Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

ஹாங்காங், தெலங்கானாவில் மறுதொற்று... மீண்டவரை மீண்டும் பாதிக்குமா கொரோனா?

``என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறியே!"

சத்யராஜ் பேசிய இந்தப் புகழ்பெற்ற வசனம் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ கொரோனா வைரஸுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். வைரஸைப் பற்றி ஒரு புரிந்துணர்வுக்கு வரும்போது அடுத்த மர்ம முடிச்சைப் போட்டுவிட்டுப் போய்விடுகிறது.

அந்த வகையில் அண்மையில் போடப்பட்டிருக்கும் மர்ம முடிச்சு `மறுதொற்று' (Reinfection). இதற்கு முன்னாலும் மறுதொற்று ஏற்படுகிறது என்று கூறப்பட்டாலும் அது பரிசோதனையில் ஏற்படும் தவறு அல்லது இறந்துபோன வைரஸ்கள் உடலில் தங்கியிருப்பதால் ஏற்படும் விளைவு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வந்தனர்.

covid-19 reinfection

தற்போது உலகிலேயே முதன்முறையாக ஹாங்காங்கில் ஒரு நபருக்கு கோவிட்-19 மறுதொற்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அந்த ஆணுக்கு மார்ச் மாதம் முதன்முறையாகக் கொரோனா தொற்று பாதித்தது. சுமார் ஐந்து மாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருந்த அந்த நபர் பிரிட்டன் வழியாக ஹாங்காங்குக்குத் திரும்பியிருக்கிறார். அறிகுறிகளற்ற தொற்றாக இருந்த நிலையில், விமான நிலையத்தில் பயணத்தில் வழக்கமாகச் செய்யப்படும் பரிசோதனையில் இவருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஓரிரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா மறுதொற்று ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, இருவருக்கும் மீண்டும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தொடர்பான விவரங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.எம்.ஆர்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது மறுதொற்றுதான் என்று ஐ.சி.எம்.ஆர் இதுவரை அறிவிக்கவில்லை.

A health worker check the oxygen level in Mumbai

ஹாங்காங் சம்பவத்துக்குப் பிறகு, மறுதொற்று தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் மருத்துவர் மரிய வான் கேர்க்வோ, ``இதைக் கேள்விப்பட்டதும் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மறுதொற்று குறித்த தெளிவான கருத்துக்கு வர வேண்டியது அவசியமாகிறது என்பதால் தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியனிடம் கேட்டோம்:

``நோய் கண்டறிவதற்காகப் பயன்படுத்தும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு, மீண்டும் 90 நாள்களுக்கு அந்தப் பரிசோதனையைச் செய்யக் கூடாது என்று அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் (சி.டி.சி) அறிவுறுத்தியுள்ளது.

கைகால்களில் அடிபட்டு புண்ணாகி குணமடைந்த பிறகும் தழும்பு காணப்படுவதுபோல், கோவிட்-19 குணமான பிறகும் நுரையீரலில் தழும்பு காணப்படும். பரிசோதனையில் அது வைரஸ் பாசிட்டிவ் என்றே காட்டும். எனவே, ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை நோயைக் கண்டறிவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நோய் குணமாகிவிட்டதா என்று உறுதிசெய்ய இந்தப் பரிசோதனையை செய்யக்கூடாது. இதன் காரணமாகவும் சிலருக்கு மறுதொற்று ஏற்பட்டது போன்று காட்டும்.

ஹாங்காங்கில் கண்டறியப்பட்ட மறுதொற்று சம்பவத்தில் முதன்முறை பாதித்த வைரஸின் தன்மையும் இரண்டாம் முறை பாதித்த வைரஸின் தன்மையும் மாறுபட்டுள்ளது. இதனால் மறுதொற்று ஏற்பட்டுள்ளது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மறுதொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்திருப்பதை, கோவிட்-19 என்ற புதிய நோயை படிப்படியாக அறிந்துகொள்கிறோம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மறுதொற்று ஏற்படும் என்பது தொற்றுநோய் மருத்துவர்கள் சமூகம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

Infectious disease expert Dr.Subramaian Swaminathan

இன்ஃப்ளுயென்ஸா தொற்றை எடுத்துக்கொண்டால், ஒரு சீஸனில் ஒருமுறைதான் பாதிப்பு ஏற்படும். ஒரே சீஸனில் அடுத்தமுறை வர வாய்ப்பில்லை. இன்ஃப்ளூயென்ஸா தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை போடுகிறோம். காரணம், நோய் எதிர்ப்புத்திறன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மறைந்து போயிருக்கும். மற்றொரு முக்கியமான காரணம் வைரஸின் தன்மை கடந்த ஆண்டைவிட மாறியிருக்கும். அதனால் ஆண்டுதோறும் ஃப்ளூ தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது. அதற்கேற்றாற்போல் தடுப்பூசியையும் அப்டேட் செய்கிறார்கள்.

தடுப்பூசி கண்டறியப்பட்டுவிட்டால் கோவிட்-19 பெருந்தொற்றுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராகத் தற்போது ஆராய்ச்சியிலிருக்கும் தடுப்பூசி வெளிவருவதற்குள் வைரஸின் தன்மை மாறிவிட்டால், தடுப்பூசியே பயனற்றதாகப் போய்விடும்.

இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் போன்று கொரோனா வைரஸும் ஆண்டுக்கு ஆண்டு மாறுதவற்கு வாய்ப்புள்ளது. அதனால் ஃப்ளூ தடுப்பூசியுடன் கோவிட்-19 தடுப்பூசியையும் ஆண்டுதோறும் போட வேண்டியது வரலாம் என்றும் கணிக்கிறோம்.

ஒருமுறை நோய் வந்து குணமாகியவர்கள் சர்வதேச பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இம்யூனிட்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இப்போது மறுதொற்று ஏற்படுவதால் இதுபோன்ற செயல்பாடுகள் பயனளிக்காது என்று தெரிந்துவிட்டது. நோய் எதிர்ப்பு பி செல்கள் உருவானால் ஆன்டிபாடி குறுகிய காலமே இருக்கும்.

அதே நேரம் டி செல்கள் உருவாகினால் ஆன்டிபாடி நீண்டநாள் இருக்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் குறிப்பிட்ட வகையான நோய் எதிர்ப்புத்திறன்கள்தாம். வைரஸின் தன்மை மாறும்பட்சத்தில் இந்த எதிர்ப்புத்திறன், அடுத்த வகை வைரஸுக்கு எதிராகப் போரிடாது.

File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.

Also Read: கோவிட்-19: வீட்டில் பாதுகாப்பு... ஆபத்தை எதிர்கொள்வது எப்படி?

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரு நபருக்கு ஒருமுறைதான் கோவிட்-19 தொற்று ஏற்படும் என்றும் தப்புக்கணக்கு போடக்கூடாது. இரண்டாவது முறை பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட மீண்டும் பாதிப்பு ஏற்படலாம். ஒருமுறை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களும் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய பழக்கங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும்.



source https://www.vikatan.com/health/healthy/expert-explains-about-coronavirus-reinfection-and-its-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக