Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே-வில் இருந்து ஏன் வெளியேறினார்... தள்ளிப்போகுமா ஐ.பி.எல்?! #CSK

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இது சோதனைக்காலம். இரண்டு வீரர்கள் உள்பட அணியில் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ், சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல்-ல் இருந்து திடீர் வெளியேற்றம் என சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு தொடர் சறுக்கல்கள். இதற்கிடையே ஐபிஎல் தொடக்கமும் தள்ளிப்போகும் என்கிற நிலையில் என்னதான் நடக்கிறது என சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்தேன்.

தோனியின் முடிவின்மீது கேள்வியெழுப்பிய ரெய்னா?

2020 ஐபிஎல் ஐக்கிய அரபு நாட்டில் உறுதியானதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பயிற்சிகளைத் திட்டமிடத் தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக வீரர்கள் யாரும் பயிற்சி எடுக்காமல் இருக்கிறார்கள் என்பதால் தோனியின் யோசனையின்படி சென்னையில் முகாம் நடத்துவது என திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலில் சென்னை முகாம் யோசனைக்கு சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனே கொஞ்சம் தயங்கியிருக்கிறார்.

CSK CAMP

காரணம், சென்னையில் கொரோனாவின் தீவிரம் அதிகம் இருப்பதோடு ஹோட்டல், ஸ்டேடியம் என இரண்டு இடத்திலும் பயோ செக்யூர் அமைப்பை ஏற்படுத்திவிடமுடியுமா என சந்தேகம் எழுப்பியிருக்கிறார். ஆனால், கேப்டன் தோனி சென்னையில் கேம்ப் அவசியம் எனச் சொல்ல வீரர்களை சென்னைக்கு வரவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. சிஎஸ்கே வீரர்கள் வழக்கமாகத் தங்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள க்ரவுன் பிளாஸா ஹோட்டலில் வீரர்கள் தங்குவதற்கான அறைகளையும், சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சிகள் மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. வீரர்கள், பயிற்சியாளர்களைத் தவிர மற்ற யாருக்கும் இரண்டு இடங்களிலுமே அனுமதி கிடையாது என முன்னரே சொல்லப்பட்டது.

இந்நிலையில் வீரர்கள் தங்களின் சொந்த ஊர்களிலேயே கொரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் ரிசல்ட் வந்ததும், சென்னைக்கு வரத் தயாராகினர். ஆகஸ்ட் 14-ம் தேதி சிஎஸ்கே அணி நிர்வாகம் தனி விமானம் ஏற்பாடு செய்ய சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, தீபக் சஹார், கார்ன் ஷர்மா ஆகியோரை டெல்லியில் இருந்து அழைத்துக்கொண்டு அதே விமானம் ராஞ்சி சென்று, அங்கே தோனியையும், மோனு குமாரையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்தது. ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

சுரேஷ் ரெய்னா

எல்லை மீறிய வாக்குவாதம்

ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்க, அவரைத் தொடர்ந்து ரெய்னாவும் அறிவித்தார். ஆகஸ்ட் 16 முதல் 20 வரை சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. இந்தப் பயிற்சியின்போதே பல வீரர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 19ம் தேதி இரவு சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் பதான்கோட்டில் தாக்கப்பட்டனர். அந்தத் தாக்குதல் சம்பவத்துப்பிறகும் இயல்பாகவே அணியினருடன் பயிற்சியில் இருந்திருக்கிறார் ரெய்னா. 21-ம் தேதி சிஎஸ்கே அணியினர் துபாய் சென்றனர்.

ஒரு வாரம் க்வாரன்டீன், டெஸ்ட்டிங் அதன்பிறகு பயிற்சி என்பதுதான் பிளானாக இருந்தது. க்வாரன்டீனிலும் மிகவும் உற்சாகமாகவே இருந்திருக்கிறார் ரெய்னா. இந்நிலையில் 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் 10-க்கும் அதிகமானப் பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வர சுரேஷ் ரெய்னாவுக்கு சென்னை முகாம் குறித்து கேள்விகள் எழும்பியிருக்கிறது. ''ஏன் சென்னையில் கேம்ப் நடத்தினீர்கள்?'' என காசி விஸ்வநாதனிடமே ரெய்னா வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. தோனியின் அறிவுரையின் பேரில்தான் கேம்ப் நடந்தது என சொல்லப்பட தோனியின் முடிவுகள் குறித்தே ஒரு கட்டத்தில் ரெய்னா கேள்வி எழுப்பினார் என்கிறார்கள்.

இந்நிலையில் ஏற்கெனவே குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இந்தியாவில் தனியாக இருப்பது எனப் பல விஷயங்களும் சேர்ந்துகொள்ள கோபத்தில் சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் ரெய்னா. துபாய் ஹோட்டலிலும் சில வீரர்கள் க்வாரன்டீன் விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை எனச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் ரெய்னா. இறுதியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடக்கூடிய மனநிலையில் தான் இல்லை எனவும், இந்தியா திரும்ப விரும்புவதாகவும் தோனியிடமும், காசியிடமும் சொல்ல அவர்கள் உங்களின் முடிவே இறுதியானது எனச் சொல்லியிருக்கிறார்கள். ரெய்னா இந்தியா வந்துவிட்டார். இனி ரெய்னாவின் கரியர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடராது என்றே தெரிகிறது. அடுத்து ஆண்டு அவர் ஐபிஎல் ஆடினால் வேறு அணிக்காகத்தான் விளையாடவேண்டியிருக்கும் என்கிறார்கள்.

தள்ளிப்போகுமா ஐபிஎல்?

சுரேஷ் ரெய்னா

இதற்கிடையே ஐபிஎல், அபுதாபி, துபாய், ஷார்ஜா என யுஏஇ-யின் மூன்று நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் துபாய், ஷார்ஜாவில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அபுதாபி-க்கு உள்ளே நுழையும்போது ஒவ்வொருமுறையும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவேண்டும் என சொல்லப்பட, இப்போது இந்த நடைமுறையில் சிக்கல் எழுந்திருக்கிறது.

Also Read: ``இதுவரைக்கும் 21 முறை கொரோனா டெஸ்ட் எடுத்துட்டேன்!'' - புலம்பும் ஐபிஎல் வீரர்!

மேலும், திட்டமிட்டபடி செப்டம்பர் 19-ம் தேதி மும்பையுடன், சிஎஸ்கே முதல் போட்டியில் விளையாடவேண்டும் என்றால் சிஎஸ்கே வீரர்களுக்கு இன்னும் சில நாள்களுக்குள் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்து பயிற்சிகளைத் தொடங்கியாகவேண்டும். இது எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியாததால் ஐபிஎல் ஒரு வார காலம் தள்ளிப்போகலாம் அல்லது போட்டி அட்டவணைகள் மாறலாம் எனத்தெரிகிறது. அபுதாபியில் குறைவானப் போட்டிகளே நடத்தபடும் எனத் தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்த பலருமே அசிம்ப்டமேட்டிக் என்பதால் விரைவில் குணமாகிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால் செப்டம்பர் 6 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிகள் துபாயில் தொடங்கும் எனத் தெரிகிறது.



source https://sports.vikatan.com/cricket/reasons-behind-suresh-rainas-exit-from-csk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக