Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

வால்ஷ், மெக்ராத், அக்ரம்... ஜாம்பவான்களால் முடியாததை ஆண்டர்சன் எப்படி சாதித்தார்?#JamesAnderson600

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற அட்டகாச சாதனையைப் படைத்திருக்கிறார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த சம்மர் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதனைகளின் சம்மர். முதலில் 500 விக்கெட்டுகளைக் கடந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஸ்டூவர்ட் பிராட் இணைந்துகொள்ள, இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சனின் உலக சாதனை.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாள் சர்ப்ரைஸ்களுடனேயே தொடங்கியது. ஆண்டர்சன் 600 விக்கெட்டுகள் எடுப்பாரா, அவர் சாதனைப்படைக்க மழை குறிக்கிடாமல் இருக்குமா என எல்லோரும் காத்திருக்க, மழை விலகி, ஆண்டர்சனும் 600 விக்கெட்டுகளைக் கடந்து சாதனைப்படைத்துவிட்டார். இந்தப் போட்டியில் அவர் 600 விக்கெட்டை எடுத்திருக்காவிட்டால் இனி அடுத்து எப்போது இங்கிலாந்து டெஸ்ட் ஆடும், கொரோனா என்னவாகும் எனப்பல கேள்விகள் இருந்தன. ஆனால், சொதப்பல் எதுவும் இல்லாமல் எல்லாம் சுபம்.

#JamesAnderson600

21 வயது இளைஞராக 2003-ம் ஆண்டு, தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வேயுடன் விளையாடினார் ஆண்டர்சன். இவரின் முதல் டெஸ்ட் விக்கெட் மார்க் வெர்முலனுடையது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே, 5 விக்கெட்டுகளை எடுத்து, தான் இங்கிலாந்தின் எதிர்காலம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார் ஆண்டர்சன்.

ஆண்டர்சன் அறிமுகமான சமயத்தில் இங்கிலாந்தில் பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உலகம் முழுக்க கோலோச்சிக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆதிக்கத்தால் ஆண்டர்சனுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 15 வீரர்களில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தாலும், ஆடும் அணியில் வாய்ப்புக் கிடைக்காமல், பல நாள்கள், பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். 2003-ம் ஆண்டு முதல் விக்கெட்டை எடுத்தவருக்கு, நூறாவது விக்கெட் எடுக்க, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. 2008-ம் ஆண்டுதான், அவரால் அந்த மைல்கல்லை அடைய முடிந்தது. அதற்குப்பின் அணியின் நிரந்தர வீரர் ஆனார், ஆண்டர்சன். விக்கெட்டுகளைக் குவித்துக் கொண்டே வந்த அவர், சராசரியாக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, அடுத்தடுத்த 100 விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே வந்தார்.

#JamesAnderson600
2010-ல் 200, 2013-ல் 300 ,2015-ல் 400, 2017-ல் 500, 2020-ல் 600 விக்கெட்டுகள் என பெரும் விக்கெட் வேட்டையை நடத்தி முடித்துள்ளார். பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளரின் சராசரி விளையாடும் காலம் 10-ல் இருந்து 12 ஆண்டுகள்தான். சர்வதேசக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, தொடர்ந்து துரத்தும் காயங்கள், அறுவைசிகிச்சைகள் எனப் பல சோதனைகளைத் தாண்டித்தான் ஒரு வேகப்பந்துவீச்சாளரின் சர்வதேச கிரிக்கெட் கரியர் அமையும்.

வேகப்பந்துவீச்சாளர்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அதிவேகப் பந்து வீச்சாளர்கள், மிதவேகப் பந்துவீச்சாளர்கள். இதில் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களின் ஆடும் காலம், அதிகபட்சமாக பத்தே ஆண்டுகள்தான். காயங்கள், அவர்களின் மீதி கிரிக்கெட் வாழ்க்கையை காலி செய்து விடும். இந்த மிதவேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தில் இருந்து ஓரளவு தப்பித்து, அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கலாம். ஆண்டர்சன் தேர்தெடுத்தது, இந்த மித வேகப்பந்து வீச்சு முறையினைத்தான். முதலில் அதிக வேகத்துடன் பந்து வீசிக் கொண்டிருந்தவர், நாள்கள் செல்லச் செல்ல, தனது பலம் எது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தனது பெளலிங் முறையை, மாற்றியமைத்துக் கொண்டார். அதுவே அவரை, பதினெட்டு ஆண்டு காலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைத்துள்ளது.

மெக்ராத், வாசிம் அக்ரம், ஜாகீர் கான் போன்ற ஸ்விங் பந்துவீச்சாளர்களின் வழி வந்தவர்தான், ஜேம்ஸ் ஆண்டர்சன். பந்தை, அருமையாக, இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடியவர்.

குறிப்பாக, இங்கிலாந்து மைதானங்களில் ஆண்டர்சன், மிகவும் அபாயகரமானவர். அவரது பந்துவீச்சு, எப்பேர்ப்பட்ட சாம்பியன் பேட்ஸ்மேன்களையும், ஆட்டம் காணச் செய்துவிடும். சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், டேவிட் வார்னர், பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஆகியோரை 9 முறை ஆட்டமிழக்கச் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். மெக்ராத்தைப் போல நேர்த்தியாகப் பந்து வீசுவது, வாசிம் அக்ரமைப் போலப் பந்தை ஸ்விங் செய்வது, ஜாகிர் கானைப் போல பந்தை மறைத்து வைத்து, ரிவர்ஸ் ஸ்விங் செய்வது என, இந்த மூவரும் கலந்த கலவையாக இருந்தமையால்தான், ஆண்டர்சனால் 600 விக்கெட்கள் என்ற மைல்கல்லை அடைய முடிந்தது.

#JamesAnderson600

ஆண்டர்சன் 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 29 முறை 5 விக்கெட் ஹால் எடுத்து, 600 விக்கெட்டுகள் என்ற இலக்கினை அடைந்துள்ளார். அவர் குறைந்த பந்துகளில், 600 விக்கெட்டுகளை எடுத்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ஆறே பந்துகளில், முரளிதரனிடம், அந்தச் சாதனையைத் தவற விட்டார். முத்தையா முரளிதரன் 33,711 பந்துகளில், 600 விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில், ஆண்டர்சன் 33,717 பந்துகளில் 600 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், ஒரு ஸ்பின்னர், அதிகப் பந்துகளை வீசுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் 33,000 பந்துகள் வீசுவது என்பது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கிரிக்கெட் விளையாட்டின் மீது அவருடைய தீராக் காதல், திறன், தாங்கும் ஆற்றல், உடல்நலம் எனப் பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது அவரடைந்துள்ள இந்தக் கடின இலக்கு.

பழைய ஓயினுக்கு, எப்போதும் சுவை அதிகம் என்பார்கள். அதுபோலத்தான் ஆண்டர்சனும்; தனது முதல் 100 விக்கெட்டை எடுக்கும்போது அவரது சராசரி 34.70. அதற்குப்பிறகு தான் எடுக்கும் ஒவ்வொரு 100 விக்கெட்டுகளுக்கும், தனது சராசரியை இரண்டு சதவிகிதம் குறைத்துக் கொண்டே வந்தவருக்கு, 600-வது விக்கெட்டை நிறைவுசெய்யும்போது, சராசரி வெறும் 26.76 மட்டுமே!

இதுதான், ஆண்டர்சனின் பலம். இதனால்தான், அவரால் 18 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க முடிந்திருக்கிறது. ஆண்டர்சன் வெகு விரைவில், இன்னுமொரு சாதனையையும் படைக்கக் காத்திருக்கிறார். அது, 30 வயதுக்கு மேல் விளையாடிய போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த பெளலர் என்கிற சாதனை. தற்சமயம், அந்தச் சாதனை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், வால்ஷின் கைவசமுள்ளது. அவர் மொத்தமாய் 341 விக்கெட்டுகள் எடுத்திருக்க, அதனை முறியடிக்க, ஆண்டர்சனுக்கு இன்னும் 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதனால், அந்தப் பெருமையும், விரைவில் அவர் வசம் வரும் என்பதே எல்லோரின் கணிப்பும்.

Anderson

இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த ஒரே பெளலர் ஆண்டர்சன்தான். அவர் எடுத்துள்ள மொத்த இந்திய விக்கெட்டுகள் 110. உள்ளூர் மைதானங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், 384 விக்கெட்டுகளுடன், அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இப்படி, பல சாதனைகளைப் படைப்பதற்கு, அவருக்கு உறுதுணையாக இருந்தது, அவரது ஸ்விங். அதற்கென பலவிதமான பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னை மேம்படுத்தினார். 2007-ம் ஆண்டு, தான் விளையாடும், கவுன்ட்டி கிரிக்கெட் அணியான லேங்ஷயர் அணியின் பயிற்சியாளர் மைக் வாட்கின்சனுக்குக் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு, தனது பெளலிங் வீசும் முறையை மாற்றியமைத்து, இங்கிலாந்து மைதானத்தில் அபாயகரமான இன் ஸ்விங் பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

இந்திய மைதானத்தில் தனது ரிவர்ஸ் ஸ்விங்கால் 4 விக்கெட்டுகள் எடுத்து உள்ளுர் மைதானங்களில், வெல்ல முடியாத இந்திய அணியை விழ்த்தியது, அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தது, 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன், 11 விக்கெட்டுகள் எடுத்து 354 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை விழ்த்தியது, 2013-ம் ஆண்டு ஆஷஸ் போட்டியில், 10 விக்கெட்டுகள் எடுத்தது, 2016-ல் இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளை விழ்த்தியது என பல மறக்கமுடியாத பெளலிங் ஸ்பெல்கள் இவருடைய சாதனையின் உச்சத்தை எடுத்துரைக்கும்.

James Anderson

Also Read: பிரையன் லாராவே பாராட்டும் பாகிஸ்தான் கேப்டன்... அசார் அலியின் பவர் கூடியது எப்படி?!

ஆண்டர்சன், இதோடு, தன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்வாரா எனக் கேட்பவர்களுக்கு, சிரித்துக்கொண்டே, ''நான் இன்னும் தனது கணக்கை முடிக்கவில்லை; இன்னும் என்னால் சிறப்பாக பந்துவீசமுடியும். அடுத்து 700 விக்கெட்டுகள்தான் என் டார்கெட்'' என்கிறார் இந்த 38 வயது பெளலர். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஆஷஸ் தொடர் மேல் தற்போது தனது முழு கவனத்தையும் வைத்திருக்கிறார். அவர் இதேவேகத்தில் பந்துவீசினால் 700 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் ஒன்றும் எடுக்கமுடியாததல்ல.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி, ''வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கப்படுவதில்லை... அவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களாகவே பிறக்கிறார்கள்!" என்று சொன்னார்... ஆண்டர்சனும் வேகப்பந்து வீச்சாளராகவே பிறந்து, கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை மிக மிக அழுத்தமாய்ப் பதித்துவிட்டார்.



source https://sports.vikatan.com/cricket/how-james-anderson-became-the-first-fast-bowler-to-take-600-wickets

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக