Ad

ஞாயிறு, 20 மார்ச், 2022

1000 பேர் அமரும் இடத்தில் 7000 பேர்?! - கேரள கால்பந்து மைதான கேலரி விபத்து விசாரணையில் அதிர்ச்சி

கேரள மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். அதிலும் கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்கள் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் நிறைந்துள்ள பகுதியில் முக்கியமானது. கிரிக்கெட் ரசிகர்களைவிட ஃபுட்பால் ரசிகர்களே அதிகம் என சொல்லலாம். கோழிக்கோடு, மலப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி ஃபுட்பால் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மலப்புறம் மாவட்டம் வண்டூர் பூங்கோடு பகுதியில் உள்ள மைதானத்தில் ஃபுட்பால் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்துள்ளது.

தற்காலிக கேலரி

பூங்கோடு ப்ரெண்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, ஒரு அணியில் 7 வீரர்கள் கலந்துகொள்ளும் 'செவன்ஸ் புட்பால்' என்ற பெயரில் நடத்தப்பட்டது. கோழிக்கோடு, மலப்புறம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கால்பந்து அணியினர் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடினர். கால்பந்து போட்டியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக கிரவுண்டில் மூங்கில், கம்புகளால் தற்காலிக கேலரி அமைக்கப்படிருந்தது. போட்டியை காணவரும் ரசிகர்களுடம் டிக்கெட்டுக்கு தலா 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ஃபுட்பால் ஃபைனல் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதில் கோழிக்கோடு, நெல்லிக்குத்து அணிகள் மோதின. இறுதிப்போட்டியை காண 8000-க்கும் அதிகமானோர் அந்த மைதானத்தில் திரண்டுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காண வசதியாக அமைக்கப்பட்ட தற்காலிக கேலரியில் ஏழாயிரத்துக்கும் அதிகமானவர்கள் அமர்ந்து போட்டியை ரசித்துள்ளனர். விறுவிறுப்பாக கால்பந்து போட்டி நடந்துகொண்டிருந்த சமயத்தில் தற்காலிக கேலரி திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

உடைந்து விழுந்த கேலரி

ரசிகர்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுந்ததால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நிலம்பூர், வண்டூர், பெருந்தல்மண்ண, மஞ்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ``தற்காலிக கேலரியில் கட்டுப்பாடு இல்லாமல் ரசிகர்கள் அமர்த்தப்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது. போட்டி நடத்தியவர்கள் பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை” என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/football-ground-stand-accident-what-police-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக