Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

``கடிதம் எழுதிய 23 பேர் மட்டுமல்ல... இன்னும் சிலரும் இருக்கிறார்கள்'' - கொளுத்திப்போடும் கோபண்ணா!

`காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் பா.ஜ.க தூண்டுதலின்பேரில் செயல்படுகிறார்கள்', 'காங்கிரஸ் கட்சி இன்னும் 50 ஆண்டுக்காலத்துக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்' என அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்றுவரும் காரசார விமர்சனங்களும், அவற்றையொட்டிய குழப்பங்களும் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பிவருகின்றன.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார் ராகுல் காந்தி. அதன் பிறகு தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சோனியா காந்தியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவுபெற, `தலைவர் பொறுப்பில் அடுத்து ராகுல் காந்திதான் அமர வேண்டும்’ என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுப்பெற ஆரம்பித்தது. ஆனால், 'தலைவர் பொறுப்புக்கு தான் வரப்போவதில்லை' என்ற கருத்தில் ராகுல் உறுதியாக இருந்துவிடவே இழுபறி நிலை நீடித்தது. முடிவில், வேறு வழியின்றி `கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார்’ என முடிவெடுக்கப்பட்டது.

ராகுல் காந்தி

இந்த நிலையில்தான் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் ஒன்று சேர்ந்து கடிதம் ஒன்றை எழுதி, இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பார்வைக்கு அனுப்பிவைத்தனர். அதில், `கட்சியின் நலன் கருதி நிரந்தரத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும்' என்றும் கோரியிருந்தனர்.

இந்தக் கடிதம் ராகுல் காந்தி தரப்பை கொதிப்படையச் செய்ததாகக் கூறப்படுகிறது. 'சோனியா காந்தி உடல்நலம் குன்றியிருக்கும் இந்தச் சமயத்தில், கட்சித் தலைவர் பதவி குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன... பா.ஜ.க தூண்டுதலின் பேரில்தான் காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்களே இப்படிச் செயல்படுகிறார்கள்' என்று கொதிப்புடன் கூறியதாகவும் செய்திகள் பரபரப்பு கூட்டின.

இதையடுத்து, 'பா.ஜ.க தூண்டுதலின் பேரில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்று நான் எங்கேயும், யாரையும் குறிப்பிட்டதில்லை' என்று ராகுல் காந்தி உடனடியாக மறுப்பு தெரிவித்ததையடுத்து விவகாரம் முற்றுப் பெற்றுவிட்டது... என்று எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டெறிந்த நேரத்தில்தான், ``காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் மூலமே தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நியமனம் மூலம் பதவிக்கு வரும் தலைவர்களுக்கு கட்சியினரிடம் ஒரு சதவிகித ஆதரவுகூட இருக்காது. உட்கட்சித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் இன்னும் 50 ஆண்டுக்காலத்துக்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கும்'' என்று கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், புதிதாக ஒரு வெடிகுண்டை வீசியிருக்கிறார்.

குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்தின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இதையடுத்து, கட்சிக்குள்ளேயே இரு பிரிவுகளாக நின்றுகொண்டு தலைவர்கள் மோதிக்கொள்ளும் சூழலும் உருவாகிவருகிறது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் இந்த விவகாரம் குறித்து தலைவர்களிடையே எந்தவிதமான கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிந்துகொள்ள முற்பட்டோம்.

மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம்.

``காங்கிரஸ் வரலாற்றிலேயே தொடர்ந்து 20 வருடங்கள் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்திய பெருமை சோனியா காந்திக்குத்தான் உண்டு. அவரின் தலைமைப் பொறுப்பின்கீழ்தான் கட்சி தொடர்ந்து 10 வருடங்கள் மத்திய ஆட்சிப் பொறுப்பிலும் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது அவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றின் காரணமாக முன்னைப்போல் செயல்படுவதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, நாடு முழுக்க சுற்றுப்பயணம் செல்வதற்கோ, மாநிலக் கட்சி அலுவலகங்களில் ரிவ்யூ மீட்டிங் நடத்துவதற்கோ அவரின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

இந்த நேரத்தில், இளம் தலைவராக சுறுசுறுப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இளைஞர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோம்.

திருநாவுக்கரசர்

இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் சொல்வதுபோல், உட்கட்சித் தேர்தல் நடத்தினாலும்கூட, ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடப்போவதில்லை. கடந்த காலத்திலேயேகூட தேர்தல் மூலமாகத்தானே அவர் தலைவர் பொறுப்புக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியில் எல்லா பொறுப்புகளுக்கும், எல்லோருமே தேர்தல் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். களத்தில் ஒருவர் நிற்கும்போது, அவரை எதிர்த்துப் போட்டியிட யாருமே மனுத்தாக்கல் செய்யவில்லை என்ற சூழலில் மட்டும்தான் தானாகவே ஒருவர் தலைவர் பொறுப்புக்கு வர முடியும்.

குலாம் நபி ஆசாத், கட்சியின் மூத்த தலைவர்; முன்னாள் முதலமைச்சர். எனவே, அவரை தனி கோஷ்டியாகவோ அல்லது எதிர் கோஷ்டித் தலைவராகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக நாட்டில், அவரவர் கருத்தைச் சொல்ல சுதந்திரம் இருக்கிறது. அந்தவகையில், அவரும் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்... அவ்வளவுதான். அதனால்தான், சோனியா காந்தியும் 'காங்கிரஸ் கட்சியே ஒரு குடும்பம் மாதிரிதான். அவரவர் தனிப்பட்ட கருத்தை, அபிப்ராயங்களைச் சொல்லலாம்' என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், நாடே கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது; சோனியாகாந்தியும் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் குலாம் நபி ஆசாத் இந்த கருத்தைப் பேசியிருக்க வேண்டியதில்லை; அதுவும் ஊடகத்துக்கு செய்தி போகும் அளவுக்குப் பிரச்னையைக் கொண்டு சென்றிருக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில்தான் ராகுல் காந்தியும் கருத்து சொல்லியிருக்கிறார். மற்றபடி, 130 வருட கட்சி வரலாற்றில் இது போன்ற ஏராளமான பிரச்னைகளை கடந்துவந்திருப்பதுதான் காங்கிரஸ் எனும் பேரியக்கம். எனவே, கட்சிக்குள் வேறு எந்தப் பெரிய பிரச்னையும் இல்லை; யாரையும் 'விரோதி'யாக ராகுல் காந்தி பார்க்கவுமில்லை’’ என்றார் விளக்கமாக.

இந்த விவகாரத்தில், சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்தின் கருத்தை அறிய விரும்பி அவரைத் தொடர்புகொண்டோம்... ''இது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சோனியா காந்தி

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசியபோது,

''கட்சியில் பொறுப்புக்கு வரும் அனைவருமே ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதுமே விருப்பம்கொண்டவர் ராகுல் காந்தி. `கட்சியின் சார்பில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்கூட அமெரிக்க ஜனநாயக முறைப்படி, உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்று விரும்பியவர் அவர். எனவே, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அவர் எப்போதுமே தயார் நிலையில்தான் இருந்திருக்கிறார். கடந்த காலங்களில் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸில் தேர்தலை நடத்தியவரே ராகுல் காந்திதான்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத்தான் தேர்தல்களில் மக்களும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறபோது, மக்கள் செல்வாக்குபெற்ற தலைவர்களாக அந்தக் குடும்பத்தினர் மட்டுமே இருந்துவருகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நேரு குடும்பத்தைத் தாண்டி மக்கள் செல்வாக்குபெற்ற தலைவர்கள் என்று யாரும் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

இப்போது கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ள இந்த 23 பேர்களோடு இன்னும் சில தலைவர்களும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கட்சியின் தொண்டர்களோடும், பொதுமக்களோடும் பெரிய அளவில் தொடர்பில் இல்லாதவர்கள்தான். ராஜீவ் காந்தி காலத்திலிருந்தே கட்சியின் முக்கியத் தலைவர்களோடு இருந்த தொடர்பின் காரணமாக பதவிகளைப் பெற்று அதிகாரத்தில் இருந்துவந்தவர்கள்... அவ்வளவுதான்.

கோபண்ணா

காங்கிரஸ் கட்சியில் தேர்தல் மூலமாகத்தான் எல்லோருமே பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்றாலும்கூட, ஒரு முழுமையான தேர்தலை இன்னும் கட்சிக்குள் நடத்த முடியவில்லை என்பதும் உண்மை. ஏதோவொரு கருத்தொற்றுமையினால் கட்சியின் பொறுப்புகளுக்கு தலைவர்கள் நியமனம் ஆகிவிடுவார்கள்.

1999-ம் ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தி மற்றும் ஜிதேந்திர பிரசாத்துக்கு இடையே போட்டி நடைபெற்றது. ஜிதேந்திர பிரசாத் வெறும் 93 ஓட்டுகள் வாங்கினார். சோனியாகாந்தி 930 ஓட்டுகள் பெற்றார். கடந்த முறை ராகுல் காந்தி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே, அன்ன போஸ்ட்டில் அவர் வெற்றி பெற்று தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

இப்போது மறுபடியும் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்க அகில இந்திய காங்கிரஸின் காரிய கமிட்டியால்தான் முடியும். ராகுல் போட்டியிடும்போது, அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்ப மாட்டார்கள். எனவே, வரும் ஜனவரி மாதத்துக்குப் பிறகு, இந்த கொரோனா தொற்று குறைந்துவிடும் காலத்தில் நிச்சயம் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதாவது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்று, அதில் முறைப்படி தலைவர் பதவிக்கு ராகுல் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்கிறார் நம்பிக்கையோடு.

சோனியா காந்தி

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் இந்த உள்விவகாரத்தில், பா.ஜ.க-வின் தூண்டுதலும் பின்னணியாகச் செயல்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் தெரிவித்துவருகின்றனர். கடந்த வருடம் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோது, 'தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரொருவரும் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை' என்று ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கூறியிருந்தனர்.

Also Read: `கட்சிப் பாகுபாடில்லா விருந்தோம்பல்!'- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி மறைவால் கலங்கும் மக்கள்

இந்தச் செய்தி, ஒரு வருடம் கழித்து அண்மையில் மீண்டும் ஊடகத்தில் `பரபர’ செய்தியாக்கப்பட்து. 'இதன் பின்னணியில் பா.ஜ.க-தான் ஊடகத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது' என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்தனர். எதிர்க்கட்சியினர் சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்..

''அரசியலில் பலம் வாய்ந்தவர்கள் பற்றி எப்போதுமே பேசப்படும். பலவீனமானவர்கள் தங்கள் மீதுள்ள அழுக்கைத் துடைத்துக்கொள்ள வழி தேடுவதும், தங்கள் வீட்டிலுள்ள பிரச்னைகளை மற்றவர்கள்மீது பழியாகப் போட்டு தப்பித்துக்கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான்.

நாராயணன் திருப்பதி

இந்திய அளவில், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது. எனவே, தேவையேயில்லாமல், அவர்களது உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க சம்பந்தப்பட்டிருப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட நெடுங்காலமாக இருந்துவரக்கூடிய கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் மீதே இப்படியொரு குற்றச்சாட்டை அவர்கள் சுமத்துகிறார்களென்றால், இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய முதல்கட்டத் தலைவர்கள்தான். மற்றபடி இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை பா.ஜ.க-வுக்கு இல்லை.

Also Read: கோவை: பட்டாசு வெடித்து வரவேற்பு!- அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

'ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும்' என்று பிரதமர் மோடி சொன்னதாகப் பொய்யான செய்தியைப் பரப்பியவர்கள், பிரியங்கா காந்தி போன வருடம் சொன்ன செய்தியை இப்போது ஏன் வெளியிடுகிறார்கள் எனக் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.

அமித் ஷா - நரேந்திர மோடி

அந்தச் செய்தியில், பிரியங்கா கூறாத கருத்து எதுவும் இடம்பெறவில்லையே... ஏற்கெனவே அவர் கூறியிருந்ததுதானே செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதற்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்பந்தம்?'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-congress-leader-selection-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக