தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த வீரலட்சுமி. தற்போது சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.
இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். வீரலட்சுமியின் கணவரும் கார் ஓட்டுநராகத்தான் பணியாற்றிவருகிறார். கார் ஓட்டுநராக இருந்த வீரலட்சுமிக்கு, நீண்டநாளாக, `ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்ற வேண்டும்’ என்ற ஆசை இருந்துவந்திருக்கிறது.
கொரோனா பேரிடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்தப் பணிக்காக விண்ணப்பம் செய்து காத்திருந்திருக்கிறார். இதையடுத்து கடந்த மாதம் முதல் சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
கடந்த ஒரு மாத காலமாக, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உட்பட பல நூறு நோயாளிகளைத் தனது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் 1,005 ஆம்புலன்ஸ்களுடன் 500 புதிய `108' ஆம்புலன்ஸ்கள் தமிழக அரசு வாங்கியிருக்கிறது. இதன் முதற்கட்டமாக, தமிழக அரசு இன்று 118 புதிய `108' ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கிவைத்தது.
Also Read: ஊரடங்கில் முதன்முறை... கோவை டு மங்களூர்! - மருத்துவ சிகிச்சைக்குப் பறந்த ஏர் ஆம்புலன்ஸ்
தற்போதுவரை சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றிவந்த வீரலட்சுமி, இன்று முதல் அரசு வழங்கியுள்ள புதிய ஆம்புலன்ஸில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றவிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய வீரலட்சுமி, ``ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆக வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. கடந்த மாதம் முதல் இந்தப் பணியைச் செய்துவருகிறேன். ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றுவது மிகவும் மனநிறைவாக இருக்கிறது. இந்த வேலையில் எந்தவிதச் சிக்கலும் பயமும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/ambulance-driver-veera-lakshmi-speaks-about-her-profession
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக