Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கள்ளக்குறிச்சி: `ஆன்லைன் வகுப்பு; 3 பேருக்கும் ஒரே செல்போன்!’- விபரீத முடிவெடுத்த மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டுநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் நித்யஸ்ரீ, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ். சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த மாணவி நித்யஸ்ரீ

அதன்படி தனது மூன்று மகள்களுக்கு தனித்தனியாக செல்போன் வாங்கித் தரும் அளவுக்கு வசதியில்லாத ஆறுமுகம், ரூ.20,000 செலவில் ஒரு செல்போன் வாங்கி தனது 3 மகள்களுக்கும் கொடுத்திருக்கிறார். ஆனால், மூவருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டதால் ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. அதனால் மற்ற இரண்டு சகோதரிகள் தங்களுக்கு தனித்தனியே ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித் தரும்படி தந்தையிடம் கேட்டிருக்கிறார்கள்.

Also Read: 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை! - பட்டுக்கோட்டை அதிர்ச்சி

ஆனால், அதற்கு வசதியில்லாத ஆறுமுகம், மற்ற இரு மகள்களுக்கும் செல்போனை கொடுத்து அனுசரித்துப் போகும்படி மூத்த மகள் நித்யஸ்ரீயிடம் கூறியிருக்கிறார். அதில் விரக்தியடைந்த நித்தியஸ்ரீ, கடந்த 29-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். வயலில் வேலை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்த ஆறுமுகம், தனது மகள் மயங்கிக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் நித்யஸ்ரீயை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

Also Read: கடலூர்: `ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் விரக்தி!' - பள்ளி மாணவர் தற்கொலை

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், அதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் இருந்த நித்யஸ்ரீ நேற்று (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போனுக்காக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/death/kallakurichi-student-commit-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக