Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

``மனசாட்சியே இல்லாத மிருகம்!" - குலைநடுங்கச் செய்யும் கந்துவட்டிக் கொடூரன்

தருமபுரி ஜெட்டி அள்ளிப் பகுதியைச் சேர்ந்த யூனுஸின் மகன் நாசர். இவருக்கு வயது சுமார் 50 இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஸ்டார் ஃபைனான்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார். `அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்குபெற்றவர்' என்று கூறப்படும் நாசர், வட்டி வசூல் செய்வதற்கே போலீஸ் வாகனத்தில் வருவாராம். நாசரிடம் கந்துவட்டிக்குக் கடன் வாங்கிச் சிக்கிக்கொண்டவர்களின் கதைகளைக் கேட்டால் அடிவயிறு பற்றி எரிகிறது.

நாசரிடம் கந்துவட்டி வாங்கியவர்களில் ஒருவர் திருவேங்கடமூர்த்தி. "நான் தருமபுரி, ஓசூர், பெங்களூர், பாண்டிச்சேரி உட்பட 11 இடங்களில் பியூட்டி பார்லர்கள் வைத்திருந்தேன். தொழிலை விரிவுபடுத்த 2018, மார்ச் மாதம் நாசரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். 100 நாள்களுக்கு தினமும் 15,000 வீதம் 15 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ஒரு நாள் கட்டத் தவறினால்கூட மீண்டும் புதுக்கணக்குத் தொடங்க வேண்டும். 81-வது நாளன்று என்னால் பணம் கட்ட முடியவில்லை. `ஒரு மணி நேரம் அவகாசம் கொடுங்கள்' என்று நான் காலில் விழுந்து கதறியும் மனமிரங்கவில்லை நாசர்.

அன்றே கணக்கை குளோஸ் செய்துவிட்டு, புதுக்கணக்கு தொடங்கினார் நாசர். அதில் 30 லட்சம் ரூபாய் கொடுப்பதாக எழுதிக்கொண்டு பழைய நிலுவை, புதிய பிடி பணம் எல்லாம் கழிந்ததுபோக 22.80 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதற்கு 100 நாள்களுக்கு தினமும் 30,000 வீதம் 30 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இப்படி 25 முறை புதுக்கணக்குகள் தொடங்கி, ஒரு நாளைக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவரிடம் மொத்தம் 38.50 லட்சம் ரூபாய் வாங்கியதற்கு 3.96 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டியிருக்கிறேன்.

வட்டி கட்ட முடியாதபோது, உடல் உறுப்புகளை விற்றாவது பணம் கட்டச் சொல்லி மிரட்டினார். ஒருமுறை குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம். ஒரு நண்பரின் முயற்சியால் உயிர்பிழைத்தோம். டி.ஜி.பி வரை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றோம், காப்பாற்றிவிட்டார்கள். நாசருக்கு காவல்துறையில் செல்வாக்கு இருப்பதால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்றார் கண்கலங்கியபடி.

நாசரிடம் கந்துவட்டி வாங்கிவிட்டு, தலைமறைவாக வசிக்கிறார்கள் பன்னீர்செல்வம் - விஜயா தம்பதியர். "நாங்கள் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தருமபுரியில் நாசரின் ஃபைனான்ஸ் கம்பெனி அருகில் இருபது வருடங்களாக சலூன் நடத்திவந்தேன். விசேஷ நாள்களில் நாதஸ்வரம் வாசிக்கச் செல்வேன். 2013-ம் ஆண்டு குழந்தைகளின் கல்விச் செலவுக்காக நாசரிடம் இருபதாயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு வாங்கினேன். தினமும் 200 ரூபாய் கட்டவேண்டும். 51-வது நாள் கட்ட முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் அந்தக் கடனை குளோஸ் செய்துவிட்டு புதுக்கணக்கைத் தொடங்கினார் நாசர். அதில் இருபதாயிரம் ரூபாய் கொடுப்பதாக எழுதிக்கொண்டு, பிடிபணம், நிலுவைபோக கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அதுவும் ஒருநாளில் கட்ட முடியாமல் போனது. திரும்பவும் புதுக்கணக்கு.

இப்படி, பத்து முறைக்கு மேல் புதுக்கணக்குகள் தொடங்கி, 80,000 ரூபாய் கடனுக்கு ஐந்தே கால் லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறேன். இன்னும் ஐந்து லட்சம் ரூபாய் கட்டச் சொல்கிறார். இவரது டார்ச்சர் தாங்க முடியாமல் 2017-ம் ஆண்டு என் மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். அதனால், குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டோம். நாசரால் நான் குலதெய்வமாக மதிக்கும் நாதஸ்வரத்தையும், 1,800 சதுர அடிகொண்ட வீட்டுமனையையும் இழந்திருக்கிறேன். என் மகன், மகள்களுக்குத் திருமண வயதாகியும் இன்னும் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்'' என்று கண்ணீர் வடித்தார்கள்.

வயது முதிர்ந்த பெண்மணியான தைபாமாவின் கதை இன்னும் பரிதாபம். தருமபுரியில் பிரபலமான காலணி ஷோ-ரூமை நடத்தி, கெளரவமாக வசித்துவந்தது இவரின் குடும்பம். கந்துவட்டிக் கொடுமையால் கோடிக்கணக்கான சொத்துகளை இழந்து, இவரின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் சந்தித்த அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இன்று தைபாமாவின் குடும்பமும் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்துவருகிறது. "புகைப்படம் வேண்டாம்" என்று கண்ணீர்மல்கப் பேசத் தொடங்கினார் தைபாமா.

"நாசரால் மானம், மரியாதை இழந்து, நடுரோட்டுக்கு வந்து, தலைமறைவாக வாழ்ந்து வருகிறோம். நாசருக்கு வட்டி கட்டுவதற்காகவே 80-க்கும் மேற்பட்டவர்களிடம் கடன் வாங்கி, அதற்கு வட்டிக் கட்ட முடியாமல் தவிக்கிறேன். அவரால், 700 பவுன் தங்க நகைகள், மூன்று கடைகள், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள், ஒரு இன்னோவா கார் என நிறைய இழந்துவிட்டோம்

. இனி இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. நாசர் மனசாட்சியே இல்லாத மிருகம்'' என்று சொன்னவர், அதற்கு மேல் பேச முடியாமல் கதறியழுதார். மேற்கண்ட இரு சம்பவங்களும் சிறு உதாரணங்கள் மட்டுமே. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் தாண்டி பெங்களூரு வரை நீள்கிறது நாசரின் நாசகர வட்டிவலை!

தருமபுரியில் 'கந்துவட்டிக்கு எதிரான மக்கள் இயக்கம்' நடத்திவருகிறார் பச்சியப்பன். 'கந்துவட்டிக் கொடூரன் நாசர் மீது தருமபுரி காவல்துறையே நடவடிக்கை எடு' என்று தருமபுரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறது இவரது இயக்கம். பச்சியப்பனிடம் பேசினோம். "நாசரால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரூர் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய பெண் ஒருவர், நாசரிடம் கடன் வாங்கி பணம் கட்ட முடியவில்லை. அவரின் மகளைப் பிணைக்கைதியாக வைத்திருக்கிறார் நாசர்" என்றார்.

இந்தப் புகார்கள் குறித்தெல்லாம் நாசரிடம் விளக்கம் கேட்டோம். "திருவேங்கடமூர்த்தி, பன்னீர்செல்வம், தைபாமா ஆகியோர் என்னிடம் பணத்தை வாங்கிவிட்டு, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போனவர்கள். என்னிடம் மட்டுமன்றி, அவர்கள் தருமபுரியில் பலரிடமும் கடன் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள். நான் முறையாக லைசென்ஸ் வாங்கி, நேர்மையான முறையில் ஃபைனான்ஸ் செய்துவருகிறேன். நூற்றுக்கு இரண்டு ரூபாய் வட்டி வசூலிக்கிறேன். யாரையும் ஏமாற்றவில்லை. அதேபோல பெண்களைப் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறேன் என்று சொல்வதும் பொய்யான குற்றச்சாட்டு'' என்கிறார். இது பற்றி தருமபுரி காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் கேட்டோம். "டி.சி.பி டவுன் ஸ்டேஷனில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். விசாரணை முடிந்த பிறகு, நாசர்மீது தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மட்டும் சொன்னார்.

- இப்படி, ஒரு நாசர் மட்டுமல்ல... பல கந்துவட்டி அரக்கர்கள் தமிழகம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக மக்களின் வாழ்க்கையை வேட்டையாடிவருகிறார்கள். எந்தெந்த மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமை தாண்டவமாடுகிறது, எப்படியெல்லாம் கடனை வசூலிக்கிறார்கள், என்னென்ன வன்முறைகள், வக்கிரங்கள் அங்கே அரங்கேறுகின்றன... விவரம் அறிய களமிறங்கியது ஜூ.வி படை. கிடைத்த தகவல்களெல்லாம் குலைநடுங்கச் செய்யும் `பகீர்' கதைகள் முழுமையாக இங்கே க்ளிக் செய்க... https://bit.ly/3gE9T1L > உயிரா... மானமா? - காவு கேட்கும் கந்துவட்டி https://bit.ly/3gE9T1L

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/crime/shocking-stories-of-families-which-affected-by-usurious-moneylending

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக