Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

ராணிப்பேட்டை: `துரோகம் செய்தான்; கொன்று புதைத்தேன்!’ -அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்

ராணிப்பேட்டை மாவட்டம், வானாபாடியை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (28). இவர்மீது வழிப்பறி, கொள்ளை, கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்புக்காவலில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகுமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் வாலாஜாபேட்டை அருகே நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில், சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து சிப்காட் போலீஸார் சந்தேகத்தின்பேரில், சசிகுமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பிரபு லாரன்ஸ்

விசாரணையின்போது, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவரது கூட்டாளியான காட்பாடி தாலுகா கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபு லாரன்ஸ் தலைமறைவாக உள்ள இடம் குறித்தும் சசிகுமாரிடம் கேட்டனர். ‘பிரபு லாரன்ஸை கொன்று புதைத்து பல நாள்கள் ஆகிறது’ என்று சசிகுமார் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துபோயினர்.

சசிகுமார் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘பிரபு லாரன்ஸும் நானும் குற்றச்செயல்கள் மூலமாகத்தான் கூட்டாளியாகினோம். நண்பன் என்று நினைத்து என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். துரோகியாக மாறி என் மனைவியுடன் தவறானத் தொடர்பு வைத்துக்கொண்டான்.

பல நாள்களுக்குப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. பிரபு லாரன்ஸை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதன்படி, மே 25-ம் தேதி வானாபாடியை அடுத்துள்ள ஆற்றுக்கால்வாய்ப் பகுதிக்கு பிரபு லாரன்ஸை அழைத்துச் சென்று மது விருந்து வைத்தேன். போதை தலைக்கு ஏறியப் பிறகு பீர் பாட்டிலை உடைத்து வயிற்றிலும், கழுத்திலும் குத்தி அவனை கொன்றுவிட்டேன். இந்தக் கொலைக்கு உடந்தையாக சென்னையைச் சேர்ந்த எலி என்கிற விஜய் இருந்தான். இருவரும் சேர்ந்துதான் பிரபு லாரன்ஸின் உடலை ஆற்றுக்கால்வாய்க்கு அருகிலேயே பள்ளம் தோண்டி புதைத்தோம்’’ என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட சசிக்குமார்

சசிக்குமாரை புதைத்த அந்த இடத்துக்கு போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் பள்ளம் தோண்டியபோது, பிரபு லாரன்ஸின் உடல் இருந்தது. அரசு மருத்துவர்கள் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் புதைக்கப்பட்டன. இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் சசிக்குமாரை கைதுசெய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சென்னையைச் சேர்ந்த எலி என்கிற விஜய்யையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/robber-arrested-for-killing-friend-in-ranipet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக