கோவை மாவட்டம் காரமடை அருகே, கெம்பனூர் கிராமத்தில், கடந்த ஜூன் 25-ம் தேதி, அனிதா என்ற பள்ளி ஆசிரியர் வீட்டுக்குள் 4 பேர் கொண்டு கும்பல் நுழைந்தது. அந்தக் கும்பல் அனிதாவை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, தங்கத் தாலி மற்றும் தங்க வளையல், தங்கக் கம்மல் உள்பட 9 1/4 சவரன் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக, அனிதா போலீஸில் புகாரளித்திருந்தார்.
Also Read: கோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...!’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி
விசாரணையில், அனிதா கணவர் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகரின் சகோதரர் நட்ராஜ் இடையே சொத்துப் பிரச்னை இருந்துள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கிற சரவணக்குமார் என்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலை நாகராஜ் அணுகியுள்ளார்.
இதுதொடர்பாக, சரவணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், காரமடை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பல்சர் வாகனத்தை சோதனை செய்ததில் அது திருட்டு வாகனம் என்பதை உறுதி செய்தனர். அந்த வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, அனிதா வீட்டுக்குள் புகுந்து, மிரட்டி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் சிறுமுகை பகுதியில் முஸ்தா என்பவரின் பர்னிச்சர் குடோன் உடைக்கப்பட்டு, பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. முஸ்தா மற்றும் அவரது மனைவி கதீஜாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கதீஜா, சரவணனை அணுகியுள்ளார். அப்படித்தான் முஸ்தாவின் பர்னிச்சர் குடோனை சரவணன் உடைத்து காலி செய்துள்ளார்.
Also Read: கோவை: உள்ளாடைகளில் 6 பாக்கெட்கள்... `Paste form’ முறையில் தங்கம் கடத்தல்! - சிக்கிய தம்பதி
இந்த இரண்டு வழக்குகளிலும் சரவணன்தான் முக்கிய குற்றவாளி. விஷ்வ இந்து பரிஷத், கோவை வடக்கு மாவட்டச் செயலாளரான சரவணன், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு கோவை சி.பி.எம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சரவணன் லண்டனில் உயர்கல்வி பயின்று திரும்பியுள்ளார்.
இதையடுத்து, இந்த இரண்டு வழக்குகளிலும் சரவணன், ஆறுமுகம், ரவி, ஆனந்தராஜ், பிரேம்குமார், மூர்த்தி, சின்ன சரவணன், நாகராஜ் ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் சரவணன் உள்ளிட்ட சிலர் வி.ஹெச்.பி-யைச் சேர்ந்தவர்கள் என்பதும், சிலர் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/coimbatore-vhp-district-secretary-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக