Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கடினமான தேர்வு, அதிக இன்டர்ன்ஷிப் தொகை... வெளிநாட்டு மருத்துவப்படிப்பில் ஏன் இத்தனை சிக்கல்கள்?

மருத்துவப் படிப்பு... சாமான்ய குடும்ப மாணவர்களின் ஒரு தலைமுறை கனவு. பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள் ஏராளமாகக் கிளை பரப்பியுள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் மட்டும் இந்தியா முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து ஆண்டுக்கு ஏறத்தாழ 40,000 மாணவர்கள் மட்டும்தான் படிக்க முடியும். காரணம், மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் படிப்பு லாபநோக்கத்துக்கானதாக மாறிவிடாமல் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் வரையறைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வால் திறமையான ஏழை மாணவர்கள் பலருக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனவாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் விவாதங்களும் தற்போதுவரை தொடர்வது தனிக்கதை.

மருத்துவர்

அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதது, தனியார் கல்லூரியில் கோடிகளைக் கொடுத்து சீட் பெற முடியாதது, பணம் இருந்தும் தனியார் கல்லூரியில் படிக்கப் போதிய மதிப்பெண் இல்லாதது போன்ற காரணங்களால், ஆண்டுதோறும் பல்லாயிரம் மாணவர்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். அதில் கணிசமானோர் தமிழக மாணவர்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ரஷ்யா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் படித்துவிட்டு வரும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாகப் பணியாற்றுவதற்குள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் கொஞ்சமல்ல. இதுகுறித்து விவாதங்கள் அதிகம் உருவாகாத நிலையில், இதன் பின்னணியில் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுகிறார், ரஷ்யாவில் மருத்துவம் படித்தவரும் சென்னையின் பிரபல பொது மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் அருணாசலம்.

``இன்றைய ரஷ்யா, 1990-களுக்கு முன்புவரை சோவியத் ஒன்றியத்துக்குள் இருந்தது. அப்போதுதான் அங்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. அந்த நேரத்தில்தான் நானும் அங்கு மருத்துவப் படிப்பை முடித்தேன். பிறகு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த பின்னர், சில மாதங்களில் மருத்துவராகப் பணியாற்ற அனுமதி கிடைக்கும். இதுதான் அப்போதைய நடைமுறை. இந்தியா, இலங்கை, வங்காள தேசம், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளின் முன்னேற்றத்துக்காக அங்குள்ள மாணவர்களை வரவழைத்து, ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் படிக்கச் சிறப்பு வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுத்தனர். அங்கு படித்த பலரும் இன்று இந்தியாவில் சிறந்த மருத்துவர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

மருத்துவர்

இதற்கிடையே, சோவியத் ஒன்றியத்திலிருந்து ரஷ்யா தனி நாடாகப் பிரிந்த பிறகு, அங்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்தன. அவை குறைந்த கட்டணத்தில் தற்போதுவரை வெளிநாட்டு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை வழங்குகின்றன. இதனால் ரஷ்யா, சீனா போன்ற சில நாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்க முடியாத பட்சத்தில், டாக்டராவதையே இலக்காகக் கொண்ட மாணவர்கள் தங்கள் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப வெளிநாடுகளை நாடிச் செல்கின்றனர். அதில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, 2002 முதல் நம் நாட்டில் தகுதித்தேர்வு (screening test) வைக்கப்படுகிறது.

அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ கவுன்சில், மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆகிய மூன்று இடங்களில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே, ஹவுஸ் சர்ஜனாக ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்ய முடியும். இதற்கு அரசு மருத்துவமனைகளில் இன்டர்ன்ஷிப் செய்யவே பல லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தொகை தனியார் மருத்துவமனைகளின் தரம், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இன்னும் பலமடங்கு கூடும். ரஷ்யா, சீனா போன்று மருத்துவப் படிப்புக்குக் குறைவான கட்டணம் நிர்ணயித்திருக்கும் சில வெளிநாட்டுக் கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சாமான்ய குடும்பத்தினர். அவர்களால் இவ்வளவு தொகையை எப்படிச் செலுத்த முடியும்? இந்தக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் ஏராளமான மாணவர்கள் டாக்டராகும் கனவையே கைவிட்டு வேறு வேலைக்குச் சென்றுள்ளனர்.

மருத்துவர்

`ஏன் இவ்வளவு தொகையைக் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறார்கள்?', `காரணம் இல்லாமல் நிர்ணயித்திருப்பார்களா?' என்ற கேள்விகள் பொதுமக்களுக்கு எழலாம். `ரஷ்யா போன்ற சில நாடுகளில் குறைவான கட்டணத்தில் மருத்துவம் படிப்பதால் அம்மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதில்லை; அம்மாணவர்களுக்கு மருத்துவர்களாகப் பணியாற்ற உரிய தகுதிகள் இருப்பதில்லை’ என்ற மேம்போக்கான காரணங்கள் இந்தியாவில் முன்வைக்கப்படுகின்றன. அந்த வாதத்துக்கே வருகிறேன். அவர்கள் குறிப்பிடும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு மத்திய அரசுதானே தகுதித்தேர்வு (screening test) வைக்கிறது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தானே இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்கிறார்கள். அப்படித் தேர்வு செய்யப்படும் தகுதியான மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கட்டச் சொல்லி ஏன் சுமைகளைக் கொடுக்க வேண்டும்?" என்று அழுத்தமான வாதங்களை முன்வைக்கும் அருணாசலம், இந்த விஷயத்தின் பின்னணியில் தனக்கிருக்கும் சில சந்தேகங்களையும் முன்வைக்கிறார்.

மருத்துவர் அருணாசலம்

``அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சில நாடுகளுக்கும் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் செல்கிறார்கள். படிப்பை முடித்ததுமே அவர்களை நம் நாட்டில் மருத்துவர்களாக உடனே அங்கீகரித்து மருத்துவராகப் பணியாற்றவும் அனுமதியளிக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் பணியாற்ற எந்தத் தகுதித் தேர்வும் நடத்தப்படுவதில்லை. அந்த நாடுகளில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வசதியானவர்கள்தாம் அந்த நாடுகளுக்குப் படிக்கச் செல்ல இயலும் என்பதால், அந்த நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

அதேநேரம், குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் ரஷ்யா போன்ற சில நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்திப் படிப்போரின் எண்ணிக்கையும் ஆர்வமும் குறைகிறது. எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்தே இந்தியாவில் மருத்துவத் துறையில் நடுநிலைத்தன்மையற்ற சில செயல்கள் வெளிப்படையாக நடக்கின்றன.

மருத்துவர்

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கான தகுதித்தேர்வு, entrance மற்றும் eligibility என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கி நடத்தப்படுகிறது. eligibility பிரிவில், இளநிலை மருத்துவப் படிப்பை முடித்து மேற்படிப்புக்குத் தயாராகும் மாணவர்கள் எழுதும் நுழைவுத்தேர்வுக்கு இணையாகக் கடினமான பாட முறையில் (syllabus) கேள்விகளைக் கேட்கிறார்கள். இதனால், அந்தத் தேர்வெழுதும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதையும்மீறி திறமையான மாணவர்கள் அந்தத் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால், அடுத்த முட்டுக்கட்டையாக இன்டர்ன்ஷிப்புக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் அந்த மாணவர்கள் பொருளாதார நெருக்கடியுடன் அதிக மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் மூலம்தான் ஏராளமான பொதுமக்களுக்கு அடிப்படையான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. எனவே, இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஹவுஸ் சர்ஜனாக இன்டர்ன்ஷிப் செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை ரஷ்யா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் படித்து வந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கெல்லாம் முறையான வழிமுறைகள் மற்றும் காரணங்களை அரசு வெளிப்படையாக இதுவரை முன்வைக்கவில்லை.

இந்தியாவில் இருந்து ரஷ்யா, சீனா போன்ற சில நாடுகளுக்குச் சென்று குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கும் எண்ணம்தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். இத்தனை புறக்கணிப்புகளுக்கும் நான் முன்வைக்கும் முக்கிய காரணமும் இதுதான். இதுகுறித்து இதுவரை யாருமே பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை, குரல் கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமானது" என்கிறார் ஆதங்கத்துடன்.



source https://www.vikatan.com/news/education/issues-which-are-faced-by-indian-students-who-studies-medical-studies-in-russia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக