எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
மேற்கண்ட திருக்குறளோடும் `அரியர் மாணவர்களின் அரசனே' என்ற வாசகத்தோடும் ஈரோடு மாவட்டத்தில் அரியர் வைத்திருந்த மாணவர்களின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று, 'மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே - தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு' என்கிற பெயரில் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வெளிவந்தது. இது மட்டுமல்ல அரியர் வைத்திருக்கும் மாணவர்களின் வாட்ஸப் டிபி-க்களிலும் கடந்த இரண்டு நாள்களாக எடப்பாடியே நிறைந்திருக்கிறார். வாட்ஸப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா ஸ்டோரி, ஃபேஸ்புக் மீம்ஸ், ட்விட்டர் போஸ்ட் என எல்லா தளங்களிலும் எடப்பாடி புகழ்பாடும் பதிவுகளை அதிகம் காண முடிகிறது.
கடந்த ஜூலை 23-ம் தேதியன்று கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பட்டயப் படிப்புகள் ஆகியவற்றுக்கான படிப்புகளில் இறுதிப் பருவத்தில் பயின்று வரும் மாணவர்களைத் தவிர மற்ற பருவ மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்தது தமிழக அரசு. கொரோனா சூழல் காரணமாகத் தேர்வுகள் நடத்த இயலாது என்பதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் போது சில பல மீம்களைத் தட்டி மாணவர்கள் பலரும் எடப்பாடி புகழ் பாடினர்.
கடந்த 3 தினங்களுக்கு முன், ``கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பட்டயப் படிப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில் இறுதித் தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் அரியர் வைத்திருந்து அதை இந்த ஆண்டு எழுதக் கட்டணம் செலுத்தி இருந்தால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்படும்'' என்ற அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்குத்தான் தற்போது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
`கல்லூரி மாணவர்களின் வாக்குகளைச் சம்பாதிப்பதற்காகத்தான் இந்த அறிவிப்பு' என்று பலதரப்பினரும் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வரிடத்தில் கேள்வியெழுப்பட்டது. அதற்கு ``இது தேவையில்லாத கேள்வி'' என்று சொல்லிவிட்டு, அந்தத் தேவையில்லாத கேள்விக்கும் பதிலளித்திருந்தார் முதல்வர்...
மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால்தான் இந்த முடிவு என்கிறார் முதல்வர். கல்லூரியில் பயிலும் மாணவர்களாவது ஓரளவுக்கு மனஉறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குக்காக கவலைப்படும் ஆட்சியாளர்கள், 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே தீருவோம் என்ற சில வாரங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது. அப்போதைய சூழலில் மக்களுக்கு கொரோனா மீதான அச்சம் தற்போது இருப்பதை விட மிக அதிகமாகவே இருந்தது. கல்லூரி மாணவர்களைவிடப் மனதளவிலும் வயதளவிலும் சிறியவர்களான 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளை இரண்டு முறை தேதியை மாற்றி வைத்து, எப்படியாவது நடத்தியே தீருவோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. அதற்கு பல்வேறு தரப்பிலும் எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாக தேர்வுகளை ரத்து செய்தது. ஆனால், எந்தத் தரப்பும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அரியர் தேர்வுகளை அரசு ரத்து செய்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
பருவத் தேர்வுகளை ரத்து செய்ததில்கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தேர்ச்சி பெற இயலாத தேர்வுகளை (அரியர்) ரத்து செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அரியர் தேர்வுகளை உடனே நடத்த வேண்டும் என்ற அவசரமோ அவசியமோ ஒன்றுமில்லை. அடுத்த ஆண்டுகூட நடத்தியிருக்கலாம் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
கல்லூரி மாணவர்களின் மன உளைச்சல் குறித்துக் கவலைப்படும் முதல்வர், நீட் தேர்வெழுதும் மாணவர்கள் குறித்து எந்தவொரு கவலையும் கொண்டதாகத் தெரியவில்லை. அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இந்த மாதம் உயிரிழந்த கோவை மாணவி சுபஶ்ரீ வரை மன உளைச்சல் இல்லாமலா தற்கொலை செய்து கொள்ளத் துணிந்திருப்பார்கள். பெயரளவிற்கு உச்ச நீதிமன்றத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், நீட் விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவோ கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவோ தமிழக அரசு முன் வரவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லிக் கேட்கையில், தமிழக முதல்வர் தள்ளி வைக்கச் சொல்லி கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார்.
Also Read: ப்ளாஸ்டிக் பையில் டீ... சுமாரான இட்லி - இந்த உணவுக்கா 25 கோடி செலவு செய்கிறீர்கள் முதல்வரே?
தேர்வில், படித்ததையெல்லாம் நினைவில் கொண்டு வந்து எழுதவேண்டுமென்பதால் தேர்வறைக்குள் செல்வதற்கு முன் மாணவர்களுக்கு நிச்சயம் மன அமைதி தேவைப்படும். அந்த மன அமைதியைக் கெடுக்கும் வகையிலான பல சம்பவங்கள் தமிழகத்தில் நீட் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்டன. மாணவர்களின் சட்டை காலர், சட்டை கைகள் ஆகியவற்றைக் கத்தரித்தது, மாணவிகளின் நகைகளையும் செருப்புகளையும் கழட்டச் சொன்னது என்று பல்வேறு கூத்துகள் அரங்கேறின. மேலும், சில மாணவிகளுக்கு ஆடைகளைக் கழற்றி காண்பிக்கச் சொன்னது போன்ற கொடுமைகளும் நம் தமிழகத்தில்தான் அரங்கேறின. இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் எந்த வித கண்டனத்தையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்குச் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோதும்கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத தமிழக அரசு தற்போது மாணவர்களைப் பற்றிக் கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
அந்த அறிக்கையில், ``தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு (அரியர்) தேர்வெழுதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது விசித்திரமானது. பல்கலைக்கழகங்கள் கற்பனையாகத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதில்லை. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்புகளாகும். சிண்டிகேட், செனட், கல்விக்குழு என அதிகாரமிக்க அமைப்புகளின் வழிகாட்டுதல் படிதான் தேர்வுகள் நடத்தி மாணவர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும்.'' என்று குறிப்பிட்டிருக்கிறார் குருசாமி. மேலும் அந்த அறிக்கையில்...
புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்ததற்கு `2035-க்குள் இந்தியாவின் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தை (GER) 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்' என்பதையும் ஒரு காரணமாக மத்திய அரசு குறிப்பிடுகிறது. தற்போது இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 26 சதவிகிதம். அதே தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதமானது 49 சதவிகிதம். இவ்வளவு ஏன் வல்லரசு நாடான அமெரிக்காவின் உயர் கல்வி சேர்க்கை விகிதமே 41 சதவிகிதம்தான்.
Also Read: `தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும்' - தமிழ்நாடு இதிலெல்லாம் எப்பவும் டாப்! #தமிழ்நாடுநாள்
2016-ம் ஆண்டு, NAAC (National Assessment and Accreditation Council), நாடு முழுவதும் உள்ள 2,734 உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையின் படி, உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் கல்லூரி, மேலாண்மைக் கல்லூரி, பல்கலைக்கழகம் எனத் தனித்தனியே டாப் 25 பட்டியலை வெளியிட்டது NAAC. இதில், தமிழ்நாட்டிலிருந்து முதல் 25 இடங்களுக்குள் 4 பொறியியல் கல்லூரிகளும், 3 மேலாண்மைக் கல்லூரிகளும், 2 பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி உயர்கல்வியில் பலவித சாதனைகளை அசாத்தியமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழகத்தில், `அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ்' என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி தரும் முடிவுதான் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பல்கலைக்கழக ஆசியர்கள் பலரும் தமிழக அரசின் இந்த முடிவைத் திரும்பிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. எனவே, தமிழக அரசின் இந்த முடிவு `மாணவர்களின் ஆதரவைத் திரட்டி அதனை வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளாக மாற்றும் முயற்சி' என்கிற குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
`இதில் எத்தனை ஓட்டுகள் வந்து விடப் போகிறது?' என்பது போன்ற கேள்விகளைச் சிலர் முன் வைக்கிறார்கள். `அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ்' என்ற அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு மகத்தானது. பேனர் வைக்கும் அளவுக்கு இந்த விஷயம் வந்திருக்கிறது என்பதை வைத்து இதனைப் புரிந்துகொள்ளலாம். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அநேகமானவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. இதன் மூலம் தேர்ச்சி பெற்ற 100 சதவிகித மாணவர்களும் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்துவிடுவார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால், அதில் 20 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றாலும் அது அ.தி.மு.க-வுக்கு பலம் தானே?
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், `இது கல்வித் தரத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்' என்று அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அறிக்கைவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ``கட்டணம் செலுத்தாத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்'' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அவர். இந்த அறிக்கை, `மாணவர்களின் ஆதரவு வாக்குகளாக மாற வாய்ப்பிருக்கிறது' என்ற கருத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.
Also Read: மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!
அதேநேரத்தில் இப்போதுள்ள மாணவர்கள் பலரும், ஒரு மனிதரை, அவர் செய்த குறிப்பிட்ட விஷயத்துக்காக மட்டுமே கொண்டாடுகிறார்கள். அவரே மற்றொரு நேரத்தில் தவறு செய்தால் அவருக்கெதிராக சமூக வலைதளங்களில் பொங்கி எழுவதற்கும் மாணவர்கள் தயங்குவதில்லை. எனவே, அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய அளவில் மாணவர்கள் ஆதரவு இருக்குமென்று சொல்லிவிட முடியாது.
``2021 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, தமிழக அரசு வேண்டுமானால் இப்படிச் செய்திருக்கலாம். ஆனால், மாணவர்கள் தெளிவானவர்கள். இந்த ஒரு விஷயத்துக்காக அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து விடமாட்டார்கள். தங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவரோ அவருக்குத்தான் மாணவர்கள் வாக்களிப்பார்கள். மக்களுக்கு நல்லாட்சி தரும் கட்சியைத்தான் மாணவர்கள் ஆட்சியில் அமர்த்த நினைப்பார்கள்'' என்று மாணவர்கள் பற்றி நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-governments-announcement-over-cancelling-arrears-exams-raises-various-questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக