பிரமணியன், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். நடுத்தர குடும்பம்தான். நானும் ஐ.டி வேலை கனவுகளோடுதான், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரியை கடந்த 2017-ம் வருடம் கம்ப்ளீட் பண்ணினேன். சைடுல கம்ப்யூட்டர் டிசைனிங் சம்பந்தப்பட்ட கோர்ஸூம் பண்ணினேன். ஆனா, படிச்சு முடிச்சதும், எனக்கு ஐ.டி கம்பெனிக்குப் போக விருப்பமில்லை. அதனால், கரூர்ல உள்ள ஒரு கம்பெனியில் கம்ப்யூட்டர் டிசைனர் கம் மெர்ச்சண்டைசராகவும் வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் பத்தாயிரம் சம்பளம் கொடுத்தாங்க.

அப்போ, டெல்லியில் நடந்த பையர்ஸ் மீட்டிங்கில் கம்பெனி சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைச்சுச்சு. அதில், டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமாக ஆர்டர் கொடுக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு கம்பெனி நிர்வாகிகளின் மனநிலையைப் படிக்க முடிஞ்சது. இதை வச்சு 2018-ல கம்ப்யூட்டர் டிசைன் பண்ணித்தரும் தொழிலைத் தொடங்கினேன். இதுக்கு என்னோட அக்கா ஹாசினி, மூன்று லட்சம் லோன் போட்டுக் கொடுத்தாங்க. அதை வச்சு, கம்பெனிக்கு வெப்சைட் உருவாக்குறது, ஜி.எஸ்.டி எடுக்கிறது, உயர்தர லேப்டாப், கம்ப்யூட்டர்கள் வாங்கிறதுனு செலவு பண்ணினேன். இன்னொருபக்கம் எம்.சி.ஏ கோர்ஸை தனியா படிச்சேன்.

கம்பெனிகளுக்கு போர்டு டிசைன் பண்றது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லோகோ டிசைன் பண்றதுன்னு மெதுவா தொழிலை ஆரம்பிச்சேன். முதல்மாசம், ரூ. 10,000 வருமானம் வந்துச்சு. அதனால், உற்சாகமானேன். அதன்பிறகு, டி-ஷர்ட்டுகளில் கம்ப்யூட்டர் ஆர்ட் டிசைன் மூலம் பிரிண்ட் பண்ணி, அதை வெப்சைட்களில் போட்டோவாக பதிவு பண்ணினேன். அதைப்பார்த்துட்டு, `டிரெண்டா இருக்குதே'னு பல இளைஞர்கள் என்னைத் தேடிவந்து, அவங்க விரும்புற டிசைன்ல போட்டோக்களைப் போட்டு டி-ஷர்ட் ரெடி செஞ்சித் தரச்சொல்லி கேட்டாங்க. அவற்றை உருவாக்கி தர ஆரம்பித்தேன். நல்ல வருமானம் கிடைத்தது.

அதனால, கடந்த வருடம் அப்பா கொடுத்த பத்து லட்சம், என்னிடம் இருந்த மூன்று லட்சம் என்று 13 லட்சத்தைப் போட்டு, பிரத்யேகமான லேட்டஸ்ட் பிரிண்டிங் மெஷினை வாங்கினேன். திருப்பூர்ல உள்ள டி-ஷர்ட் தயாரிக்கும் கம்பெனியில் தேவையான டி-ஷர்ட்களை ஆர்டர் கொடுத்து வாங்கி வச்சுக்குவேன். அதைவச்சு, விதவிதமான டிஜிட்டல் டிசைனிங் உருவங்களை, எழுத்துகளை வடிவமைத்து, அதை டி-ஷர்ட்டுகளில் பிரின்ட் செய்து, என்னோட Colourcrafts என்ற சமூகவலைதள பக்கத்தில் வெளியிட ஆரம்பித்தேன். அதைப்பார்த்துட்டு, பலரும் எனக்கு கஸ்டமர்கள் ஆனாங்க. குறிப்பாக, சில சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் என்கிட்ட கஸ்டமர்களாகி, தங்களோட சமூகவலைதளப் பக்கங்களில் நான் வடிவமைத்த டி-ஷர்ட், டிஜிட்டல் ஆர்ட்களை டேக் பண்ணினாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினி உருவத்தைப் பொறித்த என்னோட டிஜிட்டல் டிசைனிங் பிரிண்டடு டி-ஷர்ட்டை விரும்பி கேட்டு வாங்கிப்போட்டுக்கிட்டார், நடிகர் பிரேம்ஜி. அதை தன்னோட வலைதள பக்கத்திலும் பகிர்ந்தார். அது நல்லா ரீச் ஆச்சு. அதேபோல், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், என்கிட்ட டிஜிட்டல் பெயின்டில் தன்னோட உருவத்தை உருவாக்கச் சொல்லி வாங்கினாங்க. அவங்களும் தன்னோட சமூகவலைதள பக்கத்துல அதை வெளியிட்டு, என்னை இன்னும் நல்லா ரீச் பண்ண வச்சாங்க. அதேபோல், நடிகர் ஜெயம் ரவி ஃபேன்ஸ் கிளப்பைச் சேர்ந்த 10 பேர், ஜெயம் ரவியின் உருவத்தை டிஜிட்டல் ஆர்ட் மூலம் உருவாக்கச் சொல்லி, அதை பிரேம் பண்ணித் தரச்சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. அதோடு, ஜெயம் ரவி உருவம் பொறித்த 10 டி-ஷர்ட்டுகளையும் ஆர்டர் கொடுத்தாங்க. அந்த டி-ஷர்ட்களை அணிஞ்சுக்கிட்டு, ஜெயம் ரவியின் டிஜிட்டல் ஆர்ட் பிரேமை கொண்டுபோய், அவரிடம் கொடுத்தாங்க. அதுமூலமா, இன்னும் என்னோட வேலை பலருக்கும் போய் சேர்ந்துச்சு.

ரஜினி டி-ஷர்ட்டில் பிரேம்ஜி

இப்படி, என்னோட `இன்னோவேட்டிவ் வொர்க்' பலராலும் கவனிக்கப்பட்டு, நல்லதொரு தொடர் வாய்ப்பையும், வருமானத்தையும் இந்த தொழில் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துச்சு. ஆந்திரா, பெங்களூர், அந்தமான்னு பல இடங்களில் இருந்து நிறைய ஆர்டர் வருது. பெரிய கம்பெனிகளில் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தவர்கள், `டீம் டி-ஷர்ட்ஸ்' டிசைன் பண்ணி கேட்டு, லாட்டா ஆர்டர் தர்றாங்க. கிரிக்கெட் வீரர் தோனி தனது ஓய்வை அறிவிச்சதால, அவரோட ஃபேன்கள் அவர் உருவம் பொறித்த டி-ஷர்ட்களை வடிவமைத்து தரச்சொல்லி நிறைய ஆர்டர் தர்றாங்க. தவிர, டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகள், கிச்சன் துண்டுகளில் அவர்களின் கம்பெனி லோகோவை பிரிண்ட் பண்ணித்தரச்சொல்லி கேட்குறாங்க. விநாயகர் சதுர்த்தி மாதிரியான விழாக்களின்போது, அந்தந்த சாமிகளின் உருவம் தாங்கிய டி-ஷர்ட்டுகளை கேட்டு, நிறையபேர் ஆர்டர் தர்றாங்க. தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் உருவம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளை தயார் பண்ணச்சொல்லி கேட்கிறாங்க.

டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை முடிச்சுட்டு, சாயங்காலம் ஆறரை மணிக்கு வீட்டுக்கு வருவேன். அதில் இருந்து இரவு ஒரு மணிவரை, தொழிலை கவனிப்பேன். திருப்பூர்ல ஒரு டி-ஷர்ட்டை ரூ. 140 கொடுத்து வாங்குறேன். அதுல, வெள்ளை டி-ஷர்ட்டில் பிரின்ட் செய்ததுக்கு பிறகு, ரூ. 350 க்கு விற்கிறேன். கறுப்பு மற்றும் மற்ற கலர் டி-ஷர்ட்டுகளை 500 வரைக்கும் விலை வச்சு விற்பனை செய்கிறேன். டி-ஷர்ட்டுகளில் பிரின்ட் பண்ண பிரீமியம் இங்க்கைதான் பயன்படுத்துறேன். பலகட்ட ஆய்வுக்குப் பிறகு நல்ல தரத்தில் உள்ள இங்க்கைதான் இப்போது பயன்படுத்துகிறோம். அதனால், உடலுக்கு அலர்ஜி எதுவும் ஏற்படாது.

சுபாஷ்

எனக்கு இந்த தொழில்ல எங்கப்பா ஒத்தாசையாக இருக்கிறார். எல்லா செலவுகளும் போக, மாதம் ரூ. 40,000 வரை கையில் நிக்குது. என்னோட டெக்ஸ்டைல்ஸ் வேலையில் தனியா மாதம் ரூ.18,000 சம்பளம் கிடைக்குது. இதனால், வாழ்க்கை ஒவ்வொருநாளும் நம்பிக்கையா கடந்து போய்கிட்டு இருக்கு. இதுல இன்னும் இன்னோவேட்டிவ்வா செயல்பட்டு, உலக அளவில நான் டிசைன் செஞ்ச டி-ஷர்ட்டுங்க போகணும்னு யோசித்து செயல்பட்டு, அந்த லட்சியத்தை நிச்சயமாக ஒருநாள் எட்டிப்பிடிப்பேன்" என்றவர், இறுதியாக.

``நேரம் பார்க்காமல் உழைத்தால், வாழ்க்கையில் உயர்வு நிச்சயம்!" என முடித்தார்.



source https://www.vikatan.com/business/news/karur-youngster-shares-his-success-story-of-t-shirt-business

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக