Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கொரோனா: இரண்டாம் நிலையில் நெகட்டிவ் வந்தாலும் ஆபத்து தொடரும்... எப்படி? #Explainer

கொரோனா ரிசல்ட்களில் ஏன் இத்தனை குழப்பங்கள்?

பாசிட்டிவ் ஆன பின் வரும் நெகட்டிவ் ரிப்போர்ட்...

நெகட்டிவ் ஆக இருப்பவருக்கு வரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்...

கொரோனா நெகட்டிவ் ஆக இருக்கும்... ஆனால் சி.டி ஸ்கேனில் இருக்கும் நிமோனியா மாற்றங்கள்...

இவை அனைத்தும் என்ன? இந்தக் குழப்பங்கள் எதனால் நடக்கின்றன?

விளக்குகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த சிசு சிறப்பு மருத்துவர் டாக்டர் சஃபி சுலைமான்.

``சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு, கொரொனா ரிசல்ட் நெகட்டிவ் எனச் சொல்லப்பட்டு, பின்னர் அது தவறான தகவல் என அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மறைவு குறித்து அவர் மகன் விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் கூறியபோது,

கொரோனாவைப் பொறுத்தவரை, இன்று மக்களிடத்தில் இது மிக முக்கிய குழப்பமாக இருந்து வருகிறது.

பாசிட்டிவ் எப்படி பிறகு நெகட்டிவ் ஆகி, மீண்டும் பாசிட்டிவ் ஆகும்?

இதன் அறிவியலைப் புரிந்துகொள்ள, கோவிட் 19 நோய்த்தொற்றின் இயற்கையான போக்கின் பாங்கினை (Natural course of the disease) பற்றி அறிய வேண்டும்.

இந்த உலகில் இதுவரை ஏற்பட்ட அனைத்து மனித தொற்றுகளுக்கும், மூன்று வகையான நோய் கடந்துபோகும் வழிநிலை ( Natural course) உண்டு.

1. Infective Phase

2. Immune Phase

3. Convalescent Phase

மருத்துவர் சஃபி சுலைமான்

1. Infective phase

இது தொற்று நிலை (Viral phase). அதாவது, ஒருவருக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால், அந்தக் கிருமி மனித உடலில் இருக்கும் செல்களுக்குள் சென்று, இனப்பெருக்க விருத்தியடையும் வரையிலான நிலைதான் இது. இது பல நோய்களுக்கு சில மணி நேரத்தில் இருந்து சில நாள்கள் வரை இருக்கும்.

கொரோனா நோய்த்தொற்றில் இந்த முதல்நிலை, 7 நாள்கள் முதல் 11 நாள்கள் வரை இருக்கிறது. இதை Viremia என்போம். இதில் முதல் 5 நாள்கள் அறிகுறிகள் இல்லாமலும், அடுத்த 2 - 5 நாள்கள் ருசி, வாசனை உணர இயலாமை, தொண்டை வலி, காய்ச்சல், உடல்வலி, இருமல் போன்ற அறிகுறிகளுடனும் இருக்கும்.

கொரோனா நோய்த்தாக்கத்தின் முதல் நிலை (Viral phase) முழுவதும், தொற்றால் பாதிக்கப்பட்டவர் அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நோய் பரப்புபவராகவே இருப்பார். அறிகுறிகள் வரும் நேரத்தில் RT-PCR பரிசோதனை செய்துகொள்ளும்போதுதான், பலருக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் காட்டும்.

இந்த முதல் தொற்று நிலை முடிந்து, அந்த வைரஸ் நம் உடல் செல்களுக்குள் புகுந்ததும், சில மணி நேரத்திற்குள் அடுத்த நிலையான Immune phase-ஐ நோக்கி உடல் நகர ஆரம்பிக்கும்.

2. Immune Phase

இந்த நிலையில் நம் உடலானது, வெளியில் இருந்து நம்மைத் தாக்க வந்த அந்நியக் கிருமிகள், நம் உடல் செல்களைத் தாக்கி பல்கிப் பெருகாமல் இருக்க, ஒரு பெரும் தற்காப்பு யுத்தத்திற்குத் தயாராகும். கோவிட்-19 நோய்த்தொற்றைப் பொறுத்தவரை, இந்த நோய் எதிர்ப்பு நிலை மற்ற வைரஸ் நோய்களைவிட மிகக் கடுமையானதாக இருக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

A health worker takes a nasal swab sample to test for COVID-19 in Hyderabad, India

இந்த நிலை, மற்ற நோய்களில் இயல்பான உடலியல் நோய் எதிர்ப்பு சண்டையாக இருக்கும். ஆனால், கோவிட்-19 வைரஸ் செய்யும் சேட்டையால், நம் வழக்கமான எதிர்ப்பாற்றல் அணுக்களை நம் உடல் ஒரு மிகப்பெரிய போராக, ஒரு சுனாமி பேரலையாக, அபரிமிதமான நிலைக்குத் தூண்டிவிடுகிறது. இதனால், சைட்டோகைன் ஸ்டார்ம் (Cytokine Storm) எனும் நோய் எதிர்ப்புப் பேரலையை உருவாகிறது.

இதன் காரணமாகத்தான், கொரோனா நோய்த்தொற்றுக்கு, எதிர்ப்பாற்றலைக் கூட்டிடும் மருந்துகளைத் தர வேண்டாம் என ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறோம். காரணம், ஏற்கெனவே ரணகளமாக இருக்கும் நம் உடல் எதிர்ப்பாற்றல் சக்தி, இந்த மருந்துகளால் மேலும் தீவிர விளைவுகளுக்கு ஆளாகிவிடக் கூடாது.

இரண்டாவது நிலையான இந்த Immune Phase-ல், RT - PCR கொரோனா பரிசோதனை செய்து பார்த்தால், நோய் பாதித்தவருக்குப் பெரும்பாலும் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வரும். ஏனெனில், அந்த வைரஸானது உமிழ் நீர் அல்லது உடல் நீரிலிருந்து, முழுவதுமாக உடல் செல்களுக்குள்ளே சென்றிருக்கும்.

சில நேரத்தில், ஒரு சிலருக்கு மட்டும், கொரோனாவின் ஆறு வகையான ஆன்டிஜென்களில் ஏதேனும் ஓர் உடைந்த அல்லது வீரியமற்ற பகுதி உமிழ் நீர் அல்லது தொண்டை நீரில் இருக்கலாம். அவை, சிலருக்கு மீண்டும் மீண்டும் பாசிட்டிவ் ரிசல்ட் காட்ட வாய்ப்புண்டு.

கொரோனா சோதனை

எனவே, கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் நிலையான Immune Phase-ல், ஆன்டிபாடி டெஸ்ட் எடுப்பது பரிந்துரைக்கத்தக்கது. அதுதான், நோய்த்தொற்று இருப்பதை உறுதிசெய்து, உடல் அதற்கு சரியான எதிர்வினையை உண்டாக்கி இருப்பதையும் கண்டறிந்து, கோவிட்- 19 வைரஸ், நோய்க்கான ஆன்டிபாடிகளை நம் உடல் வெளிக்கொணருகிறதா எனவும் அறிய முடியும்.

இதில் கவனிக்க வேண்டியது, கொரோனா தொற்று நோயாளிகள் பலருக்கு மிக மோசமான சேதங்களை விளைவிப்பது, இந்த இம்யூன் நோய் நிலைதான். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்கூட ECMO சிகிச்சை வரை சென்றது இந்த நிலையில்தான்.

பல நோயாளிகள் இந்த இம்யூன் நோய் நிலையில்தான் அடுத்தடுத்த நோய் விளைவுகளில் மாட்டிக்கொள்கின்றனர்.

  • நிமோனியா

  • ஆக்சிஜன் குறைபாடு

  • மூச்சுத் திணறல்

  • குருதி உறைதன்மை

  • உறுப்புகள் சேதம்

  • இதயம், கல்லீரல், சிறுநீரக, மூளை என முக்கிய உறுப்புகளுடைய திறன் குறைதல்.

இப்படி நோயுடைய அடுத்தடுத்த நிலைக்கு வேகமாகத் தொற்றாளரை இழுத்துச் செல்வது, கொரோனா வைரஸுக்கு எதிராக நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நடத்தும் பிரளயப் போராட்டம்தான். எனவே, நோயின் இந்த இரண்டாம் நிலையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையில் பலருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வருவது என்பது, நோயின் இயற்கைப் போக்கு காரணமாக என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

Health workers conduct COVID-19 antigen tests for migrant workers in New Delhi, India

அடுத்து, ஒரு முக்கியமான பிரச்னை. சிலருக்கு RT - PCR கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வரும். ஆனால், கொரோனாவுக்கான அறிகுறிகள் இருக்கும். சி.டி ஸ்கேனில் நிமோனியா எனக் குறிப்பிடப்பட்டு, உடனுக்குடன் மோசமான நிலைக்குச் செல்வார்கள். இந்தக் குளறுபடிகளும் இங்கு அதிகம்.

கோவிட்-19 நோய்த்தொற்று உலகத்தால் அறியப்பட்ட இந்த 8 மாத காலத்தில், நம்மிடம் இருக்கும் ஒரே பரிசோதனை ஆயுதம் RT - PCR மட்டுமே. ஆனால், இந்தப் பரிசோதனைக்கும் ஓர் எல்லை உண்டு.

நம் உடல் நீர்களின் அடிப்படையில் பல வகையான பரிசோதனைகள் மருத்துவரீதியாகச் செய்யப்படுகின்றன. அதில் கோவிட்- 19 நோய்க்கு எடுக்கப்படும் Nasopharyngeal swab எனும் மூக்கு - தொண்டை தடவல் நீர் மூலம், நம்மால் நோயை 67% பேருக்கு மட்டுமே அறிவியல்பூர்வமாகக் கண்டறிய முடியும். மீதமுள்ள 33% பேருக்கு, இந்த வைரஸ் பாகங்களில் உள்ள ஆன்டிஜென் அகப்படாமல் போகலாம். ஆனால், அவர்களுடைய நுரையீரல் பகுதியில் அவை ஆழமாக இறங்கி அடுத்தடுத்த பாதிப்புகளைச் செய்திருக்கலாம்.

இதனால்தான், BAL (Bronchoalveolar Lavage) எனப்படும் நுரையீரல் நீரை விசேஷ கருவிகள் (Bronchoscopies) உதவியோடு எடுத்தால் 97% பேருக்கு உறுதியான ஆன்டிஜென்கள் கிடைக்கப்பெற்று தொற்றின் உண்மை நிலையை அறிந்திட முடியும் என்று சொல்லப்படுகிறது.

எனவேதான் சிலருக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்றாலும் , CT ஸ்கேனில் நிமோனியா என்று குறிக்கப்பட்டு, அவர் மிக மோசமான நிலைக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாகத்தான் அறிகுறிகள், உடலின் ஆக்ஸிஜன் நிலை அறிதல் (Spo2 monitoring) எல்லாம் மிக முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

A health worker shows a sample kit of a COVID-19 positive test during a door to door test drive in Gauhati, India

3. Convalescent Phase

நோயின் கோரத் தாண்டவம் முடிந்து பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து தப்பிய நிலை இது. சிலர் நோயின் முழுமையான பிடியிலிருந்து மீண்டும், சிலர் பகுதி அளவே மீண்டும், ஒரு சிலர் நோயின் தாக்கத்துடனேயேவும் வாழக்கூடிய நிலை இது. இந்நிலையில் வேறு சில உபாதைகளோ, அடுத்த தொற்றோ ஏற்பட்டால், நோயாளர் அதிகளவிலான பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். என்றாலும், சிலருக்கு இந்த Convalescent Phase மிக அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் கடந்து செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, ரிசல்ட் பாசிட்டிவ் என்றாலும், நெகட்டிவ் என்றாலும், இரண்டுமே நோயின் நிலைகளைச் சொல்பவைதான். முதலில் பாசிட்டிவ் ஆனவர்களுக்கு, பின்னர் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும், உள்ளுக்குள் அவருக்கு நோய் இருந்துதான் தீரும்.

அறிகுறிகள் இருந்தால் CT ஸ்கேன் எடுத்து, பாதிப்பின் நிலைகளைக் குறிப்பிடும் CoRads scoring மூலம் நோய்த்தாக்கத்தை அறிந்துகொள்ளலாம்.

அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், கோவிட்-19 ஆன்டிபாடீஸ் ரத்த மாதிரி டெஸ்ட் எடுத்து, ரிசல்ட்டின் அடிப்படையில் நோய்க்கு எதிராக நமக்கு உருவாகியிருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யலாம்.

இதில் குறிப்பிடப்பட வேண்டியது, பரிசோதனையில் பாசிட்டிவ், நெகட்டிவ் என எந்த ரிசல்ட் வந்தாலும், மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் நிலையான Immune phase-ல்தான்.''



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-stages-of-coronavirus-infection-and-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக