இம்மாத தொடக்கத்தில், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் உள்ள அனைத்துத் தேர்தலுக்கும் பொதுவான ஒரு வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இதில் ஆலோசனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரின் முதன்மைச் செயலர், தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே தேர்தலை வைப்பதற்காக, ஆர்டிகள் 243K மற்றும் 243ZA-களில் திருத்தம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இதில் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
243K மற்றும் 243ZA ஆர்டிகள் தான் மாநில தேர்தல் ஆணையத்திற்குத் தேர்தல் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான கட்டுப்பாடு மற்றும் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கொடுக்கிறது. இந்த ஆர்டிகள்களில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்குப் பயனுள்ளதாக அமையும்.
தற்போது நடைபெற்றுள்ள கூட்டத்தில், அமைச்சரவை, சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலர்கள், தேர்தல் ஆணையத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த சட்டத் திருத்தம் குறித்தும், பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரைவில் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிய வருகிறது.
இந்த கூட்ட விவாதத்தின் மூலம் விரைவில் மோடி அரசு கூறிவந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தின் தயாரிப்புகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-one-nation-one-election-coming-to-act-meeting-held-in-prime-ministers-office
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக