Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

``கொரோனா வந்துச்சு... ஆனா...?’’ - `நடுவுல கொஞ்சம்' பட `நல்லாருக்கியா' நாகராஜ்

கொரோனா, இந்த வைரஸ் கடந்த சில மாதங்களாக உலகையே முடக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அனைத்து துறைகளையும் பதம்பார்த்த இந்த வைரஸை கண்டு பலரும் அச்சப்படும் நிலையில், ‘இதில் பயப்பட தேவையே இல்லை’ என்கிறார், அசோக். இவர், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நாகராஜ் அண்ணணாக நடித்தவர். நடிகரும், ‘கே.ஜி.எஃப்’ படத்திற்கு தமிழ் வசனங்களை எழுதியவருமான அசோக், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து நல்லபடியாக மீண்டு வந்திருக்கிறார். "என்னுடைய கொரோனா கால அனுபவம் நிச்சயம் பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும்" என அதைப் பற்றி பேச முன்வந்தார்.

’’கொரோனாவோட தாக்கம் சென்னையில் அதிகமானதில் இருந்தே நான் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன். என் உறவினர் ஒருத்தரை மருத்துவமனையில் சேர்த்து, அவரோடு நானும் இருக்க வேண்டிய நிலை வந்ததனால, எங்க ரெண்டு பேருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்தாங்க. எங்க ரெண்டு பேருக்கும் கொரோனா இல்லை. 10 நாள் வரைக்கும் மருத்துவமனையில் இருந்துட்டு டிஸ்சார்ஜ் ஆகிட்டோம். ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் மருத்துவமனையில் அட்மிட் ஆகவேண்டிய கட்டாயம். அப்போ, மறுபடியும் கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க. அப்போ எடுக்கும் போது, அவருக்கு கொரோனா இல்லை; எனக்கு இருந்துச்சு. முதலில் ரொம்பவே பயந்தேன். ஏன்னா, கொரோனா சென்னைக்கு வந்ததில் இருந்தே, மக்களை ரொம்பவே பயமுறுத்தி வெச்சிருக்காங்க. அதுனால, எனக்கு பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்த அன்னைக்கு இரவு முழுக்க நான் தூங்கவேயில்லை. நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்கிறது, கொரோனா சம்பந்தமான கட்டுரைகள் படிக்கிறதுனு நேரத்தை கழிச்சேன். அது மூலமா எனக்கு கிடைச்ச தீர்வுதான், சித்த மருத்துவம். நிறைய பேரு கொரோனாவுக்கு சித்த மருத்துவம் சரியான தீர்வா இருக்குனு சொன்னாங்க.

ashok in naduvula konjam pakkatha kaanom movie

அதுனால, சாலிகிராமத்தில் இருக்கிற ஒரு சித்த மருத்துவமனைக்கு போனேன். அங்க, அட்மிஷன் நேரம் முடிச்சிடுச்சுனு சொன்னாங்க. அப்பறம், சாலிகிராமம் மருத்துவமனையில் பார்க்கிற மாதிரிதான், வியாசர்பாடி பெரியார் காலேஜ்ல இருக்கிற முகாமிலும் மருத்துவம் பார்க்கிறாங்கனு கேள்விப்பட்டேன். உடனே அங்கப்போய் அட்மிஷன் போட்டேன். எனக்கு அந்த முகாமோட சூழலே ரொம்ப பிடிச்சிருந்தது. அங்க இருக்கிற மருத்துவர்களும், வேலை பார்க்கிறவங்களும் நம்மகிட்ட ரொம்ப சகஜமா பேசுறாங்க. நான் அதுவரைக்கும் நியூஸ்ல பார்த்தது எல்லாம், ஒரு பெரிய பாதுகாப்பு உடையை போட்டுக்கிட்டு பக்கத்துலகூட வராம டாக்டர்கள் தள்ளி நின்னு பேசுறதைத்தான். அவங்க நம்மளை அப்படி நடத்தினாலே, நமக்கு அதிக பயம் வந்திடும். ஆனால், இங்க அப்படி எதுவும் இல்லாமல் ரொம்பவே இயல்பா இருந்துச்சு. மோகனப்பிரியா, கண்ணன்கிற மருத்துவர்களும், பார்த்திபன்கிற அசிஸ்டென்ட்டும் ரொம்பவே சிறப்பா வேலைப் பார்த்தாங்க.

மருந்துகள் எல்லாமே உணவுகள் மூலமாவே கொடுத்தாங்க. காலையில் எழுந்திருச்சதும் சுடு தண்ணியில் உப்பு போட்டு தொண்டையில் வெச்சு கொப்பளிக்கச் சொன்னாங்க. அடுத்து, மூலிகை டீ கொடுப்பாங்க. அடுத்து கொஞ்ச நேரத்துல கபசுர குடிநீர் கொடுப்பாங்க. அப்பறம், டிபன். அதுலேயும் சுண்டல், கீரை சூப்னு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு மருந்தோடு சேர்ந்த எதாவது ஒரு உணவுப்பொருள் உடலுக்குள்ள போயிட்டே இருக்கும். நம்மளோட இயற்கையான உணவுமுறையிலேயே பல சத்துகள் இருக்குனு இந்த கொரோனா காலத்தில்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். மொத்தம் 11 நாள்கள் நான் சிகிச்சையில் இருந்தேன். ஒரு ரூபாய்கூட நான் செலவு பண்ணவேயில்லை. இப்போ நல்லபடியா குணமாகி வந்திருக்கேன்.

’கே.ஜி.எஃப்’ அசோக்

நம்மகிட்ட சித்த மருத்துவம் இருக்கு; அதுக்காக கவனக்குறைவா இருக்கலாம்னு யாரும் நினைக்க வேண்டாம். வராத அளவுக்கு நாம எவ்வளவு கட்டுப்பாடா இருக்கணுமோ அதை கண்டிப்பா பண்ணணும். ஆனால், அதையும் மீறி வந்துட்டால், பயப்பட வேண்டாம்னு சொல்றேன். அதே மாதிரி, ஆங்கில மருத்துவத்தைப் பற்றி தவறாவோ, அதை முற்றிலும் புறக்கணிக்கவோ நான் சொல்லலை. ஒருத்தருக்கு கொரோனா வந்துருச்சுனு தெரிஞ்ச முதல் இரண்டு, மூன்று நாள்களில் சித்த மருத்துவத்தை எடுத்துக்கிட்டா, ஏழாம் மற்றும் ஒன்பதாம் நாள் வைரஸின் வீரியம் அதிகம் இருக்காது. ஆனால், ஏழாம் மற்றும் ஒன்பதாம் நாள்களில் வைரஸின் வீரியம் அதிகமாக இருக்கும் போது, அந்த இடத்தில் ஆங்கில மருத்துவம்தான் நம்மை காப்பாற்றும். அதனால, பயப்படாமல் கவனமா இருந்தாலே போதும்.

அதே மாதிரி, 60 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு கொரோனா வந்தால் கொஞ்சம் கஷ்டம்னு சொல்றாங்க. எனக்கு கொரோனா வந்து நான் முகாமில் சேர்ந்த மூணாவது நாள், என் அம்மாவுக்கு கொரோனா வந்துச்சு. அதை உடனே முகாமில் இருந்த மருத்துவர்கள்கிட்ட சொன்னேன். ‘அட்மிட் பண்ண முடியுமா’னு கேட்டாங்க. ‘அவங்க வீல் சேர் யூஸ் பண்றனால இங்க இருக்கிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்’னு சொன்னேன். ‘ஒண்ணும் பிரச்னை இல்லை; நாங்க மருந்து கொடுத்தனுப்புறோம்’னு சொல்லி, முகாமில் இருந்து மருந்துகள் வீட்டுக்குப் போச்சு. எங்க அம்மா வீட்டில் தனியா இருந்து, நாட்டு மருந்துகளை சாப்பிட்டே குணமாகிட்டாங்க.

Corona Test

Also Read: Corona: சி.எஸ்.கே நிர்வாகிகள் 12 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்?! - குவாரன்டைன் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு #NowAtVikatan

நம்ம அரசாங்கத்துக்கிட்ட ஒரே ஒரு கோரிக்கையும் வைக்கணும்னு நினைக்கிறேன். ஒரு முறை கொரோனா டெஸ்ட் எடுக்கிறதுக்கு கிட்டத்தட்ட 3000 ரூபாய் செலவாகுது. அதுனாலேயே, பல பேரு டெஸ்ட் எடுக்க மாட்றாங்க. கொரோனா டெஸ்ட் எடுக்குற கிட்டோட விலை 500 ரூபாய்னு கேள்விப்பட்டேன். டெஸ்ட் எடுக்கிறதுக்கான கட்டணத்தை அரசாங்கம் குறைக்கணும்னு தனியார் மருத்துவமனைகள்கிட்ட சொன்னால், அது பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார், அசோக்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/kgf-dialogue-writer-ashok-speaks-about-his-corona-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக