Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நாகை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்! - முதல்வர் விசிட்... வெளியான அரசாணை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று, ஒரே நாளில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர்

காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் நடத்தப்பட்ட பாராட்டு விழாவுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அதன் பின் இப்போதுதான் வருகிறார். அவர் வருகையை முன்னிட்டு விவசாயச் சங்கத்தினரின் மனதைக் குளிரவைக்கும் விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பாணை ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல்வரால் அறிவிக்கப்பட்டு 20-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்கள் கடந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், வேளாண் மண்டலத்துக்கான வரையறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று தமிழக அரசு பதிலளித்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடுமையான அதிருப்தி எழுந்தது.

முதல்வர்

இந்நிலையில், டெல்டா பகுதிக்கு முதல்வர் வரும்போது அந்த அதிருப்தி பிரதிபலித்துவிடக்கூடாது என்பதற்காக வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அதில் வேளாண் மண்டலம் குறித்த வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இதனையடுத்து தான் மகிழ்ச்சியுடன் ஆய்வுக்கு வந்திருக்கிறார் முதல்வர். சென்னையிலிருந்து கார் மூலம் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் 32 கோடி ரூபாய் மதிப்பிலான 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 33 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதை முடித்துக் கொண்டு மதிய உணவுக்குப் பின் சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் முதல்வர் பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நற்குணன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி வரவேற்பளித்தனர். பெருமாள்கோயில் சார்பில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி சரக காவல் ஐ.ஜி .ஜெயராமன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்ரீ நாதா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் வரிசையாக நின்று முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாகை வந்தடைந்த முதல்வர் பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இங்கும் வணிகர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகளிடம் கலந்து உரையாடினார். அத்துடன் 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார். 43.60 கோடி மதிப்பீட்டில் பணி முடிந்த 13 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/before-cm-visit-the-government-order-on-delta-issue-was-released

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக