Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ராபின் சிங்... துரோகத்தால் துரத்தப்பட்டவன் திருப்பி அடித்த கதை தெரியுமா?! அண்டர் ஆர்ம்ஸ் - 16

காலம் எல்லோரையும் கனிவுடன் நடத்துவதில்லை. திறமையிருந்தும், தகுதியிருந்தும், கடுமையாக உழைத்தும் சில நேரங்களில் நாம் எங்கிருக்கவேண்டுமோ எங்கே நம்மை கொண்டுபோய் காலமோ, கடவுளோ நிறுத்துவதில்லை என்பதற்கான உதாரணம்தான் ராபின் சிங்.

கரீபியத்தீவுகளில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் ராபின்சிங். வெஸ்ட் இண்டீஸின் டிரினிடாட் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தவரை, 80-களின் தொடக்கத்தில் கல்லூரி படிப்புக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கிறது அவர் குடும்பம். சென்னையில் பச்சையப்பா கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்தவர் அப்படியே தமிழக அணிக்குள் வருகிறார். தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்தும், சதங்கள் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களைக் கவனிக்கவைக்கிறார். தமிழகம் கடைசியாக வென்ற 1988 ரஞ்சி சீசனில் அடுத்தடுத்து சதங்கள் அடிக்கிறார் ராபின் சிங். இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, ரயில்வேஸை தோற்கடிக்க ராபின்சிங்கின் 131 ரன்கள் மிக முக்கியக் காரணம். இந்த சீசனில் மட்டும் 4 சதங்கள் உள்பட 555 ரன்கள் அடித்ததோடு, 17 விக்கெட்டுகளையும் எடுத்து தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுக்கிறார் ராபின்சிங். 26 வயது வீரராக 1989-லேயே இந்திய அணிக்குள் நுழைகிறார்.

ராபின் சிங்

ராபின்சிங்கிற்கு எல்லாமே கனவு போல் இருந்திருக்கும். கரீபியத்தீவில் பிறந்தவர், அந்த நாட்டுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியவர், படிப்புக்காக சென்னை வந்து, தமிழக அணியிலும் இடம்பிடித்து, ரஞ்சி கோப்பையைப் பெற்றுத்தந்து இந்திய அணிக்குள் வந்தது என்பது யாருமே கணித்திருக்கமுடியாத திரைக்கதை. காலம் அதை ராபின்சிங்கிற்கு நிகழ்த்திக்காட்டியது.

ஆனால், தனது திறமையால் இந்திய அணிக்குள் வந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியக் குடியிரிமைப்பெற்று இந்தியராகவே மாறிய ராபின் சிங், 1989-ல் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒருநாள் தொடரில்தான் இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போது இந்திய அணியின் கேப்டன் திலீப் வெங்சார்கர். ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 3-0 என இழந்துவிட்ட இந்திய அணி, ஒருநாள் தொடரிலும் 2-0 என பின்தங்கியிருக்கும்போதுதான் மூன்றாவது போட்டியில் ராபின்சிங்கிற்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கிறது. முதல் போட்டியில் ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி 3 ரன்களில் அவுட் ஆகிறார். ஒரு ஆல்ரவுண்டர் பேட்டிங்கில் சொதப்பினாலும், பெளலிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் நினைப்பார். ராபின் சிங்கும் அப்படித்தான் நினைத்திருப்பார். ஆனால், ரஞ்சி கோப்பையில் பல 5 விக்கெட்டுகளை எடுத்த ஆல்ரவுண்டரான ராபின் சிங்கை கேப்டன் வெங்சார்க்கர் எப்போது பெளலிங் போட அழைத்தார் தெரியுமா? வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு இன்னும் சில ரன்களே தேவைப்பட்டபோது. ராபின் சிங் அன்று வீசியது மொத்தம் 8 பந்துகளே. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.

ராபின் சிங்

அடுத்தப்போட்டியில் 8-வது பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்படுகிறார். நாட் அவுட் பேட்ஸ்மேனாகப் 10 ரன்கள் அடிக்கிறார். ஆனால், என்ன காரணமோ ராபின்சிங்கை கடைசிவரை பெளலிங் போட அழைக்கவேயில்லை வெங்சார்கர். கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்க்கு எல்லாம் பெளலிங் போடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ராபின்சிங் புறக்கணிக்கப்படுகிறார். இந்த இரண்டு போட்டிகளோடு மூட்டைக்கட்டப்படுகிறது ராபின் சிங்கின் கரியர்.

ஆனால், காத்திருந்தார் ராபின்சிங். தொடர்ந்து ரஞ்சிப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டேயிருந்தார். தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து சதங்கள் அடித்துக்கொண்டேயிருந்தார். விக்கெட்டுகள் எடுத்துக்கொண்டேயிருந்தார்.

7 ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் கதவுகள் மீண்டும் ராபின்சிங்கிற்குத் திறந்தது. 1996-ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் நடந்த டைட்டன் கோப்பைத் தொடரில் செளரவ் கங்குலி திடீரென காயம் அடைய, தொடரின் பாதியில் தற்காலிக ஏற்பாடாக ராபின்சிங் இந்திய அணிக்குள் அழைக்கப்பட்டார். அப்போது ராபின் சிங்கிற்கு வயது 33. கிட்டத்தட்ட கரியரின் கடைசிப்பகுதி.

Robin Singh

ராபின் சிங்கின் செகண்ட் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடங்கியது. 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கியவர் 6 பந்துகளில் 6 ரன்கள் அடிக்கிறார். இந்தியா 289 ரன்கள் அடிக்கிறது. 290 ரன் டார்கெட்டை நோக்கி ஆஸ்திரேலியா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பைப்போட 16 ஓவர்கள் வரை விக்கெட்டே விழவில்லை. அப்போதுதான் கேப்டன் டெண்டுல்கர் ராபின்சிங்கிடம் பந்தைக் கொடுக்கிறார். முதல் ஓவரிலேயே அடுத்தடுத்தப்பந்துகளில் வார்க் வாகின் விக்கெட்டையும், ஸ்டூவர்ட் லாவின் விக்கெட்டையும் எடுத்து அப்படியே ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்புகிறார் ராபின் சிங். ஃபீல்டிங்கில் 20 ரன்கள் வரை பாயின்ட்டில் நின்று தடுக்கிறார். இந்தியா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுகிறது. இந்தப்போட்டியில் இருந்து கேப்டன் சச்சின் டெண்டுல்கர் ராபின் சிங்கைக் கைவிடவேயில்லை. 7 ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்திய அணிக்குள் நுழைந்தவர், அடுத்த 5 ஆண்டுகள் அணியின் நிரந்தர ஆல்ரவுண்டராக மாறினார்.

ராபின் சிங்கின் சாதனைகள்!

இடது கை பேட்ஸ்மேனான ராபின் சிங் வலது கை மித வேகப்பந்துவீச்சாளர். டெய்ல் எண்டராக ஃபினிஷிங் ஆட்டமும் ஆடுவார், ஒன் டவுன் பேட்ஸ்மேனாக வந்து ஆங்கர் இன்னிங்ஸூம் ஆடுவார். பெளலிங்கில் இவர் விக்கெட்டுகளை எடுப்பதைவிடவும், ரன்கள் கொடுக்காமல் தடுப்பதில் கவனம் செலுத்துவார். எதிர் அணியினரின் ரன்ரேட் எகிறும்போது சச்சின், அசாருதின் என இரண்டு கேப்டன்களுமே ராபின்சிங்கிடம்தான் பந்தைக் கொடுப்பார்கள். அதேபோல் ஃபீல்டிங்கிலும் கவர் திசையில் அரணாக நின்று பவுண்டரிகள் போகாமல் தடுத்து நிறுத்துவார் என அணிக்குள் தவிர்க்கமுடியாத, முழுமையான வீரராக இருந்தார் ராபின். இவர் விளையாடிய 1996-2000 காலகட்டத்தில் இந்திய அணிப் பெரிதாக தொடர் வெற்றிகளைப்பெறவில்லை. ஆனால், ராபின் சிங் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் உயிரைக்கொடுத்து ஆடிக்கொண்டிருப்பார். சச்சின், கங்குலி, டிராவிட் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் காலியானாலும், ராபின் இருக்கும்வரை வெற்றிக்கான நம்பிக்கை இருக்கும்.

ராபின் சிங்
ராபின் சிங்கின் பர்ஃபாமென்ஸை எத்தனை சதங்கள் அடித்தார், எவ்வளவு ரன்கள் எடுத்தார், எவ்வளவு விக்கெட்டுகளைப்பறித்தார் என புள்ளியியல் விவரங்களோடு அணுகக்கூடாது. எப்படிப்பட்ட தாக்கத்தை அவர் இந்திய அணியில் ஏற்படுத்தியிருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும்.

1997-ல் நடைபெற்ற சுதந்திரக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிராக ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி 52 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார் ராபின்சிங். அவரது முதல் அரைசதம் இதுதான். இந்த ஆக்ஸலரேட்டிங் இன்னிங்ஸைப் பார்த்த கேப்டன் டெண்டுல்கருக்கு ராபின் சிங் மீது இன்னும் நம்பிக்கை அதிகரித்தது. இதற்கு அடுத்தப்போட்டியான சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்த சென்னைப்போட்டியிலும் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்து சேஸ் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருப்பார். இந்த தொடர் பர்ஃபாமென்ஸ்களால் ராபின் சிங்கை மிகவும் அதிகமாக நம்பினார், நேசித்தார் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். அந்த நம்பிக்கை அடுத்தத் தொடரில் வெளிப்பட்டது.

டெண்டுல்கர் தலைமையில் இலங்கைக்குச் சென்றது இந்திய அணி. டெஸ்ட்டில் 300 ரன்கள் எல்லாம் அடித்து ஜெயசூர்யா செம ஃபார்மில் இருந்த தொடர் அது. மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது இந்தியா. அந்தத் தொடரில் பேட்டிங் ஆர்டரையே மாற்றி 1 டவுன் பேட்ஸ்மேனாக ராபின் சிங்கை களமிறக்கினார் சச்சின் டெண்டுல்கர். முதல் போட்டியில் சச்சின் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லையென்றாலும், அடுத்தடுத்தப்போட்டிகளில் சச்சினின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் ராபின். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 42 பந்துகளில் 47 ரன்கள் அடித்தவர், மூன்றாவது போட்டியில் சென்சுரியே அடித்தார். ராபின் சிங் தனது கரியரில் இந்தியாவுக்காக அடித்த ஒரேயொரு சதம் இதுதான். சச்சினும், கங்குலியும் சில ரன்களிலேயே அவுட் ஆகிவிட 1 டவுன் பேட்ஸ்மேனாக வந்த ராபின் சிங், ராகுல் டிராவிட்டோடு பார்ட்னர்ஷிப்போட்டு 102 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இந்தியா மொத்தமாக 291 ரன்கள் அடித்தது.

Robin Singh

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே இலங்கை வென்றிருந்த நிலையில் இந்தியா இதில் வெற்றிபெறும் என எல்லோரும் எதிர்பார்த்து இந்திய அணியின் வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். ஜெயசூர்யா வழக்கம்போல அதிரடி ஆட்டம் ஆடினார். ஆனால், 8-வது ஓவரில் மழைக் குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி தொடங்கியபோது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கைக்கு 25 ஒவர்களில் 195 ரன்கள் டார்கெட் செட் செய்யப்பட ஆட்டம் இன்னமும் த்ரில் ஆனது. ஜெயசூர்யா 38 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அவுட் ஆக ஆட்டம் இந்தியா பக்கம் மாறத்தொடங்கியது. அன்று 100 ரன்கள் அடித்ததோடு, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, ரோஷன் மஹானாமா என இலங்கையின் முக்கிய பேட்ஸ்மேன்களான இந்த மூவரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து எடுத்தார் ராபின் சிங். 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களில் இருந்தது இலங்கை. கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றி உறுதியான நிலையில் போதிய வெளிச்சம் இல்லை என இலங்கை அணி விளையாட மறுத்தது.

இன்னும் ஆறு ஓவர்களே வீசப்பட வேண்டியிருந்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்துக்குள் மேட்ச் முடிந்துவிடும் என்கிற நிலையில் இலங்கை விளையாட மறுத்தது. கமென்ட்டேட்டர்கள் உள்பட அன்று அங்கேயிருந்த பலரும் போதிய வெளிச்சம் இருக்கிறது என சொல்லியும் இலங்கை அணி வெளிநடப்பு செய்தது. இதனால் அன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டு அடுத்தநாள் முதலில் இருந்து ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் நடந்த அந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராபின் சிங் ஒன்டவுன் பேட்ஸ்மேனாக வந்து 28 ரன்கள் அடித்தார். ஆனால், இந்தியா 3-0 என தொடரை இழந்தது.

Robin singh

ராபின் சிங்கின் கரியரிலேயே மிக முக்கியமானப் போட்டி என்றால் அது 1998-ல் தாக்காவில் நடந்த பாகிஸ்தானுடனான பெஸ்ட் ஆஃப் 3 ஃபைனல்ஸின் கடைசிப் போட்டிதான். ராபின் சிங்கின் அன்றைய ஆட்டம் இந்தியா உலக சாதனைப் படைக்கவும் காரணமாக இருந்தது. 1-1 என இறுதிப்போட்டிகள் சமநிலையில் இருக்க, மூன்றாவது இறுதிப்போட்டியில் அன்வரின் 140 ரன்களால் 314 ரன்கள் அடித்தது பாகிஸ்தான். 48 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் சேஸிங் தொடங்கியதுமே அதிரடி ஆட்டம் ஆடினார் சச்சின். 26 பந்துகளில் சச்சின் 41 ரன்கள் அடித்து அவுட் ஆக, இந்த முறை ராபின் சிங்கை 1 டவுன் பேட்ஸ்மேனாக அனுப்பினார் கேப்டன் அசாருதின். கங்குலியோடு பார்ட்னர்ஷிப்போட்டு முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 179 ரன்கள் அடித்தார்கள். ராபின் சிங் 83 பந்துகளில் 82 ரன்கள் அடித்து கங்குலிக்கு பக்கபலமாக இருந்து அற்புதமான ஆட்டம் ஆடினார். கங்குலி 124 ரன்கள் அடித்தார். இந்தப்போட்டியின் இறுதியில்தான் கனித்கர் பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்தார். 315 ரன்களை 48 ஓவர்களில் சேஸ் செய்து இந்திய அணி உலக சாதனைப்படைத்தது.

ராபின்சிங் விளையாடிய ஒரே உலகக்கோப்பை 1999 உலகக்கோப்பைதான். இதில் இலங்கைக்கு எதிரானப்போட்டியில் கங்குலியும்- டிராவிட்டும் சேர்ந்து இலங்கையின் பெளலர்களை துன்புறத்த, பெளலிங்கில் இலங்கை பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பிக்கொண்டேயிருந்தார் ராபின் சிங். முதல்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தார் ராபின் சிங்.

இதற்கு அடுத்து சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். இந்தியா இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் ராபின் சிங், ஜடேஜாவோடு இணைந்து ஆடிய ஆட்டம்தான் இந்தியாவை அவமானகரமானத் தோல்வியில் இருந்து காப்பாற்றியது. டெண்டுல்கர் டக் அவுட், கங்குலி 8 ரன், டிராவிட் 2 ரன், அசாருதின் 3 ரன் என எல்லோரும் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆக, ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜடேஜாவோடு இணைந்தார் ராபின் சிங். 94 பந்துகளில் 75 ரன்கள் அடித்தார். ஜடேஜா சென்சுரி அடித்தார். அன்று ராபின் சிங் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் நின்று ஆடியிருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கலாம். அன்று ஜடேஜா, ராபின் சிங்குக்கு அடுத்தபடியாக கங்குலி அடித்த 8 ரன்கள்தான் அதிகபட்ச ரன்.

ராபின் சிங்

2000-களில் கேப்டன் ஆனதும் இளம் வீரர்கள் கொண்ட அணியை வடிவமைக்க திட்டமிட்டார் கங்குலி. 2003 உலகக்கோப்பைக்கு இளம் அணியைத் தயார்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் அப்போது 37 வயதில் ஆடிக்கொண்டிருந்த ராபின் சிங்கை அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்குவது என முடிவெடுக்கப்பட்டது. 2001-ல் அணியில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டவர், 2004-ல் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியவர் என்கிற சாதனை(வேதனை)யும் ராபின் சிங்கிற்கு உண்டு. நான்கு நாள்கள் நடக்கக்கூடிய ரஞ்சியில் சிறப்பாக விளையாடித்தான் இந்திய அணிக்குள் வந்தார் ராபின். ஆனால், அவரை ஒன் டே ஸ்பெஷலிஸ்ட்டாக ஒதுக்கிவைத்து டெஸ்ட் கரியரை ஒரே ஒரு போட்டியோடு முடித்துவிட்டார்கள்.

Also Read: கிறிஸ் கெய்ன்ஸ்... விவியன் ரிச்சர்ட்ஸை முந்தியவன்... கங்குலியின் கனவை கலைத்தவன்! அண்டர் ஆர்ம்ஸ் - 15

1989-லேயே இந்திய அணிக்குள் வந்தவரை இந்திய அணித் தேர்வாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் 92, 96 உலகக்கோப்பைகளில் சிறப்பான பர்ஃபாமென்ஸை அளித்திருப்பார் ராபின். 96 உலகக்கோப்பையில் சரியான லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனோ, 1 டவுன் பேட்ஸ்மேனோ இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது இந்திய அணி. சஞ்சய் மஞ்ரேக்கர் 1 டவுன் பேட்ஸ்மேனாக சொதப்பிக்கொண்டிருந்தார். லோயர் ஆர்டரில் சரியான பார்ட்னர்கள் இல்லாமல் அஜய் ஜடேஜா திணறிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ராபின் சிங் இந்திய அணிக்குள் இருந்திருந்தால் ராபின் சிங்கின் கரியர் மட்டுமல்ல, இந்திய அணியின் பயணம்கூட வெற்றிகளை நோக்கியதாக இருந்திருக்கும்.

என்ன செய்ய காலம் எல்லோரையும் கனிவுடன் நடத்துவதில்லையே!



source https://sports.vikatan.com/cricket/robin-singhs-cricketing-career-under-arms-16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக