நகை கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் மற்றும் அதற்கு துணை போன நபர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது மஞ்சூர். இங்கு கனரா வங்கி கிளை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பணியாற்றி வருகிறார். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் செங்கல் சூளைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பலரும் தங்கள் நகைகளை, இவர் மூலம் வங்கியில் அடமானம் வைத்து நகை கடன் பெற்றுள்ளனர்.
நகை கடன் பெற்றவர்கள் அதற்கான வட்டியுடன் அசல் தொகையினையும் கட்டுவதற்காக நகை மதிப்பீட்டாளர் மணிகண்டனை அனுகியுள்ளனர். ஆனால் அவர்களது நகையினை திருப்ப ஏற்பாடு செய்யாமல் அவர்களை பல நாட்களாக அலைக்கழித்து உள்ளார். இதையடுத்து வாடிக்கையாளர்கள் சிலர் இது குறித்து வங்கி மேலாளர் சரத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர் மணிகண்டனிடம் விசாரித்த போது, வாடிக்கையாளர்கள் கடனுக்கு ஈடாக அளிக்கும் நகைகளில் தோடு, மோதிரம் போன்ற சிறு நகைகளை வங்கி கணக்கிற்கு கொண்டு வராமல் திருடியது தெரியவந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் கனரா வங்கி கிளையினை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. டி.எஸ்.பி வேல்முருகன் நடத்திய விசாரணையில், 120-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான சுமார் 250 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடியதாக மணிகண்டன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கனரா வங்கி மண்டல உதவி மேலாளர் மற்றும் போலீஸார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்கள் அடகு வைத்த நகையோ அல்லது அதற்கு ஈடான தொகையையோ வங்கியின் மூலம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கனரா வங்கியின் தூத்துக்குடி மண்டல உதவி பொது மேலாளர் காந்தி அளித்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/the-appraiser-caught-in-fraud-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக