Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

அமெரிக்கா: செய்யாத குற்றத்துக்கு 44 வருட சிறை! - என்ன நடந்தது ரோனி லாங் வாழ்க்கையில்?

தற்போது 64 வயதான ரோனி லாங், ஒரு வெள்ளையின பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது லாங்குக்கு 20 வயதுதான். செய்யாத தவறுக்காகக் கடந்த 44 ஆண்டுகளாகச் சிறையிலிருந்துள்ளார்.

ரோனி லாங்

வடக்கு கரோலினா மாகாணத்தில், 54 வயதான சாரா ஜுட்சன் போஸ்ட் என்ற வெள்ளையினப் பெண்ணை, 1976-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி மாலை தனது வீட்டில் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரோனி லாங்க் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனது வீட்டில் தன்னைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக சாரா புகார் கூறியிருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் சாரா ஜுட்சன் போஸ்டை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். மற்ற வழக்குகளுக்காக அங்கிருந்த குற்றவாளிகளில் அவரை வன்கொடுமை செய்த நபரைப் போல யாரேனும் இருக்கிறார்களா என்று அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவர், விதிமீறல் குற்றம் ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ரோனி லாங்-கை அடையாளம் காட்டியுள்ளார்.

ரோனி லாங்

1976, மே 10-ம் தேதி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை ஆகிய குற்றங்களுக்காக, லாங்கிற்கு 80 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கும் லாங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதாடப்பட்டது. விசாரணையின்போது சரியான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை என்று அப்போது வெளியான செய்திகள் கூறுகின்றன.

இந்த வாதங்கள் ஏதும் ஏற்கப்படாத நிலையில், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது ரோனி லாங் தண்டனையை ரத்து செய்யப் பல ஆண்டுகளாகப் பலமுறை முறையிட்டிருக்கிறார். சம்பவ இடத்தில் கிடைத்த டி.என்.ஏ சான்றுகள் லாங் குற்றமற்றவர் என்பதை உறுதி செய்தும், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் சிறையிலேயே இருந்து வந்துள்ளார். பின்னாளில், சாரா இறந்துவிட்டார். ஆனால், வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்து

ரோனி லாங்

2005-ம் ஆண்டு, வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகியிருந்தது. சம்பவ இடத்திலிருந்த ஆதாரங்களை மறு ஆய்வு செய்து டி.என்.ஏ சோதனைக்குச் சமர்ப்பிக்க ஒரு மனுவைத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விசாரணையின் முடிவில் கிடைக்கப்பட்ட தலைமுடி மற்றும் ஆடை இழைகள் அனைத்துமே லாங்குடன் ஒத்துப்போகவில்லை.

Also Read: `ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு கொரோனா.. ஆனால் இறப்புக்கு காரணம்..?!’ -வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை

கடைசியாக நீதிமன்ற மேல்முறையீட்டில், 44 ஆண்டுகளுக்குப் பிறகு லாங் குற்றமற்றவர் என்று உறுதியானது. இதையடுத்து, ஸ்டான்லி கவுண்டி சிறையிலிருந்து அவர், கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

2014-ம் ஆண்டு ரோனி லாங்கைத் திருமணம் செய்த அவரது மனைவி ஆஷ்லீ லாங், அவர் வெளியான அன்றுதான் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். ``இது உலகின் சிறந்த பிறந்தநாள் பரிசு. நான் இன்னும் கனவு காண்கிறேன் என்று நினைக்கிறேன்' என்று ஆஷ்லி தெரிவித்தார்.

பலரின் 44 ஆண்டுக்கால சட்டப்போராட்டமும், ரோனி லாங்கின் குடும்ப உறுப்பினர்களின் கனவும் தற்போது நிஜமாகியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/international/black-american-released-from-prison-after-44-years-for-a-crime-wrongly-convicted

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக