Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

`` `பாகுபலி' பிரபாஸோட 3டி படம்... என்ன ஸ்பெஷல்னா?!''- ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

'பாகுபலி' படத்திற்குப் பிறகு, பிரபாஸின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. தற்போது, ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுருஷ்' எனும் 3டி படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரபாஸ். மிகப்பெரிய பொருள்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார், கார்த்திக் பழனி. 'பெண்குயின்' மூலம் அறிமுகமான இவருக்கு இது இரண்டாவது படம். அவரிடம் பேசினேன்.

ஒளிப்பதிவாளர் 'திரு'க்கிட்ட எத்தனை படங்கள் உதவி ஒளிப்பதிவாளரா வேலை செஞ்சீங்க?

"அடையார் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்ல 2006 - 2009 பேட்ச் நான். படிச்சு முடிச்சவுடனே திரு சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்து அஜய் தேவ்கன் சாருடைய 'ஆக்ரோஷ்' படத்திலிருந்து ரஜினி சாருடைய 'பேட்ட' வரைக்கும் அவர்கிட்ட பத்து வருஷம் வொர்க் பண்ணேன்."

'பெண்குயின்' பட வாய்ப்பு எப்படி வந்தது? இயக்குநர் ஈஷ்வருக்கும் உங்களுக்கும் ஏற்கெனவே பழக்கமா?

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

"இல்லை. இந்தப் படத்துக்குள்ள வந்தப் பிறகுதான், எனக்கு ஈஷ்வர் அறிமுகமானார். 'மெர்குரி', 'பேட்ட' இந்த ரெண்டு படத்துல வொர்க் பண்ணதுனால கார்த்திக் சுப்பராஜ் சாருக்கு என்னை நல்லா தெரியும். அவர்தான் 'பெண்குயின்' தயாரிப்பாளர். தயாரிப்பு தரப்பு என்னை ஈஷ்வர்கிட்ட ஒரு ஆப்ஷனா சொல்லியிருக்காங்க. அப்புறம், இயக்குநர் ஈஷ்வரை மீட் பண்ணேன். படங்கள் பத்தி நிறைய பேசினோம். எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாகிடுச்சு."

உங்களுடைய முதல் படம் 'பெண்குயின்' தியேட்டர்ல வெளியாகலைனு வருத்தமிருக்கா?

"ஆமா பிரதர். அந்தப் படத்தைப் பார்த்தாலே அது சின்ன ஸ்கிரீனுக்காக எடுக்கப்படலைனு தெரியும். ஒளிப்பதிவை பொறுத்தவரையில பெரிய திரையில பார்க்கும்போது எப்படி இருக்கும்னு ஒவ்வொண்ணா கற்பனை பண்ணித்தான் எடுத்தேன். இயக்குநர் என்கிட்ட ஏதாவது சந்தேகம் கேட்கும்போதுகூட 'ஈஷ்வர் அதை பெரிய ஸ்கிரீன்ல யோசிச்சு பாருங்க. சூப்பரா இருக்கும் நம்புங்க'னு சொல்வேன். அப்படியெல்லாம் யோசிச்சு பேசிட்டு படம் தியேட்டர்ல ரிலீஸாகலைனு நினைக்கும்போது ரொம்ப வருத்தமாதான் இருக்கு. அதே நேரம், ஓடிடி-யில வெளியானதனால நிறைய பேர் படம் பார்த்திருக்காங்க. பெரிய ஹீரோக்களுடைய படங்கள் மட்டும்தான் அந்தந்த ஊர்களைத் தாண்டி மற்ற மாநிலங்களில் வெளியாகும். குறைவான பட்ஜெட்ல உருவான நிறைய நல்ல படங்களை நானே தியேட்டர்ல பார்த்ததில்லை. அந்தத் தடையை இந்த பிளாட்ஃபார்ம் உடைச்சிடுச்சு. வெவ்வேற இன்டஸ்ட்ரியில இருக்கிற என் நண்பர்கள் படம் பார்த்துட்டு என்கிட்ட பேசினாங்க. தியேட்டர்ல வெளியாகலைனு இருந்த வருத்தத்தை இந்த வாழ்த்துகள் போக்கிடுச்சு"

ஓம் ராவத் இயக்கத்துல 'ஆதிபுருஷ்' பட வாய்ப்பு எப்படி வந்தது?

'ஆதிபுருஷ்' படம்

"திரு சார் எல்லா மொழி படங்களிலேயும் வேலை செஞ்சதுனால எனக்கு ஓம் ராவத் சாருடைய அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சில பேரைத் தெரியும். 'பெண்குயின்' படம் வெளியானப் பிறகு, எனக்கு கால் பண்ணி 'எங்க இருக்க?'னு கேட்டாங்க. 'மதுரையில இருக்கேன்'னு சொன்னேன். 'எப்போ மும்பை வருவீங்க?'னு கேட்டாங்க. 'இப்போதைக்கு பிளான் இல்லை. ஏதாவது வேலை இருந்தால்தான் வரணும்'னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, 'இன்னக்கு ஈவ்னிங் ஒரு ஜூம் கால் இருக்கு. அட்டண்ட் பண்ணுங்க'ன்னு சொன்னாங்க. அந்த ஜூம் மீட்டிங்ல தயாரிப்பாளர்கள், ஓம் ராவத் சார் எல்லோரும் இருந்தாங்க. அப்போ 'ஒரு சூப்பரான விஷயம் இருக்கு. நாங்க சொல்றோம். எவ்ளோ சீக்கிரம் மும்பை வரமுடியுமோ கிளம்பி வாங்க'னு சொன்னாங்க. நானும் என்னன்னு கேட்டுட்டே இருந்தேன். 'இப்போ சொல்லமாட்டோம். அந்த ஆர்வம் இருந்தால்தான் நீங்க சீக்கிரம் மும்பைக்கு வருவீங்க'ன்னு சொல்லிட்டு வெச்சுட்டாங்க. கடைசி வரை சொல்லவேயில்லை.

நானும் அதே ஆர்வத்தோடு மும்பை கிளம்பிட்டேன். அங்க ஆபீஸுக்கு போனவுடன்தான் இந்த மாதிரி ஒரு 3டி படம் பண்ணப்போறோம்னு சொன்னாங்க. கதையை அவங்க சொல்லும்போதே அவ்ளோ சூப்பரா இருந்தது. நானும் அவங்க கதை சொன்னதும் எப்படி வொர்க் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, யார் நடிக்கிறாங்கன்னு அவங்களும் சொல்லலை; நானும் கேட்கலை. அப்புறம், போஸ்டர் டிசைன் பண்ணி முடிச்சுட்டு எனக்கு காட்டினாங்க. அதுல பிரபாஸ் சார் பெயரை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. அவரை இன்னும் மீட் பண்ணலை. சீக்கிரம் சந்திக்கணும்."

3டி படங்கிறதுனால ஒளிப்பதிவுல நிறைய வேலைகள் இருக்கும். எப்படி தயாராகிட்டிருக்கீங்க?

"நான் எல்லாத்துக்கும் திரு சாரைத்தான் சொல்லணும். பிசி ஶ்ரீராம் சார் எப்படியோ அப்படிதான் திரு சாரும். இப்போ வரை ஏதாவது படிச்சுக்கிட்டே இருப்பார். அவருடைய தாக்கம் எனக்குள்ள இருக்கு. என் அப்பா என்னுடைய ஆசையை புரிஞ்சுக்கிட்டு சினிமாத்துறைக்கு அனுப்பி வெச்சார். அப்புறம், எனக்கு எல்லாமே திரு சார்தான். எங்களுக்கு ஷூட் இல்லைனா, அவருடைய ஆபிஸுக்கு போயிடுவோம். நிறைய புத்தகங்கள், படங்கள் வெச்சிருப்பார். சார் ஆபீஸ்ல யாரும் சும்மா இருக்கக்கூடாது. ஏதாவது படிச்சு தெரிஞ்சுக்கிட்டே இருக்கணும். அப்படி படிச்சது எனக்கு இப்போ ரொம்ப உறுதுணையா இருக்கு. என்னை அசிஸ்டென்ட்டா சேர்த்திருக்கிறதுக்கு முன்னாடி அவர் எனக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்தார். ''அவதார்' படத்துல என்னென்ன டெக்னாலஜி பயன்படுத்தியிருக்காங்க, அதுல என்ன புதுசா இருக்குனு ஆராய்ச்சி பண்ணி படிச்சுட்டு வா'ன்னு சொன்னார். அதுல நிறையவே கத்துக்கிட்டேன். அது 'ஆதிபுருஷ்' படத்துல வொர்க் பண்ண ரொம்ப ரொம்ப உதவியா இருக்கு. தவிர, 'கிரிஷ் 3', '24'னு டெக்னிக்கலான படங்கள்ல வேலை செஞ்சது எனக்கு பெரிய ப்ளஸ்."

இரண்டாவது படமே இந்தளவுக்கு பெரிய படம் கிடைக்கும்னு நினைச்சீங்களா?

ஒளிப்பதிவாளர் திருவுடன் கார்த்திக் பழனி

"என்னுடைய பயணம் பெருசு. இந்த வாய்ப்பு எனக்கு உடனே கிடைக்கலை. நிறைய தோல்விகளைப் பார்த்திருக்கேன். என்னுடைய முதல் வெற்றி 'பெண்குயின்'. அதுக்கு முன்னாடியே இந்தி, தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகள்ல நிறைய சுயாதீன படங்கள் பண்ணியிருக்கேன். எல்லாமே சின்னச்சின்ன படங்கள். ஆனா, எந்தவொரு அங்கிகாரமும் கிடைக்கலைனு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும். 'ஆதிபுருஷ்' வாய்ப்பு கிடைச்சிருக்குனு திரு சார்கிட்ட சொன்னதும் 'நிறைய கஷ்டப்பட்டிருக்க. அது எல்லாத்துக்கும் பலனாதான் இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. நிறைய ஆராய்ச்சி பண்ணு. நல்லா வொர்க் பண்ணு. இந்த வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்திக்கோ. ஏதாவது வேணும்னா கேளு. நான் இருக்கேன்'னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். வீட்லயும் எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இந்தப் படம் பார்த்துட்டு மக்கள் என் ஒளிப்பதிவைப் பத்தி பேசுறதுதான் எனக்கான உண்மையான வெற்றி. அது நிச்சயம் கிடைக்கும்னு நம்புறேன். இப்போ மும்பைல 'ஆதிபுருஷ்' படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிச்சிட்டோம்."



source https://cinema.vikatan.com/tamil-cinema/cinematographer-karthick-palani-about-his-opportunity-to-work-in-adipurush-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக