புனேவில் உள்ள ஶ்ரீவத்ஸா ஆதரவற்றோர் இல்லத்தின் வாசலில், ஆகஸ்ட் 13, 1979-ம் ஆண்டு, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று வைக்கப்பட்டது. மூன்று வாரங்களே நிரம்பிய அந்தக் குழந்தையை, ஹரன் ஸ்தலேகர் - ச்யூ தம்பதி தத்தெடுத்தனர். அப்போது யாருக்கும் தெரியாது... புனேவில் தத்தெடுக்கப்பட்ட இந்தக் குழந்தை ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டில் ஜொலிக்கப் போகிறது என்று. குழந்தைக்கு லிசா ஸ்தலேகர் எனப் பெயரிட்டனர், அந்த மும்பை தம்பதியினர். அந்த லிசாதான் அண்மையில் ஐசிசி-யின் `ஹால் ஆஃப் பேமில் (Hall of Fame)' இடம்பிடித்து, விளையாட்டு உலகின் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார்.
லிசாவின் கதை, பாசிட்டிவ் விதையாக விதைக்கப்பட்டு வருகிறது.
இல்லத்தில் லிசாவை தத்தெடுத்த ஹரன் ஸ்தலேகர், ச்யூ தம்பதி, நான்கு வருடங்கள் கென்யா மற்றும் அமெரிக்காவில் இருந்துவிட்டு, ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தனர். இதுதான் லிசா ஸ்தலேகர் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. லிசாவின் அப்பா ஹரனுக்கு கிரிக்கெட் மீது அளவு கடந்த காதல் இருந்தது. இதனால் லிசாவும் தனது 8 வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம்கொண்டார். வீட்டின் பின்புறம் இருவரும் அவ்வப்போது கிரிக்கெட் விளையாடினார்கள். அங்குதான் லிசாவுக்கு, எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கான அடித்தளம் கிடைத்தது.
லிசா பல பயிற்சிகளுக்கும், முயற்சிகளுக்கும், வெற்றிகளுக்கும் பிறகு, ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் அணிக்கு விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் பந்துவீச்சாளராக அணியில் வலம் வந்தார். தன் அபார திறமையால் பல போட்டிகளில் நியூ சௌத் வேல்ஸுக்கு வெற்றி தேடித் தந்தார். அவ்வப்போது மிடில் ஆர்டரில் களமிறங்கி, தனது பேட்டிங் மூலமும் அணிக்கு வலு சேர்த்தார். இவ்வாறு, பந்துவீச்சாளராக இருந்த லிசா அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக முக்கியத்துவம் பெற்றார்.
2001-ல் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு, லிசாவைத் தேடி வந்தது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த தொடரில் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். லிசாவின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிர் அணியினர் திணறினர். கிரிக்கெட் ஆடுகளத்தில் ஃபீல்டிங்கிலும் புலியாக இருந்தார் லிசா. அவர் திறமையைக் கண்டு 2003-ல் டெஸ்ட் அணியிலும் விளையாட வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. ஆனால், ஒருநாள் தொடர் அளவுக்கு லிசாவால் டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியவில்லை.
அதே நேரத்தில், எட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய லிசா, ஒரு சதமும், இரண்டு அரை சதங்களும் அடித்திருந்ததும், 23 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்ததும் அவரை கிரிக்கெட் உலகின் கவனத்திலேயே வைத்திருந்தது. மேலும் 23 விக்கெட்களில், ஒரு முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2006-ல் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில், அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார் லிசா. 2005, 2009 உலகக் கோப்பை போட்டிகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கியத் துருப்புச் சீட்டாகத் தன்னை ஆட்டக்களத்தில் நிலைநிறுத்தினார். 2010, 2012-ல் நடந்த உலக டி20 தொடரிலும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இதுவரை உலக அரங்கில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் எடுத்திருக்கும் ஒரே பெண் கிரிக்கெட்டர், லிசா. ஐசிசி முதன்முதலாகப் பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டபோது, ஆல்ரவுண்டராக முதல் இடத்தைப் பிடித்தார்.
தான் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தனது திறமையை நிரூபித்தார். பல முறை அவர் தடுமாறினாலும், ஒரு முறைகூட நம்பிக்கை இழக்கவில்லை. உலகக் கோப்பையை வென்ற அணிகளில் நான்கு முறை இடம்பிடித்தார் லிசா. கடைசியாக 2013-ம் ஆண்டு மும்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி ஆட்டத்துடன், தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார். சொந்த மண்ணிலேயே அவரது விளையாட்டு வாழ்க்கை ஓய்வுக்கு வந்தது.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும், களத்துக்கு வெளியே வீராங்கனையாகத் திகழ்ந்தார் லிசா. ஓய்வு பெறுவதற்கு முன்னரே 2011-ல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓய்வுபெற்ற பின், பெண்களின் கிரிக்கெட் இன்னும் பல உயரங்களை எட்டுவதற்கான வழிமுறைகளை வகுத்து வந்தார். இப்போது பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் வெளிச்சம் பெறத் தொடங்கியுள்ளன. என்றாலும், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கிரிக்கெட்டிலும் அனைத்து வசதி வாய்ப்புகளும் இருக்க வேண்டும் என்பதே இவரின் லட்சியம். 2015 முதல், நான்கு பெண் ஐ.பி.எல் வர்ணனையாளர்களில் ஒருவராகவும் வலம்வருகிறார் லிசா.
இவ்வாறு, தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டுக்காகப் பாடுபட்டு வரும் லிசா ஸ்தலேகர் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறார். காரணம், சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட `ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் லிசா. ஐசிசியின் `ஹால் ஆஃப் ஃபேம்' என்பது கிரிக்கெட்டில் ஜொலித்த ஜாம்பவான்களுக்கு வழங்கப்படும் கௌரவம். இதில் இம்முறை தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸுடன், லிசா ஸ்தலேகரும் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் 27-வது ஆஸ்திரேலியராகவும், ஐந்தாவது ஆஸ்திரேலியப் பெண்ணாகவும் ஐசிசியின் `ஹால் ஆஃப் ஃபேமி'ல் இணைந்துள்ளார் லிசா.
லிசா ஸ்தலேகர் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் அதிளவில் பகிரப்பட்டு வருகிறது. இவரின் ஆட்டத்திறன் பற்றி சக வீரரான பெலின்டா கிளார்க் கூறுகையில், ``சுழற்பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் என இரு விஷயங்களிலும் அபார திறனை வெளிப்படுத்தினார் லிசா. மேலும், பந்தை சரியான நேரத்தில் அடிப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் அணியின் கடைசிக் கட்டத்தில் விளையாட வந்தாலும் அந்த இடத்துக்கு கன கச்சிதமாகப் பொருந்துவார். கிரிக்கெட்டில் சவால்களைச் சந்திப்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்" என்றிருக்கிறார்.
2012-ம் ஆண்டு, தனது வாழ்க்கை தொடங்கிய ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்து சென்றார் லிசா. அப்போது, தன்னைத் தன் பெற்றோர் தத்தெடுத்ததால் தன் வாழ்க்கை எந்தளவுக்கு மாறியுள்ளது என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். லிசாவின் பெரிய பழுப்புக் கண்கள்தான், அவர் வாழ்க்கையையே மாற்றியுள்ளன. இந்தக் கண்களுக்காகத்தான், ஆண் பிள்ளையைத் தத்தெடுக்க வந்த ச்யூ, லிசாவைத் தத்தெடுத்தார்.
அந்தப் பெரிய பழுப்பு கண்கள், இன்று பேட் பிடித்திருக்கும் பல பெண்களுக்கும் விடிவெள்ளி!
source https://www.vikatan.com/news/women/inspiring-story-of-australian-cricketer-lisa-sthalekar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக