வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (35), ராணுவ வீரர். இவரது மனைவி அமுலு (26). இந்த தம்பதிக்கு 2016-ல் திருமணம் நடைபெற்றது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம்தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் அமுலு. இந்தநிலையில், தந்தை ஆறுமுகத்துக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார் புருஷோத்தமன்.
சிகிச்சைக்காக, சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் தந்தையை அனுமதித்துவிட்டு அவரைக் கவனித்துக்கொள்வதற்காக அருகில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து மனைவியுடன் தங்கினார். புருஷோத்தமனைப் பார்ப்பதற்காக அவரது அண்ணன் ராஜ்குமார் நேற்று லாட்ஜிக்கு சென்றார். அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவைத் திறக்கவில்லை. இதனால், புருஷோத்தமனின் செல் நம்பருக்கும் போன் செய்துள்ளார் அவரது அண்ணன்.
நீண்ட நேரமாக ‘ரிங்’ அடித்தும் போனை அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அண்ணன் ராஜ்குமார், லாட்ஜ் மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது, புருஷோத்தமன் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி அமுலு கட்டில்மீதும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோயினர். தகவல் அறிந்ததும், வேலூர் வடக்கு போலீஸார் லாட்ஜிக்கு விரைந்துவந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். அமுலுவின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் இருந்ததால், மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு ராணுவ வீரர் புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதும் போலீஸார் அதற்கான காரணம் குறித்தும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இந்தச் சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/army-soldier-commits-suicide-by-killing-wife-vellore-shock
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக