Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

பிரசாந்த் பூஷண் வழக்கு: `ரூ.1 அபராதம்; 3 மாதச் சிறை!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `அபராதத் தொகையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அவர் கட்டத் தவறும்பட்சத்தில் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்’ எனவும், `மூன்று வருடங்கள் வழக்கறிஞராகப் பணிபுரியத் தடை விதிக்கப்படும்’ எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

என்ன நடந்தது?

வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவருபவர். 63 வயதான பூஷண், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், நீதித்துறை குறித்த அவரின் கருத்துகளும் பெரும் விவாதத்தைக் கிளப்பின. பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஓட்டியதாகவும் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக பிரசாந்த் பூஷண்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கின் விவாதத்தின்போது நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் நீதித்துறை வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள்கொண்ட அமர்வு, `பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என கடந்த 14-ம் தேதி தீர்ப்பளித்தது.

பிரசாந்த் பூஷண்

அதேநேரம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், `இந்த வழக்கில் பிரசாந்த் பூஷணைத் தண்டிக்கக் கூடாது’ எனக் கேட்டுக்கொண்டார். `அவரை எச்சரித்து நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்’ எனவும் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், நீதிபதிகளுக்குக் கோரிக்கை வைத்தார். `பிரசாந்த் பூஷண் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால், தனது கருத்துகளுக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்காக அவருக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு முறை அவகாசமும் வழங்கியது.

Also Read: லட்சுமணன் கோடு உதாரணம்... என்ன செய்யப்போகிறார் பிரசாந்த் பூஷண்?

இருப்பினும், பிரசாந்த் பூஷண் தரப்பில் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கூறப்பட்ட நிலையில், `தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ என நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்தநிலையில், பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை நீதிபதிகள் இன்று அறிவித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், `கருத்துரிமைக்குத் தடை போட முடியாது. அதேநேரம், மற்றவர்களின் உரிமைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் பூஷண், தனது கருத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்கு முன்னர் ஊடகங்களில் தெரிவித்தது, நீதி நிர்வாகத்தில் தலையிடுவதாகும்.

உச்ச நீதிமன்றம்

தலைமை வழக்கறிஞரின் விவேகமான அறிவுரையை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் பிரசாந்த் பூஷண் நடந்துகொண்ட விதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிபதிகள் ஊடகங்களிடம் பேசுவது தவறு. நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க நீதித்துறைக்குள்ளாகவே ஒரு நடைமுறையை நாம் உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டனர். நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், மூன்று மாதச் சிறைதண்டனை மற்றும் வழக்கறிஞராகப் பணியாற்ற மூன்று வருடங்கள் தடைவிதித்தும் உத்தரவிட்டனர். ஒரு மாத காலமாக தேசிய அளவில் பெரும் விவாத்தைக் கிளப்பிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/prashant-bhusan-fined-re-1-in-contempt-of-court-case-by-sc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக