Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

ராமநாதபுரம்: 7 டன் எடை... முகப்பகுதியில் பலத்த காயம்! - கரை ஒதுங்கிய ராட்சத நீல திமிங்கலம்

வாலிநோக்கம் கடல் பகுதியில் சுமார் 7 டன் எடை கொண்ட பெண் நீலத் திமிங்கலம் ஒன்று நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இது போல் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

உயிரிழந்த நிலையில் ராட்சத திமிங்கலம்.

கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் என அழைக்கப்படுவது மன்னார் வளைகுடா கடல் பரப்பாகும். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை மற்றும் அழிந்து வரும் வகையினை சேர்ந்த கடல்வாழ் உயிரினங்கள் இப்பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் வாழ்ந்து வருகின்றன. இவை தவிர கடல் சீற்றங்களை தடுக்கும் பவளப்பாறைகள், கடற்புற்கள் என ஏராளமான கடற் தாவரங்களும் இக்கடல் பகுதியில் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் மன்னார் வளைகுடா தேசிய உயிர்க்கோள காப்பகம்.

புதுமடத்தில் கரை ஒதுங்கிய கடல்பசு.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் கப்பல், மீன்பிடி படகுகள், பாறைகள் ஆகியவற்றில் அடிபடும் சூழலில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அவ்வப்போது உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 23-ம் தேதி உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கடற்கரையில் பெண் கடல்பசு ஒன்று காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுமார் 3 மீட்டர் நீளமும், 500 கிலோ எடையும் கொண்ட இந்த கடற்பசுவை மண்டபம் வன சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வன சரக ஊழியர்கள் உடல் கூறாய்வுக்கு பின் புதைத்தனர்.

இதற்கு மறுநாள் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுமார் 3 அடி நீளம் கொண்ட டால்ஃபின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்நிலையில் நேற்று காலை ஏர்வாடியை அடுத்துள்ள வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் சுமார் 7 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் வன துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய டால்ஃபின்.

இதையடுத்து அங்கு சென்ற கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி வனச்சரக அலுவலர்கள் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை ஆய்வு செய்தனர். ஆழ்கடல் பகுதியில் வாழக்கூடிய நீல திமிங்கல வகையை சேர்ந்த இந்த பெண் திமிங்கலம் சுமார் 20 அடி நீளமும், 7 டன் எடையுடன் கூடியது. 40 வயது மதிக்கதக்க இந்த திமிங்கலத்தின் முகப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்து கரை ஒதுங்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. பெரிய கப்பலிலோ அல்லது தீவுப்பகுதிகளுக்கு இடையே காணப்படும் பாறைகளிலோ மோதியதல் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தினை டிராக்டர்கள் மூலம் கயிறு கட்டி இழுத்து வந்து உடல் கூறாய்வுக்கு பின் அப்பகுதியிலேயே பெரிய பள்ளம் தோண்டி புதைத்தனர்.



source https://www.vikatan.com/news/animals/in-ramanathapuram-giant-blue-whale-dead-and-found-near-valinokkam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக