ஐ.பி.எல் தொடருக்காகத் துபாய் சென்றிருக்கும் சி.எஸ்.கே அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டதும் தமிழக ரசிகர்கள் மட்டுமன்றி, அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சி. இதனால் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா இல்லையா என்ற சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் வேளையில், இதன் மற்றொரு பரிமாணத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. துபாய்க்கு செல்வதற்கு முன்பாகவே, சென்னையில் தனித்திருந்து பயிற்சியையும் தயாரிப்புப் பணிகளையும் சி.எஸ்.கே அணியினர் மேற்கொண்டனர்.
துபாய்க்கும் தனி விமானத்தில் சென்றனர். அங்கு சென்ற பிறகும் தனிமைப்படுத்தப்பட்டனர். உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தும், அதிக பாதுகாப்புடன் இருக்கும் விளையாட்டு அணியிலேயே 13 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றால், நாட்டின் நிலையையும் நோய் பரவும் தீவிரத்தையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கைக் குறைவு, இறப்பு விகிதம் குறைவு, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம் என்று மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து பாசிட்டிவ் செய்திகளே பரப்பப்பட்டு வருகின்றன.
`பொறுப்பில்லாத நபர்கள்தாம் காரணம்?!'
இதன் காரணமாக பொது முடக்கத்தில் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் இருந்த பயமும் விழிப்புணர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்றுதான் கூற வேண்டும். திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. பிற அனைத்து நடவடிக்கைகளும் முழுவதுமாகவோ தளர்வுகளுடனோ செயல்படும் என ஊரடங்கு 4.0-வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
``பொறுப்பில்லாத நபர்களால்தாம் இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று முன்னோக்கி உந்தப்படுகிறது. இந்த விஷயத்தில் முதியோர், இளைஞர் என்ற பேதம் இல்லை. முகக்கவசம் அணியாத, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படும் பொறுப்பில்லாத நபர்கள்தாம் இதற்குக் காரணம்" - இந்திய மருத்துவ கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா அண்மையில் தெரிவித்த கருத்து இது.
அண்மையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ``இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 76.28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் மிகவும் குறைவாக இந்தியாவில் இறப்புவிகிதம் 1.82 சதவிகிதமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றைச் சமாளிப்பதற்கு, பிற நாடுகளைவிட இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. இருப்பினும், இந்தப் பெருந்தொற்றை அலட்சியமாக அணுகக் கூடாது" என்று எச்சரித்துள்ளார்.
60 சதவிகிதம் பேருக்கு பாதிப்பு!
அரசிடமிருந்து வரும் பாசிட்டிவ் தகவல்கள், ஊரடங்கில் தளர்வுகள் என அனைத்தும் நோயின் பாதிப்பு குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகின்றனவா என மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் அறத்திடம் கேட்டோம்.
``அண்மையில் மும்பை தாராவி பகுதியில் கோவிட்-19 ஆன்டிபாடி பரிசோதனை செய்யும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 56-60 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடி வந்துவிட்டது கண்டறியப்பட்டது. அதாவது, 60 சதவிகிதம் பேர் ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கோவிட்-19-க்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி என்ற நிலையில், சுமார் 34 லட்சம் பேர், அதாவது வெறும் 0.2 சதவிகிதம் பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், களத்தில் நடத்தப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனைகளின் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. டெல்லியில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே 22 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் அண்மையில் இரண்டாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மும்பை நகரில் 30 சதவிகிதம், குடிசை வாழ்ப் பகுதியில் 60 சதவிகிதம் என்று அறியப்பட்டுள்ளது.
ஆன்டிபாடி பரிசோதனை செய்யப்பட்டால்தான், கோவிட்-19 பாசிட்டிவ் ஆன நபர்களைக் கண்டறிவதில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிய முடியும். தமிழகத்தில் ஆன்டிபாடி கண்டறியும் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர். கோவிட்-19-க்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையைப் பொறுத்தவரை 60 சதவிகம்தான் சரியான முடிவு கிடைக்கிறது. மீதம் 40 சதவிகிதம் முடிவுகள் தவறாக வருகின்றன.
தவறவிடும் அரசு!
அனைத்து காய்ச்சல் நோயாளிகளுக்கும் ரத்தத்தில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்களின் எண்ணிக்கையைப் பரிசோதிக்கும் முழுமையான செல் எண்ணிக்கை (Complete Blood Count) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பரிசோதனையில் வெள்ளையணுக்களின் உட்பிரிவான லிம்போசைட்ஸ் (Lymphocytes) என்ற கூறு 20 சதவிகிதத்துக்கும் மேல் இருக்க வேண்டும். அதே போல c-reactive protein test (CRP) என்ற ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இதன் முடிவு 6-க்கு கீழ்தான் இருக்க வேண்டும்.
கோவிட்-19 தொற்று உள்ளவர்களுக்கு இரண்டிலும் மாறுபாடுகள் காணப்படும். பரிசோதனையில் லிம்போசைட்ஸ் 20 சதவிகித்துக்கும் கீழாகவும், சி.ஆர்.பி பரிசோதனையில் 6-க்கும் மேல் சென்றால் கொரோனாவாக இருக்கலாம் என்று சந்தேகித்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.
இந்த இரண்டுப் பரிசோதனைகளையும் செய்யும் கருவி தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. தனியாரில் செய்தால்கூட சில நூறு ரூபாய் செலவில் செய்துவிட முடியும். ஆனால், எளிமையாகக் கண்டறிய உதவும் இந்தப் பரிசோதனைகளை அரசு ஊக்கப்படுத்துவதில்லை. இருமல், சளி இருக்கும் நோயாளிகளுக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்து நுரையீரலில் கோவிட்-19 தொற்று உள்ளதா என்று கண்டறியலாம். இந்தப் பரிசோதனை ஆய்வக வசதி அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் உள்ளது. ஆனால், அதையும் பரிசோதனைக்காகப் பயன்படுத்தும்படி அரசு ஊக்கப்படுத்துவதில்லை.
தவறான கணக்கீடுகள்
கோவிட்-19 தொற்றுள்ளவர்களைக் கண்டறிவதையே மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஆர்.டி.பி.சி.ஆர் முறை பரிசோதனையில் கண்டறியப்படும் நோயாளிகள், கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுபவர்கள், சி.டி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்படுபவர்கள். இத்துடன் சி.டி ஸ்கேன் மூலம் கண்டறிபவர்களை கிளினிக்கல் கோவிட்-19 என்று பிரிக்க வேண்டும். ஆனால், அரசு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் பாசிட்டிவ் வருபவர்களை மட்டுமே நோயாளிகள் என்று கணக்கில் காட்டுகிறது.
மீதம் உள்ளவர்களைக் கணக்கிலும் காட்டுவதில்லை. அவர்கள் சிகிச்சைக்காகக் கண்காணிக்கப்படுகின்றனரா என்பது கேள்விக்குறியே. இறப்பு விகிதமும் இதே முறையில்தான் பதிவு செய்யப்படுகிறது. இதனால் கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இறந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு மருத்துவப் பிரச்னைகளும் இருந்து இறந்தவர்கள் யாரையும் கோவிட்-19 இறப்பாகப் பதிவு செய்வதில்லை. இதையெல்லாம் சேர்த்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்கிறார்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பேசியுள்ள ஹர்ஷ்வர்தன், ``இந்தியாவில் வரும் தீபாவளிக்குள் கோவிட்-19 கணிசமான அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தலைவர்களும் பொதுமக்களும் சிறப்பாக இணைந்து செயல்பட்டு பெருந்தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகப் போரிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறியது போன்று பெருந்தொற்றுப் பரவல் குறைந்துகொண்டு வருகிறதா என்று தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்.
``கடந்த 15 நாள்களுக்கு முன்பெல்லாம் கோவிட்-19 சிகிச்சைக்காகப் படுக்கைகள் காலியாக இருந்தன. ஆனால், தற்போது படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. முன்பெல்லாம் சில மருத்துவமனைகள் மட்டும்தான் கோவிட்-19-க்கு சிகிச்சையளித்தனர். இப்போது சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்தும்கூட படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்
ஜெர்மனி, கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் முதல்நிலையைக் கடந்துவிட்டன. அதாவது, குறிப்பிட்ட சில நாள்கள் நோய்த்தொற்று எண்ணிக்கையே இல்லாமல் இருந்தன. அதற்குப் பிறகு, இரண்டாம் அலை ஏற்பட்டு புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால், நாம் இன்னும் முதல் அலையின் உச்சநிலைக்கே இப்போதுதான் சென்றுகொண்டிருக்கிறோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். அது முதல் அலையைவிட தீவிரமானதாக இருக்கக்கூடும்.
மக்கள் பொறுப்பற்றவர்களா?
சுமார் ஐந்து மாதங்களாக பொதுமுடக்கம் செய்துவிட்டோம். இனியும் இதை நீட்டிக்க முடியாது என்பது உண்மைதான். நோய் சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டது என்று அறிவித்து, அதற்கேற்றாற்போல் எப்படி வாழ வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சமூகப் பரவல் நிலையே அடையவில்லை, தடுப்பூசி விரைவில் வந்துவிடும் என்பன போன்ற தகவல்கள்தான் பரப்பப்படுகின்றன. இறப்பு விகிதம், தொற்றாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நம்மைவிட மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுவதே தவறான விஷயம்தான்.
Also Read: கோவிட்-19 க்ளெய்ம் பெறுவதில் என்ன சிக்கல்? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இதுபோன்ற தவறான ஒப்பீடுகளை வெளியிடுவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் குறைக்கும். இந்த நிலையில் மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்குச் சென்றடைய வேண்டிய தகவல்கள், ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு சரியாகச் சென்று சேரவில்லை. அதனால்தான் மக்கள் இயல்பாக இருக்க ஆரம்பித்துவிட்டனர்" என்கிறார்.
நோயின் தீவிரம் குறைந்துவிட்டது என்றோ, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றோ ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் மேலும் சரியக் கூடாது என்றுதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதை உணர்ந்து கைகழுவுதல், முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் இந்த மூன்று விஷயங்களையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/experts-alerts-on-second-wave-of-covid-19-cases-aftermath-lockdown-relaxations
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக