Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தூத்துக்குடி: `கருணை பணி வழங்கியதில் பாரபட்சம்?’ - கொந்தளிக்கும் குடும்பத்தினர்

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து (28-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டு ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. தூத்துக்குடி கடற்கரைச்சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து 20 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என 465 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 634 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20வது கட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கினால் கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில், 21வது கட்ட விசாரணை, கடந்த 24-ம் தேதி துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருந்த மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் என 26 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள்

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் குடும்பத்தினர், ஒருநபர் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசனை சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள கிராம உதவியாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்குப் பதிலாக இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதுகுறித்து துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பேசினோம், “மண்ணையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மக்கள் பலகட்டப் போரட்டங்களை தன்னெழுச்சியாக நடத்தினர். அதில், 100வது நாள் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காக்கைகளைப் போல சுடப்பட்டதில் எங்களின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்

`கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்’ என அரசு அறிவித்திருந்த நிலையில், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையல் உதவியாளர் என ஒப்புக்காக வேலை வழங்கப்பட்டது. ஆனால், சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தில் மூத்த மகளுக்கு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், உயிரையும், உறுப்புகளையும் இழந்த எங்களைப் போன்றோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பணியிடத்தில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் வழங்கப்பட்ட அரசுப்பணியைப் போலவே, அரசு மறுபரிசீலனை செய்து கல்வித்தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணித்தரத்திற்கு குறையாமல் பணி வழங்கிட அரசு ஆவண செய்ய வேண்டும்” என்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்

இதுகுறித்து ஒருநபர் ஆணையத் தரப்பில் பேசினோம், “துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்களை அவரவர் கல்வித்தகுதிக்கு அடிப்படையில் வழங்கிட ஆணையத்தின் நீதிபதி, ஏற்கெனவே முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை மனுக்களை ஏற்று மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கடிதம் அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்கள்” என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/tamilnadu-government-discrimination-in-the-allocation-of-mercy-based-job-says-thoothukudi-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக