Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

தனுஷின் `ஜகமே தந்திரம்' ஓடிடி ரிலீஸும், லண்டன் சிக்கலும்... தீர்வு என்ன?!

கொரோனாவின் தாக்கம் தமிழ்நாட்டில் ஆரம்பமான சமயத்திலேயே திரையரங்குகளை மூடியது, தமிழக அரசு. ஐந்து மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், ’பொன்மகள் வந்தாள்’, ’பெண்குயின்’, ’டேனி’, ’காக்டெயில்’, ’லாக்கப்’ என சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸாகின. சமீபத்தில், அக்டோபர் 30-ம் தேதி அமேசான் தளத்தில் சூர்யா நடித்திருக்கும் ’சூரரைப் போற்று’ படம் ரிலீஸாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, இன்னும் சில படங்கள் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக பேசப்பட்டு வருகிறது.

Also Read: `மாஸ்டர்' படம் பார்த்த விஜய் என்ன சொன்னார்... படம் எப்போது, எங்கே ரிலீஸ்?!

மே 1 ஆம் தேதி தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படமும் ’ஜெயம்’ ரவியின் ’பூமி’ படம் ரிலீஸாகும் என கொரோனாவுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், ’பூமி’ படத்தை சன் டிவி வாங்கிவிட்டதாகவும், விரைவில் சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்தப் படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், ’ஜகமே தந்திரம்’ நிச்சயமாக தியேட்டரில்தான் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் சஷிகாந்த் ட்விட் செய்திருந்தார். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு, படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பது; தியேட்டர் ரிலீஸைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என பல காரணங்கள் இருந்தாலும், ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் லண்டனில் படமாக்கப்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து மானியம் வாங்க வேண்டும் என்றால், நிச்சயம் படம் தியேட்டரில்தான் ரிலீஸாக வேண்டுமாம். அதனால், ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸ் செய்ய முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ஜகமே தந்திரம்

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் இருந்த ஆர்யாவின் ’டெடி’ படத்தையும் வைபவ் நடித்திருக்கும் ’காட்டேரி’ படத்தையும் அமேசான் நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டதாகவும், இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதே மாதிரி, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ’க/பெ ரணசிங்கம்’ படம் ஜீ5 தளத்திற்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதே தயாரிப்பு நிறுவனத்திடம் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ’டிக்கிலோனா’ படத்தையும் ஜீ5 நிறுவனம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமேசான் தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெண்குயின்’ படம் ரிலீஸானதற்கு பின், அவர் நடித்திருக்கும் ’மிஸ் இந்தியா’, ’குட்லக் சகி’ படங்களையும் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் பேசிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்தன. அதில், ’மிஸ் இந்தியா’ படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ’குட்லக் சகி’ படத்தை எந்த ஓடிடி நிறுவனம் வாங்கியிருக்கிறது என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ’கைதி’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமான அர்ஜூன் தாஸ் நடித்திருக்கும், ’அந்தகாரம்’ படத்தையும் நெட்ஃபிளிக்ஸ் வாங்கியிருக்கிறது.

கடைசி விவசாயி

விஜய் சேதுபதியின் ’க/பெ ரணசிங்கம்’ படம் ஜீ5 தளத்தில் கொடுக்கப்பட்டதைப் போல், ’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கி விஜய் சேதுபதி நடித்திருக்கும் ’கடைசி விவசாயி’ படமும் ஓடிடி ரிலீஸுக்காக பேசப்பட்டு வருகிறதாம். அதே போல், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணனின் இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ படத்தையும் வாங்கிவதற்கு ஓடிடி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கும் பக்தி படமாக ’மூக்குத்தி அம்மன்’ இருப்பதால், தியேட்டரில்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்களை தங்களது தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்வதால், சந்தாதாரர்கள் அதிகரிப்பார்கள் என அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 என அனைத்து ஓடிடி தளங்களும் பெரிய படங்களை வாங்குவதில் தீவிரம் காட்டிவருகிறார்கள். அதேபோல், சிறிய பட்ஜெட் படங்களும் சில ஓடிடி தளங்களுக்கு பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், தங்களுக்கென தனி ஓடிடி தளத்தை ஆரம்பித்து, அதன் மூலமும் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

தியேட்டர் | Theatres

இப்படி ரிலீஸுக்கு தயார் நிலையில் இருந்த படங்கள் எல்லாம் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருப்பதால், திரையரங்குகள் திறக்கப்படும்போது படங்கள் இருக்குமா எனப் பலரும் அச்சப்படுகிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/list-of-movies-which-will-be-released-in-direct-ott-platforms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக